வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! உயர்நீதிமன்றத்தில் முறையீடு | Vadapalani apartment fire :Traffic Ramasamy appealed in High Court

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (09/05/2017)

கடைசி தொடர்பு:12:30 (09/05/2017)

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து! உயர்நீதிமன்றத்தில் முறையீடு

வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி முறையிட்டுள்ளார்.

சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோயில் தெருவிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில், நேற்று அதிகாலை கீழ்த் தளத்தில் ஏற்பட்ட தீ, மளமளவெனப் பரவியது. இதில், இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து எலும்புக்கூடாயின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் என்பதால், உறங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில், ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மீனாட்சி, செல்வி, சாலினி, சிறுவன் சஞ்சய் ஆகியோர் உயிரிழந்தனர். தீக்காயம் அடைந்த ஐந்து பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்த தீ விபத்துகுறித்து வடபழனி காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், மின்சாரப் பெட்டியில் ஏற்பட்ட தீ, பிறகு இருசக்கர வாகனங்களுக்குப் பரவியது தெரியவந்துள்ளது. இதனிடையே, சென்னை வடபழனியில் தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், முறையான அனுமதி இல்லை என்றும், உரிய அங்கீகாரம் இல்லாததால் கடந்த ஆண்டு சீல் வைக்கப்பட்டது என்றும் சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

இந்த நிலையில், வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று முறையிட்டார். 'அவசர வழக்காக நீதிமன்றமே முன்வந்து விசாரிக்க வேண்டும்' என்று அவர் கோரிக்கை வைத்தார். அப்போது, விடுமுறை கால அமர்வை அணுக டிராபிக் ராமசாமிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.