விஜயபாஸ்கர் நண்பரை பற்றி மு.க.ஸ்டாலின் பகீர் தகவல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் பலமணி நேரம் விசாரித்துள்ள நிலையில், திடீரென்று பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கரின்  நண்பர் சுப்பிரமணியன் பற்றி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆர்.கே.நகர் புகழ்” சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு நெருக்கமான காண்டிராக்டர் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று கூறுவது அறவே நம்பும்படியாக இல்லை. அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது காண்டிராக்டர் சுப்பிரமணியன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்திருக்கிறார்கள். அமைச்சரை அழைத்து விசாரித்தது போல் காண்டிராக்டரையும் அழைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பலமணி நேரம் விசாரித்துள்ள நிலையில், திடீரென்று பண்ணை வீட்டில் சுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்டார் என்று வரும் செய்தியில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் அடங்கியிருக்கின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் விநியோகம் செய்து தேர்தல் ஜனநாயகத்துக்கே அவமானத்தைத் தேடித் தந்தவர் அதிமுக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அந்தப் பண விநியோக விவகாரத்தில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளைச் செய்யும் அமைச்சரின் நெருங்கிய நண்பரான காண்டிராக்டர் சுப்பிரமணியத்தின் பங்கு பெருமளவில் இருக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கருதியதால்தான் அந்த காண்டிராக்டரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். காண்டிராக்டர் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் சில முக்கிய ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளார்கள். அமைச்சருக்கு எதிராக கிடைத்த ஆதாரங்களுக்கு முக்கிய சாட்சியாக இருந்த காண்டிராக்டர் சுப்பிரமணியத்தின் தற்கொலை ஒட்டுமொத்த விசாரணையையும் திசைதிருப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி வருமான வரித்துறையின் வழக்கிற்கு ஆதாரமான முக்கிய சாட்சி இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. சாதாரண காண்டிராக்டராக இருந்த சுப்பிரமணியனின் வளர்ச்சி திடீரென அபரிமிதமாக இருந்ததாக செய்திகள் வெளிவருகின்றன. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நட்பு அவருக்குக் கிடைத்த பிறகுதான் அரசு ஒப்பந்தங்கள் அவரைத் தேடி அணிவகுத்து வந்திருக்கின்றன. அமைச்சரின் தயவில் முதல்தர காண்டிராக்டராக ஆகியிருக்கிறார் என்பதும், அமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதாரத்துறையில் கட்டடப் பணிகளுக்கான முக்கியமான டெண்டர்களை எல்லாம் இவர்தான் எடுத்தார் என்பதும் வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்து இருக்கிறது. மிகப்பெரிய ஊழலுக்கு முக்கிய சாட்சியான இவருடைய மரணத்தை “தற்கொலை” என்று நிச்சயம் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

இது ஒருபுறமிருக்க, முதலமைச்சராக இருந்த மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு இல்லத்தின் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல விநோதமான தகவல்களை போலீஸார் பரப்பி வருகிறார்கள். அந்தக் கொலை மற்றும் கொள்ளையில் தொடர்புடையதாக கருதப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார் என்று காவல்துறை அதிகாரிகள் அறிவித்தார்கள். இவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வழக்கில் தொடர்புடைய சயன் என்பவர் வேறு ஒரு இடத்தில் அதே தினத்தில் விபத்துக்குள்ளாகி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் அறிவித்தது.

ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் வெவ்வேறு இடங்களில் ஒரே தினத்தில் விபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தியே “கின்னஸ்” ரெக்கார்டு போல் இருக்கிறது. கொடநாடு விவகாரமாக இருந்தாலும் சரி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வருமான வரித்துறை ரெய்டு விவகாரமாக இருந்தாலும் சரி, இப்படி திடீர் திடீரென “விபத்து” என்றும் “தற்கொலை” என்றும் நிகழும் மரணங்கள் அதிர்ச்சியளிப்பதாக மட்டுமல்ல- மர்மம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. “காண்டிராக்டர் சுப்பிரமணியன் மரணம்” வருமான வரித்துறையிடம் சிக்கியுள்ள ஆதாரங்களுக்கு வலுசேர்க்கும் முக்கிய சாட்சிகளை அழிக்கும் முயற்சியா, “கனகராஜின் மரணம்” கொடநாடு மர்மத்தை காப்பாற்றும் “விபத்தா” என்ற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

ஆகவே, சுகாதாரத்துறை அமைச்சருக்கு நெருக்கமான காண்டிராக்டர் சுப்பிரமணியத்தை விசாரித்ததன் நோக்கம் என்ன? அந்த விசாரணையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பற்றியும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை காண்டிராக்ட் மற்றும் சுகாதாரத்துறையில் எடுத்த பல்வேறு காண்டிராக்டுகள் குறித்தும், மரணமடைந்த காண்டிராக்டர் சுப்பிரமணியன் பகிர்ந்து கொண்ட தகவல்கள் என்னென்ன என்பது பற்றிய விவரங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் உடனடியாக வெளியிட வேண்டும். காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லையா என்ற உண்மையை வெளிக்கொண்டு வர அந்தத் தகவல்கள் பேருதவியாக இருக்கும். இந்த தற்கொலை, விபத்து மரணம் குறித்து விசாரணை செய்யும் பொறுப்பை இனிமேலும் தமிழக காவல்துறையிடமே ஒப்படைத்து வைத்திருப்பது ஊழல் விசாரணையில் உண்மை தகவல்களை கொண்டுவர எந்த வடிவத்திலும் உதவிகரமாக இருக்காது.

ஆகவே “கனகராஜ் மரணம்” “காண்டிராக்டர் சுப்பிரமணியன் மரணம்” ஆகியவற்றை உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ், வருமான வரித்துறை ரெய்டுக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரை உடனடியாக பதவிநீக்கம் செய்து ஊழல் விசாரணைகள் தங்கு தடையின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதற்கு முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!