வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (09/05/2017)

கடைசி தொடர்பு:16:41 (09/05/2017)

"வளர்ப்புப் பிராணிக்கும் பெண்களுக்குமான அன்பு அலாதியானது''- புகைப்படக் கலைஞரின் புது முயற்சி!

பெண் தன் வளர்ப்பு நாயுடன்

அன்னையர் தினம் அன்று உலகின் பல இடங்களிலும் அன்னையர்களைக் கொண்டாடும் வகையிலான செயல்பாடுகளை பலரும் செய்து வருகின்றனர். அவற்றில் ஓர் அங்கமாகவும் புது முயற்சியாகவும், பெண்களுக்கும் அவர்களின் வளர்ப்பு நாய்க்குமான சிநேகத்தை போட்டோ எடுத்து அசத்தியிருக்கிறார் பெங்கரூருவைச் சேர்ந்த பெட் அனிமல்ஸ் போட்டோகிராஃபரான அசோக் சிந்தாலா. தன் புது முயற்சியை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்...

"ஐ.டி வேலை ஒருபக்கம், ஃபோட்டோகிராபி மறுபக்கம்னு சுழன்டுட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல நிறைய செல்லப் பிராணிகளை புகைப்படம் எடுக்கும் சூழல் உருவாச்சு. தொடர்ந்து பெட் அனிமல்ஸ் மேல பிரியம் அதிகமாகி ரெண்டு நாய்களையும் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படியே பெட் அனிமல்ஸ் என்.ஜி.ஓ-கள் மற்றும் அமைப்புகளின் நட்பு கிடைச்சு, அவங்களுக்காக 2015-ம் வருஷத்துல இருந்து இலவசமா நாய்கள் மற்றும் பூனைகளை போட்டோஸ் எடுத்துக் கொடுக்க ஆரம்பிச்சேன். இப்படி நான் எடுத்த பெட் அனிமல்ஸ் போட்டோக்களைப் பார்த்த நிறைய பேர், அதை தத்தெடுத்தது உத்வேகம் தந்தது. இதுக்காகவே இந்தியாவின் பல பகுதிகளுக்கு வார விடுமுறை நாட்கள்ல போய் புகைப்படம் எடுக்கிறதை வழக்கமா வைச்சுகிட்டேன். இதுல ஒரு அம்சமா, சிறப்பு தினங்களோட வளர்ப்பு பிராணிகளை இணைச்சு புகைப்படம் எடுக்கிற கான்சப்டை கண்டுபிடிச்சேன்.

இந்த முயற்சி எனக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்துச்சு. குறிப்பா 2015-ம் வருஷத்தின் இறுதியில சென்னையில வெள்ளம் வந்த சமயத்துல நிவாரணத்துக்கு நிதி திரட்ட ஒரு காலாண்டர் வெளியிட முடிவுசெஞ்சேன். அதுக்காக 'பெட் அண்ட் பெட் ஃபேமிலிஸ்'ங்கிற கான்செப்ட்டுல பலரையும் போட்டோஸ் எடுத்தேன். அப்போ பெண்கள் தங்களோட வளர்ப்பு நாய்கள் மேல அலாதியான அன்பு வெச்சிருந்ததைப் பார்த்து ரொம்பவே வியந்தேன். அந்த அன்பு தங்களோட குழந்தைகளுக்கு கொஞ்சமும் குறைவில்லாமலும், சில இடங்கள்ல குழந்தைகள் மேல இருப்பதைவிடவும் அதிகமாவும் இருந்துச்சு. தொடர்ந்து பலரும் தங்களோட வளர்ப்பு நாய்களோடு போட்டோ எடுத்துக்கொடுக்கச் சொல்லி கூப்பிட்டாங்க. தவிர, நாய் வளர்க்கும் நிறையப் பெண்கள் இல்லத்தரசிகளா இருக்காங்க. கணவரை வேலைக்கும், குழந்தைகளை ஸ்கூலுக்கும் அனுப்பின பிறகு தங்களோட முழு நேரத்தையும் செல்லப் பிராணிகளோடதான் கழிக்கிறாங்க. .

