Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனியும் நாம் பொறுமை காக்க வேண்டாம்!' - தினகரனுக்காகக் களமிறங்கிய மூவர் கூட்டணி

நாஞ்சில் சம்பத்

ண்ணா தி.மு.கவின் மூன்று அணிகளும் தனி ஆவர்த்தனம் செய்து வரும் வேளையில், தினகரனுக்காக நடத்தப்படும் கூட்டங்களை மத்திய உளவுத்துறை தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. ' தினகரன் கைதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கூட்டம் போடும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் விவேக். சிறையில் இருக்கும் சசிகலாவே அமைதியாக இருக்கும்போது, விவேக்கின் செயல்பாடுகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் பன்னீர்செல்வம் தரப்பினர்' என்கின்றனர் அ.தி.மு.கவினர்.

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தபடியே, அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்விவகாரக் காட்சிகளைக் கவனித்துவருகிறார் சசிகலா. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் திகார் சிறையில் பொழுதைக் கழித்துவருகிறார் டி.டி.வி.தினகரன். 'கட்சி அதிகாரம் யார் கையில் இருக்கிறது?' என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் வலம் வந்தாலும், தினகரனுக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்களை நேற்று நாள் முழுக்க ஒளிபரப்பிக்கொண்டிருந்தது ஜெயா டி.வி. " கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும் நாஞ்சில் சம்பத்தும் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டு வருகின்றனர். கட்சியை வழிநடத்திக்கொண்டிருந்த சசிகலாவும் சிறையில் இருக்கிறார். தினகரன் கைதுக்குப் பிறகு, நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்துக் கடுமையான கட்டுரைகள் எழுதப்பட்டு வந்தன. இதுகுறித்த தகவல்கள் டெல்லி வட்டாரத்துக்கு அனுப்பப்பட, ' மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம்' என அமைச்சரவைக் கூட்டத்திலேயே அறிவுறுத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சில நாள்கள் அமைதிக்குப் பிறகு மீண்டும் தினகரனை முன்னிறுத்தியும் அவருடைய கைதைக் கண்டித்தும் ஜெயா டி.வி. நிர்வாகம் செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. இதற்கு முக்கியக் காரணமே, மதுரையில் தினகரன் கைதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்த கூட்டம்தான்" என விவரித்த சசிகலா அணி ஆதரவாளர் ஒருவர், 

விவேக் ஜெயராமன்" மதுரையில் கூட்டம் நடந்தபோது ஜெயா டி.வி அதை ஒளிபரப்பவில்லை. 'எங்கோ கூட்டம் நடத்துகிறார்கள்' என்ற மனநிலையில்தான் விவேக் இருந்தார். ஆனால், அங்கு திரண்டிருந்த கூட்டத்தைக் கவனித்த விவேக், ' நமக்கு ஆதரவாக பொதுமக்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை இது கொடுத்திருக்கிறது. நம்மை ஆதரிப்பவர்களுக்குக் கூடுதல் கவரேஜ் கொடுங்கள்' என உத்தரவிட்டார். இதனையடுத்து, மேலூர் முன்னாள் எம்.எல்.ஏ சாமி ஏற்பாடு செய்த கூட்டத்தை நாள் முழுக்க ஒளிபரப்பினர். சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்குக் கூட்டத்தைத் திரட்டிவிட்டார்கள். இதனை அடுத்து தங்க.தமிழ்ச்செல்வனை அழைத்த விவேக், ' தேனியில் 50 ஆயிரம் பேரைத் திரட்ட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைக் கவனியுங்கள்' எனக் கூறினார். புதுக்கோட்டை மாவட்டப் பொறுப்பாளர்களை அழைத்து, ' விஜயபாஸ்கரிடம் எதுவும் கேட்க வேண்டாம். கூட்டத்தைக் காட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு' என உத்தரவிட்டார். பன்னீர்செல்வத்துக்குத் திரண்ட கூட்டத்தைவிட இரண்டு மடங்கு கூட்டத்தை தினகரனுக்காகக் கூட்டும் வேலையில் இறங்கியிருக்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். கடம்பூர் ராஜுவும், ' நான் எப்போது கூட்டத்தை நடத்த வேண்டும்?' எனக் கேட்டு வருகிறார். இந்தக் கூட்டங்களில், 'மக்கள் தலைவர் தினகரன்' என்ற முழக்கங்களைக் கேட்க முடிகிறது.

