வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (09/05/2017)

கடைசி தொடர்பு:13:18 (09/05/2017)

“மதுவை எதிர்க்கும் மக்கள் அடிவாங்குவதை ரசிக்கிறதா அரசு?" கொதிக்கும் நந்தினி

நந்தினி

துக்கடைகளுக்கு எதிரான  போராட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெடிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் மக்கள் தன்னெழுச்சியோடு போராட களம் குதித்திருக்கும் நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக பூரண மது விலக்கு வேண்டி அகிம்சை வழியில் போராடிக்கொண்டிருக்கும் மது ஒழிப்புப்போராளி நந்தினியிடம் பேசினோம்.

“பல வருடங்களாக மக்கள் அரசிடம் டாஸ்மாக் கடைகளை நீக்கக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், மதுவிலக்கு என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அரசியல் செய்வதையே நோக்கமாகக்கொண்டிருந்த ஆட்சியாளர்கள் மக்களுடைய கோரிக்கையை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏன் இன்னும் கடைகளை மூடவில்லை என்று கேட்கும்போதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக மூடுகிறோம் என்றும் மதுக்கடைகள் மூலம் வருமானம் குறைவாகதான் வருகிறது என்று சொல்லியும் இழுத்தடிக்கொண்டேதான் இருந்தார்கள். 

மதுவுக்கு எதிரான போராட்டம்

ஆனால், இவர்கள் சொல்வதையெல்லாம் எத்தனை காலம்தான் மக்களும் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்குள்ளேயே குழுறிக்கொண்டிருந்தவர்கள் இப்போது களத்தில் குதித்துவிட்டார்கள். நான் கடந்த ஐந்த வருடங்களாக என் அப்பாவோடு சேர்ந்து சட்டப்படி போராடிக் கொண்டிருக்கிறேன். நாங்கள் எப்போதெல்லாம் களத்தில் இறங்குகிறோமோ அப்போதெல்லாம் காவல்துறையின் அடக்குமுறை எங்கள்மீது பாயும். பொதுவெளியில் துண்டுச் சீட்டைக் கூட கொடுக்க விடமாட்டார்கள். அமைச்சர்களோ அல்லது முதல்வரோ மதுரைக்கு வந்தால் எங்களை வீட்டிற்குள்ளேயே அரெஸ்ட் பண்ணி வைத்துவிடுவார்கள். போராடக்கூடாது என்று சொல்லி என் கண் எதிரிலேயே அப்பாவைப் போட்டு அடித்திருக்கிறார்கள். அப்பாவுக்கு விழும் அடியைப் பார்த்து நான் பின்வாங்கிவிடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கிருக்கலாம். ஆனாலும்கூட  நான் போராட வேண்டும் என்பதில் மட்டுமேதான் உறுதியாக இருந்திருக்கிறேன். எங்களை எந்த அளவிற்கு காவல்துறையினர் கொடுமை செய்தார்களோ அதேபோலத்தான் மக்களையும் அடக்க முயற்சிக்கிறார்கள். திருப்பூரில் போராடிய பெண்ணை நடுரோட்டில் வைத்து அடித்தபோதே காவல்துறை எல்லை மீறிவிட்டது.

நந்தினி

மக்கள் இவ்வளவு தூரம் வெளியே வந்து போராட ஆரம்பித்து அடி, உதை வாங்குவதை ஆட்சி பீடத்தில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருக்கிறது அதிமுக அரசு. அவர்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லை. இதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்கள் தூண்டிவிடுகிறார்கள் என்றும், மதுக்கடைகளை கருணாநிதிதான் கொண்டு வந்தார் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை யோக்கிவானாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை இன்னும் எத்தனை காலத்திற்குதான் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால், இதையெல்லாம் இனி மக்கள் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள். இப்போதிருக்கும் இந்தப் போராட்ட குணத்தை மக்கள் எக்காரணம் கொண்டும் விட்டுவிடக்கூடாது.

நந்தினி தன் அப்பாவுடன் போராட்டத்தில்

மதுவுக்கு எதிராக போராடும்போது நாம் யாருக்காகவும் பயப்படத்தேவையில்லை. அப்படிப் போராடும் மக்கள் மீது பல வழக்குகளை போட்டு அவர்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நான் மக்களிடம் நேரில் சென்று ஐபிசி பிரிவு 328 ன்படி டாஸ்மாக்தான் குற்றம் அதை அடித்து நொறுக்கினால்கூட சட்டவிரோதம் அல்ல என்பதைச் சொல்லி தொடர்ந்து அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுள்ளதை விட மதுவுக்கு எதிரான போராட்டம் இன்னும் தீவிரமடைய வேண்டும். அரசியல்வாதிகளுக்கும் சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையின் அடக்குமுறையை எதிர்த்து நமது பலத்தை நிரூபிக்க வேண்டும். எல்லாவற்றையும் மீறி இந்த அரசானது மீண்டும் மக்கள் மீது தனது அதிகாரத்தைக் காட்டத் துணிந்தால் சீனாவில் அபினுக்கு எதிராக எப்படி புரட்சி ஏற்பட்டதோ அதேபோன்றதொரு புரட்சியை விரைவில்  தமிழகம் சந்திக்கும் என்பது உறுதி.


டிரெண்டிங் @ விகடன்