வெளியிடப்பட்ட நேரம்: 15:43 (09/05/2017)

கடைசி தொடர்பு:15:41 (09/05/2017)

சுவாசித்தாலே வியாதி..! பதறவைக்கும் சிமென்ட் ஆலை

தமிழகத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக வெயிலின் தாக்கம் 107,109 டிகிரியென மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டதைவிட அரியலூர் மாவட்டத்தில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதோடு, பலருக்கு அம்மை நோய் தாக்கவும் ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம் சிமென்ட் ஆலைகள்தான் என்று குமுறுகிறார்கள் மக்கள். சுண்ணாம்பு சுரங்கங்களை முறைப்படுத்தவேண்டும்; அம்மை நோயிலிருந்து எங்களைக் காக்கவேண்டும்  என்று கலெக்டரிடம் புகார் கொடுக்க இருக்கின்றனர் மக்கள் சேவை இயக்கத்தினர். 

small pox
 

சிமென்ட் ஆலையால் ஏன் அம்மை நோய் வருகிறது என்று மக்கள் சேவை இயக்கத்தின் தலைவர் தங்கசண்முகசுந்தரத்திடம் பேசினோம். ”எங்கள் மக்கள் சிமென்ட் ஆலைகளால் தினம்தினம் சாகிறார்கள். இப்போது ஏற்பட்டுள்ள கடும் வெயிலால் இப்பகுதி மக்கள்  அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் இங்குள்ள சிமென்ட் ஆலைகள்தான். அரியலூர் மாவட்டத்தில்  9 சிமென்ட் ஆலைகள் உள்ளன. அதற்கு சொந்தமாக 166க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் மரங்களே இருக்காது. ஏனென்றால் சுண்ணாம்புக்கல் சுரங்கம் தோண்டுவதற்காக மரங்களை வெட்டி விடுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சுண்ணாம்பின்  தன்மையே வெப்பத்தை வாங்கி வைத்துக்கொள்வதுதான். சிமென்ட் தயாரிக்க சுண்ணாம்புக்கல்லை வெட்டியெடுக்கும்போது அதிக அளவிலான வெப்பத்தை வெளியிடுவதோடு வீரியத்தன்மை மிக்க பலகதிர்கள் வெளிப்படும். அது மனிதர்கள் சுவாசிக்கும்போது அம்மை நோய், தோல் நோய், புற்றுநோய் போன்ற பல விதமான வியாதிகளும் ஏற்படுகிறது. மற்ற ஊர்களில் வரும் அம்மை நோய்க்கும், இந்த ஊரில் வரும் அம்மை நோய்க்கும் வித்தியாசம் உண்டு. சின்னதா கொப்பளம் போல் வரும். அது பெரியதாகி உடைந்து அந்த கொப்பளத்திலிருந்து வரும் நீர் உடலில் எல்லா இடத்திலும் பரவத்தொடங்கும். அதேபோல், கடந்த  2011- 2012 காலக்கட்டத்தில் அம்மை நோயால் 5 பேர் இறந்துள்ளனர். 2013-ம் ஆண்டு மூன்று பேர் இறந்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மை நோய் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், இப்போது பழையபடி அம்மை நோய் பரவத் தொடங்கியுள்ளது. புதுப்பாளையம், மண்ணொளி, பெரியநாகலூர், காட்டுப்பிரிங்கம், முனியங்குறிச்சி என சில கிராமத்தில் அம்மைநோயால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு தோல் நோய் வந்துள்ளது. அதை அம்மை நோய் என நினைத்து வருடக் கணக்காக வீட்டு வாசலில் வேப்பிலையை கட்டிவைத்திருக்கிறார். நான் அவரிடம் எடுத்துச்சொல்லி மருத்துவரிடம் போகச்சொன்னேன் பின்பு அவரும் மருத்துவரிடம் சென்று சரிசெய்துவந்துள்ளார்.

இப்பகுதியில் படிப்பறிவு இல்லாத மக்கள் அதிகம். எந்த நோய்க்கு யாருகிட்ட மருத்துவம் பார்க்க வேண்டுமெனக் கூடத்தெரியாது. நீங்களே பாருங்கள், அம்மை நோய் வந்தால் வேப்பமரத்துக்கு தண்ணி ஊத்தவும் வேப்பிலைகளை கட்டவும் நினைக்கிறார்கள். மருத்துவரிடம் செல்வதில்லை. இந்த நிலையை போக்க வேண்டும். மக்களிடையே போதிய விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு தனியாக குழு ஒன்றை அமைத்து  மற்ற மாவட்டங்களைவிட அம்மை நோய்க்கு இந்த மாவட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் வரைமுறையில்லாமல் சுண்ணாம்புச் சுரங்கங்களை வெட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இல்லையேல், மக்களைத் திரட்டி மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த போகிறோம்" என்று கூறினார்.

இந்த தகவல் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசினோம். ''நீங்கள் சொல்லும் தகவல் இப்போதுதான் எனக்கு வந்தது. உடனடியாக ஒரு ஆய்வுக் குழுவை அமைக்கிறேன். மக்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அம்மாவின் அரசு செய்யும். மக்கள் அச்சப்படதேவையில்லை" என்றார்.

- எம்.திலீபன்