'மத்திய அரசின் அணுமுகுறையை விமர்சிப்பதைவிட, பன்னீர்செல்வத்தை பலமாகத் தாக்கிப் பேசுங்கள்' என கார்டனில் உள்ளவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். ' சேகர் ரெட்டி விவகாரத்திலிருந்து 
பொதுப்பணித்துறையில் பன்னீர்செல்வம் செய்த ஊழல்களையும் அவருக்கு ஆதரவு கொடுக்கும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் அ.தி.மு.கவுக்குச் செய்த துரோகங்களையும் பட்டியலிடுங்கள்' எனக் கூறியிருக்கிறார் விவேக். அதன் விளைவாகத்தான், ' தமிழ்நாட்டுக்கே சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியவர் பன்னீர்செல்வம்' எனப் பேசுகிறார் சி.வி.சண்முகம். ' பன்னீர்செல்வத்துக்குப் பாதுகாப்பு கொடுத்து ஆயுதத்தை அவமானப்படுத்துகிறார்கள்' என நாஞ்சில் சம்பத்தும் ஒரே நேரத்தில் வீரியத்தைக் கூட்டியிருக்கிறார். பன்னீர்செல்வம் அணியின் செம்மலையோ, ' எங்களோடு வருவதற்கு 35 எம்.எல்.ஏக்கள் தயாராக இருக்கிறார்கள்' என பயமுறுத்திப் பார்க்கிறார். இதற்கெல்லாம் ஆட்சியில் இருப்பவர்கள் அஞ்சவில்லை. ' பன்னீர்செல்வத்தின் அழைப்பை எந்த எம்.எல்.ஏவும் ஏற்கப் போவதில்லை. இனியும் நாம் பொறுமையோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மை நோக்கி மக்கள் பார்வையைத் திருப்புவதுதான் மிக முக்கியமானது' என உறுதியாக இருக்கிறார் விவேக். அணிகள் இணைப்பு எந்தக் காலத்திலும் சாத்தியமாகப்போவதில்லை" என்றார் விரிவாக. 

" அணிகள் இணைப்பு என்ற முழக்கம் தொடங்கிய காலத்திலேயே, ' ஜெயா டி.வி நிர்வாகத்திலிருந்து விவேக்கை அப்புறப்படுத்துங்கள்' என வைத்திலிங்கத்திடம் கடுமை காட்டினார் பன்னீர்செல்வம். சசிகலா குடும்பத்திலிருந்து கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தும் ஒரே நபராக விவேக் இருக்கிறார். போயஸ் கார்டன் முகவரியிலேயே அவருக்கு உறுப்பினர் அட்டை இருக்கிறது. 'வரும் வரும் நாள்களில்
விவேக் ஒரு சக்தியாக உருவெடுக்கலாம்' என அஞ்சித்தான், அவரை நீக்குவதற்குக் குரல் கொடுத்தார் பன்னீர்செல்வம். இதற்கு எந்தவிதமான பதிலையும் கூறாமல் மௌனம் காத்தார் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாகத்தான், அணிகள் இணைப்பு தொடக்க நிலையிலேயே முறிந்துபோனது. தற்போது தினகரனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை,  விவேக் ஏன் முன்னெடுக்கிறார் என்ற காரணமும் புரியவில்லை. சசிகலாவும் தினகரனும் அமைதியாக இருக்கும்போது, விவேக்கின் செயல்திட்டமும் விளங்கவில்லை. மாநில அரசின் ஒப்புதலோடுதான் தினகரன் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன" என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close