தனது வளர்ப்பு நாய்களுடன் அசோக் சிந்தாலா

 

அதுவும் தங்களோட உடல்நலம், அழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்துல கொஞ்சம் குறைவில்லாத அளவுக்கு கவனிப்புகளை செய்றாங்க. அப்படி தினமும் குளிக்க வெக்கிறது, மசாஜ் சென்டர் கூட்டிட்டுப் போறது, சலூன் கூட்டிட்டுப் போறது, பிறந்த நாள் கொண்டாடுறது, ஹெல்தியான உணவுகளை பார்த்துப் பார்த்துக் கொடுக்கிறதுன்னு அவங்களே பெற்ற குழந்தை மாதிரி நாயை கவனிச்சுக்கிறதை பார்த்து ரசிச்சிருக்கேன்" என்பவர் அந்த ரசிப்பில் இருந்து புதுவிதமான கான்செப்டை உருவாக்கி, 'அம்மா-பிள்ளை' உறவைப் போல பெண்களையும் அவர்களின் நாய்களையும் போட்டோ எடுக்க ஆரம்பித்துள்ளார்.

வளர்ப்பு நாயுடன் பெண்

"நான் பார்த்து ரசிக்க விஷயங்களை அடிப்படையா வெச்சு, மனிதர்கள் தங்களோட நாய்மேல வெச்சிருக்கும் குழந்தைக்கு இணையான பாசத்தை 'அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம்'னு பல கான்செப்ட்டுல போட்டோஸ் எடுக்க முடிவெடுத்தேன். அதுப்படி என்னோட ஃபேஸ்புக் பேஜ்ல, ஆர்வம் இருக்கிறவங்க என்னை அணுகுவாங்க. அவங்க விருப்பப்படி போட்டோஸ் எடுத்துக்கொடுப்பேன்.  இந்த வருஷம் வரும் 14-ம் தேதி அன்னையர் தினம் வர இருப்பதால, நேற்றும், நேற்றைக்கு முன்தினமும் பெண்களை அவங்களோட நாய்களுடன் போட்டோஸ் எடுத்துக்கொடுத்தேன். போன வருஷத்தைத் தொடர்ந்து, இந்த வருஷமும் நிறைய பேருக்கு போட்டோஸ் எடுத்துக்கொடுத்திருக்கேன்.

வளர்ப்பு நாயுடன் பெண்

தங்களோட வளர்ப்பு நாயுடன் கொஞ்சுறது, பேசுறது, விளையாடுறதுனு அவங்க செய்யும் விஷயங்களை எதேர்ச்சையான, இயல்பான விதத்துல, அவங்க விருப்பப்படுற மாதிரி போட்டோஸ் எடுத்துக் கொடுப்பேன். அந்த தருணங்கள் ரொம்பவே எமோஷனலா இருக்கும். இப்படி புதுமையான முறையில தங்களோட பெட் அனிமல்ஸூக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், அதன் மூலமா தங்களோட கவலைகளையும் மறக்கிறதா சொல்லுவாங்க. இந்த மாதிரி போட்டோ எடுக்க ஆசைப்படுறவங்க இளம் வயதுப் பெண்கள் தொடங்கி, வயதான பெண்கள் வரைக்கும் இருக்கிறாங்க. தொடர்ந்து நான் எடுத்துக்கொடுக்கும் போட்டோஸை தங்களோட வீட்டுல ஃப்ரேம் செஞ்சு வெச்சு நிறையப் பெண்கள் ரசிக்கிறாங்க. என்னோட பெரும்பாலான நேரத்தை வளர்ப்புப் பிராணிகளுடன் செலவழிப்பது எனக்கும் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது" என்கிறார் அசோக் சிந்தாலா. அவருடைய ஆல்பங்களைப் பார்க்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

அம்மா பிள்ளை உறவுக்கு இணையானது... பெட் அனிமல்ஸ் - பெண்களின் சிநேகம்!

 


டிரெண்டிங் @ விகடன்