வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (10/05/2017)

கடைசி தொடர்பு:14:58 (10/05/2017)

முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

'நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் நடத்துவதுகுறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை செய்தபின் முடிவு எடுக்கப்படும்' என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 


சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அய்யாக்கண்ணு இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.  விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வருடன் சந்திப்பு நடைபெற்றது. இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, 'விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக அடுத்தகட்ட போராட்டத்துக்கு மே 18-ம் தேதி டெல்லி செல்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மே 21-ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகை அல்லது பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படும். இந்தியா ஜனநாயக நாடு இல்லை. சர்வாதிகார நாடு. நான் போராட்டத்தைத் தொடங்கினால், ஹெச்.ராஜாவும் தமிழிசையும் பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறேன் என்று கூறுவார்கள்' என்றார்.