சாதிக் பாஷா வரிசையில் சுப்ரமணியன் மரணமா? - அறப்போர் எழுப்பும் சந்தேகம் | What is the Mystery behind TN Health Minister Vijayabaskar aide's dead

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (09/05/2017)

கடைசி தொடர்பு:13:44 (09/05/2017)

சாதிக் பாஷா வரிசையில் சுப்ரமணியன் மரணமா? - அறப்போர் எழுப்பும் சந்தேகம்

விஜயபாஸ்கர்

மிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்ரமணியன் நாமக்கல்லில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. பின்னர்அது தற்கொலை என்று சொல்லப்பட்டது. இதற்கிடையில் அவருடைய மரணத்தைச் சுற்றி பல்வேறு சந்தேக வளையங்கள் சுழல ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், 'சுப்ரமணியத்தின் மரணத்தில் மறைந்துள்ள உண்மைகளை வெளியே கொண்டு வரவேண்டும்' என்று சாட்டையை சுழற்ற ஆரம்பித்துள்ளது அறப்போர் இயக்கம்.

ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனை வளையத்துக்குள் விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களையும் கொண்டு வந்தனர் வருமானவரித்துறையினர். இதன் அடிப்படையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விஜயபாஸ்கரின் நண்பரான சுப்ரமணியன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பணம் பட்டுவாடா தொடர்பான ஆவணங்களையும், பணத்தையும் கைப்பற்றியதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். வருமானவரித்துறையின் இந்த சோதனை விஜயபாஸ்கருக்கு மட்டும் அல்ல... அ.தி.முக அமைச்சர்களுக்கே மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருந்தது. வருமானவரித்துறையின் அடுத்த இலக்கு யார்? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு வைபவம், இரட்டை இலைச் சின்னத்தைப்பெற பேரம் பேசியதாக தினகரன் கைது என அரசியல் களத்தின் பரபரப்புகள் திசை மாறியதால், விஜயபாஸ்கரின் வருமானவரித்துறை சோதனை விவகாரம் சற்று தணிந்திருந்தது.

சுப்ரமணியன்

வருமானவரித்துறைஅதிரடி!

இந்த நிலையில், விஜயபாஸ்கரின் நண்பரான ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்தவரான சுப்ரமணியன் அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல், பொதுப்பணித்துறையின் பெரும்பாலான அரசு கட்டிடப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்துகொடுப்பவர் என்று கூறப்படுகிறது.முக்கிய புள்ளிகளுக்கு நெருக்கமாக இருந்த சுப்ரமணியன் உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.''ஊழல் குற்றச்சாட்டுகள்,வருமானவரித்துறை சோதனை, சி.பி.ஐ விசாரணை என்ற நிலை வரும்போது எல்லாம் சாட்சிகளாக இருக்கக் கூடியவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற சம்பவங்களில் உண்மைகளை போலீசார் பொதுவெளிக்கு கொண்டுவருவதில்லை. 2 ஜி முறைகேடு வழக்கில் சாதிக் பாஷா மரணத்தில் என்ன  சொல்லப்பட்டதோ அதுவே தற்போது விஜயபாஸ்கரின் நண்பரின் மரணத்திலும் சொல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சுப்ரமணியன் மரணத்தில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. விஜயபாஸ்கரிடம் சோதனை நடந்தபோது சுப்ரமணியன் வெளிநாட்டில் இருந்துள்ளார்.

விஜயபாஸ்கரிடம் விசாரணை 

அவர் தமிழகம் திரும்பியதும் அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 10 நாட்களாக இந்த விசாரணை நடந்துள்ளது. அதில், உண்மையை சொல்லும்படி அதிகாரிகள் அழுத்தம் கொடுத்திருக்கலாம். மற்றொரு புறம் உண்மையைச்ஜெயராமன் வெங்கடேசன் சொல்லக்கூடாது என்று அழுத்தம் இருந்திருக்கலாம் என்கிறார்கள். எனவே கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்டறிய போலீசார் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் வருமான வரித்துறை நடத்திய சோதனைகள் மற்றும் விசாரணை குறித்த உண்மையான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வருமான வரித்துறை மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்'' என்றார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அழுத்தமா?

சுப்ரமணியத்தின் மரணம் குறித்து நாமக்கல் காவல்துறை தரப்பில் பேசியபோது, ''வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்திய போது வெளிநாட்டில் இருந்துள்ளார் சுப்ரமணியன். அவருடைய பிள்ளைகள் மற்றும் மனைவி மட்டுமே அப்போது இருந்துள்ளனர். அதிக நாட்கள் நாமக்கல்லில் அவர் இருக்கமாட்டார். பெரும்பாலும் சென்னையில் தான் இருப்பார்.

சோதனையின்போது சுப்ரமணியன் இல்லாத காரணத்தால், அவர் தமிழகம் திரும்பியதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். அதே நேரத்தில் சுப்ரமணியன் நேர்மையான மனிதர் என்று சொல்லிவிட முடியாது. எதுவாக இருந்தாலும் முழு விசாரணை முடிந்தால்தான் தெரிய வரும்'' என்றனர்.

வலுத்துள்ள சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க வேண்டியது வருமான வரித்துறை - காவல்துறையின் கடமை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்