வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (10/05/2017)

கடைசி தொடர்பு:14:52 (10/05/2017)

முதல்வர் பழனிசாமியை திடீரென சந்தித்தது ஏன்? வானதி சீனிவாசன் அடடே பதில்

முதல்வர் பழனிசாமியை இன்று பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் திடீரென சந்தித்துப் பேசினார். 'மக்கள் பிரச்னைகள் குறித்து பேச மட்டுமே முதல்வரை சந்தித்தேன்' என்று அவர் கூறினார்.

தமிழக அரசை மத்திய அரசு இயக்கிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், இன்று திடீரென தலைமைச் செயலகம் வந்தார். முதல்வர் பழனிசாமியை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், அவிநாசி- அத்திக்கடவு  திட்டத்தைச் செயல்படுத்த, மாற்று வழியை முதல்வரிடம் முன்வைத்தோம். இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம்.

மேலும், கோவை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றவும் வலியுறுத்தினோம். ஏரி, குளம், குட்டைகளை தூர்வார நடவடிக்கை எடுக்கவும், கோவை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் குறித்தும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம்" என்று கூறினார்.

முதல்வரை திடீரென சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த வானதி, 'மக்கள் பிரச்னைகள் குறித்து பேச மட்டுமே முதல்வர் பழனிசாமியை சந்தித்தோம். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை' என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், 'அமைச்சர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. வருமானவரித்துறை அளித்த பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை தேவை' என்று கூறியிருந்தார்.