வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:43 (10/05/2017)

‘தி.மு.கவுக்குள் பா.ஜ.க வந்துவிடக் கூடாது!’ - வைரவிழாவில் ஒத்திகை பார்க்கும் காங்கிரஸ் #VikatanExclusive

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர் உடன்பிறப்புகள். 'காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட ஆறு மாநில முதல்வர்கள் விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாக இருப்பதால், 'தி.மு.கவுக்குள் பா.ஜ.கவின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது' என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்த வைரவிழாவைக் கொண்டாடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 'வைரவிழாவில் பங்கேற்க, பா.ஜ.கவுக்கும் அழைப்புவிடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை. இதற்குப் பதில் அளித்த தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'மதவாதக் கட்சிகளை அழைக்க மாட்டோம்' என்றார் உறுதியாக. இதனை எதிர்பார்க்காத தமிழிசை, 'தி.மு.கவினருக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை. நாங்கள் மதவாதக் கட்சி என்றால், வாஜ்பாய் தலைமையிலான அரசில் தி.மு.க ஏன் கூட்டணி வைத்தது?' எனவும் கேள்வி எழுப்பினார். 

சோனியா காந்தி"கருணாநிதியின் வைரவிழாவை முன்னெடுக்கும் முடிவில் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுதியாக இருக்கின்றனர். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் மேடையாக இதைப் பார்க்கிறார் சோனியா. தற்போதுள்ள தமிழக சூழலில் மூன்று துண்டுகளாக அ.தி.மு.க சிதறிக் கிடக்கிறது. சசிகலா, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என அணிகள் பிரிந்துகிடப்பதால், அரசியல்ரீதியாக எந்த லாபமும் இல்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணுகின்றனர். 2004-ம் ஆண்டு தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான், தனிப்பெரும் கட்சியாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தது காங்கிரஸ். அதைப் போன்றதொரு வெற்றியை சோனியா எதிர்பார்க்கிறார். ஆனால், கடந்த சில மாதங்களாக தி.மு.கவுடன் பா.ஜ.க நிர்வாகிகள் நெருங்குவது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு அளித்ததையும் காங்கிரஸ் தலைமை உன்னிப்பாக கவனித்து வந்தது. அருண் ஜெட்லியிடம் தி.மு.க நிர்வாகிகள் நட்பில் உள்ளதையும் கவனித்து வந்தனர். நாடாளுமன்றத்தில் கனிமொழியை சந்திக்கும்போதெல்லாம், 'கலைஞர் உடல்நிலை எப்படி இருக்கிறது?' என விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் பிரதமர் மோடி. தி.மு.க பிரமுகர்கள் தொடர்புடைய மத்திய அரசின் வழக்குகளிலும் சில சலுகைகள் கொடுக்கப்பட்டு வந்தன.

இப்படியே போனால், 'தி.மு.கவை பா.ஜ.க வளைத்துவிடும்' என்பதை காங்கிரஸ் தலைமை உணர்ந்தது. அதன் எதிரொலியாகத்தான், 'கலைஞர் வைரவிழா நிகழ்வுக்கு நாடு முழுவதும் இருந்து தலைவர்களை அழையுங்கள்' என கனிமொழி மூலமாகத் தகவல் சொல்லி அனுப்பினார்கள். பா.ஜ.கவுக்கு எதிராக அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. தி.மு.கவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டால், 'அகில இந்திய அளவில் வலுவான கூட்டணி அமையும்' எனக் கணக்கு போடுகிறார்கள். இந்தக் கணக்குகளை அறிந்துதான், 'பா.ஜ.கவையும் விழாவுக்கு அழைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார் தமிழிசை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரும் அ.தி.மு.க ஆதரவு மனநிலையில் செயல்பட்டு வந்தார். இதையே காரணம் காட்டி அவரது மாநிலத் தலைவர் பதவியைப் பறிக்கும் வேலைகளில் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் சிலர் செயல்பட்டு வந்தனர். இதை அறிந்து, தன்னுடைய சமீபத்திய அறிக்கைகளில், 'முதுகெலும்பு இல்லாத அரசு' என தமிழக அரசைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார் திருநாவுக்கரசர். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் முன்னேற்பாடுகளை மத்திய உளவுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். வரக்கூடிய நாள்களில் தி.மு.க தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தினாலும் ஆச்சரியமில்லை" என்றார் விரிவாக. 

"உடல்நலக் குறைவு காரணமாக, வைரவிழாவில் தலைவர் கருணாநிதி பங்கேற்க வாய்ப்பில்லை. பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, மம்தா பானர்ஜி உள்பட ஆறு மாநில முதல்வர்கள் பங்கேற்க இருக்கின்றனர். டெல்லியில் இருந்து மட்டும் ஐந்து முக்கியப் பிரமுகர்கள் வர இருக்கிறார்கள். பா.ஜ.கவுடன் தி.மு.க கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகளே இல்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், 10 எம்.பி சீட்டுக்களைக் கேட்கும் முடிவில் காங்கிரஸ் தலைமை இருக்கிறது. அவ்வளவு இடங்களைக் கொடுக்கும் முடிவில் நாங்கள் இல்லை. வைரவிழாவை அதற்கான முன்னோட்டமாகத்தான் பார்க்கிறார்கள். 'கனிமொழியுடன் பா.ஜ.க நட்புடன் இருக்கிறது' என்பதே தவறான தகவல். தி.மு.கவுடன் நெருங்கிய வர பா.ஜ.க தலைமைதான் விரும்புகிறது. நாங்கள் அப்படி ஒரு எண்ணத்தில் இல்லை. வைரவிழாவுக்கான வேலைகளில் தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கிறோம்" என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர். 

தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரிகளை உள்ளடக்கிய வலுவான கூட்டணியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. 'குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு, அகில இந்திய அளவில் மோடிக்கு எதிரான அணி உருவாகும்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கருணாநிதி வைரவிழாவில் போடப்படும் நாடாளுமன்ற மேடைக்கான முன்னோட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது அகில இந்திய பா.ஜ.க தலைமை.


டிரெண்டிங் @ விகடன்