வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (10/05/2017)

கடைசி தொடர்பு:17:25 (10/05/2017)

“நயன்தாரா அக்காவுக்கு ஃபேஷன் டிசைனராகணும்!” மிஸ் கூவாகம் ஆண்ட்ரியா சென் விருப்பம்!

மிஸ் கூவாகம்

விழுப்புரம் மாவட்டம் கூவாகம் பகுதியில் நடக்கும் திருநங்கைகள் திருவிழா உலகப்புகழ் வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து இங்குப் படையெடுக்கும் திருநங்கைகள் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உள்ள தங்களது மனம் கவர்ந்த கூத்தாண்டவர் கடவுள் ஆலயத்தில் தாலி கட்டிக் கொண்டு வழிபடுவார்கள். அதற்கு முதல்நாள் கூவாகத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடத்தப்படும். அதனைப் பார்க்க உள்ளூரில் ஆரம்பித்து உலகெங்கும் இருக்கும் சுற்றுலா பயணிகள்வரை வந்து குவிந்துவிடுவார்கள்.

மேடையில் திருநங்கைகள் நடந்து வரும் போது கைத்தட்டல்கள் காதைக் கிழிக்கும். விசில் சத்தம் விண்ணை எட்டும். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் 'மிஸ் கூவாக'மாக அறிவிக்கப்படுவார்கள். இந்த வருடம் 'மிஸ் கூவாகமாக தேந்தெடுக்கப்பட்ட ஃபேஷன் டிசைனர் ஆண்ட்ரியாவிடம் பேசினோம்.

மிஸ் கூவாகம்

“மிஸ் கூவாகமா செலக்ட் ஆனதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காக ஆறு மாசம் நான் கஷ்டப்பட்டிருக்கேன். எனக்கு ரொம்பப் புடிச்ச நான்-வெஜ் சாப்பாட்டையெல்லாம் தொடாம கொள்ளுக்கஞ்சி, கீரை, பழம், ஜூஸ்னு சாப்பிட்டு டயட்ல இருந்தேன். என் உழைப்புக்குக் கிடைச்ச இந்த வெற்றியை என் திருநங்கை அக்கா தங்கச்சிங்களுக்கு சமர்ப்பிச்சிக்கறேன். இத்தனை வருஷமா மனசுக்குள்ள அறுத்துட்டு இருந்த காயங்களுக்கும் வலிகளுக்கும் இந்தப் பட்டம் மருந்தா இருக்குது.

சென்னையில் நடுத்தர வர்க்கத்துக்கும் கீழானதுதான் என்னோட குடும்பம். அப்பா அம்மா, ரெண்டு அக்கா, அண்ணன்னு அழகான குடும்பம். போதுமான வசதி இல்லாததால சின்ன வயசிலிருந்தே தாம்பரத்துல ஒரு பிரைவேட் ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சேன். ஆறாவது, ஏழாவது படிக்கும்போதே எனக்குள் நெறைய மாற்றம் இருக்கறத உணர ஆரம்பிச்சேன். ஆம்பளப் பசங்க எல்லாம் கிரிக்கெட், கபடினு விளையாடறப்போ, நான் பொம்பளை பசங்கக்கூட நொண்டி பல்லாங்குழினு விளையாடினேன். அப்பவே “என்ன நீ பொம்பள மாதிரி நடக்கற, பேசறனு எல்லாரும் கேட்டாங்க. அப்போ அதை பெருசா எடுத்துக்கல.

பத்தாவது படிக்கறப்பதான் என் நடை, உடை, பாவனை எல்லாமே பெண்கள் மாறி மாறியிருக்கிறதை உணர ஆரம்பிச்சேன். ஆம்பளப் பசங்க மாதிரி பேசறதுக்கும் நடக்கறதுக்கும் எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியாமப் போச்சு. என் கூட படிச்ச பசங்க எல்லாம் கேலி பண்ண ஆரம்பிச்சதே எனக்கு அப்பதான் உறைக்க ஆரம்பிச்சது.

சின்ன வயசுலருந்தே ஹாஸ்டல்ல தங்கி படிச்சதால என் வீட்டுக்கு இதப்பத்தித் தெரியல. லீவுல வீட்டுக்குப் போகும்போது அம்மா மட்டும் ”ஏண்டா இப்படி நடந்துக்கறனு” சாதாரணமா கேட்டுட்டு விட்டுடுவாங்க. தனியா உட்கார்ந்துகிட்டு நான் ஏன் இப்படி இருக்கேன்னு பல சமயங்கள்ல அழுதிருக்கேன். எனக்குள்ள என்ன நடக்குதுனு புலம்பாத நாள் இல்லை. தனிமை, அழுகைக்கு இடையில பிளஸ்டூ பாஸ் பண்ணி பி.காம் சேர்ந்தேன்.

அங்க போய் என்னைப் பையன் மாதிரி காட்டிக்க செய்ஞ்ச முயற்சி எல்லாமே தோத்துப் போக ஆரம்பிச்சது. காலேஜ் போறத கட் பண்ணிட்டு மெரீனா பீச்சுக்குப் போக ஆரம்பிச்சேன். அங்கதான் என்னை மாதிரியே குழப்பத்துல இருக்கற வேதிகா, பவியாவைச் சந்திச்சேன். அவங்களும் என்னைப் போலவே பிரச்னைகளை சந்திச்சுட்டு இருக்காங்கன்னு பேசுனப்ப கண்டுபிடிச்சேன். எனக்கான தனி உலகத்துல ரெண்டு தோழிங்க கிடைச்சிட்டாங்கன்னு துள்ளிக் குதிச்சேன். அதுக்கப்புறம் அடிக்கடி மெரீனால சந்திச்சுப் பேசுவோம். அப்போ நாங்க பேண்ட் சட்டைல இருந்தாலும் வாடி, போடீனுதான் பேசிக்குவோம். பவியாதான் “பெங்களூருக்கு வேலைக்குப் போகலாம்டி”னு சொன்னா. உடனே கிளம்பிட்டோம். அங்க எங்களைமாதிரி இருந்தவங்களாம் புடவைலாம் கட்டிக்கிட்டு அழகா இருந்தத பார்த்ததும் எங்களுக்கு ஆசை வந்துடுச்சி. அப்போதான் ’மேகா’ அம்மாவை சந்திச்சோம். உண்மையான அம்மா பாசத்தை அவங்கதான் கொடுத்தாங்க.

எங்க ஆசையைச் சொன்னதும், ‘ஆபரேஷன்லாம் வேணாம்மா. அது ரொம்ப கஷ்டம்னு’ சொன்னாங்க. என் அப்பா அம்மாகிட்ட போன்ல இதப்பத்தி பேசுனேன். “ஆபரேஷன்லாம் பண்ணிட்டு இங்க வந்தா நாங்க குடும்பத்தோட ரயில்ல குதிச்சி செத்துடுவோம்னு” சொல்லிட்டாங்க. ஒட்டுமொத்த உலகமும் என்னை ஒதுக்கிட்ட மாதிரி தோணுச்சு. நிறைய அழுதேன். அப்புறம் வீட்டுக்குப் போற ஐடியாவையே விட்டுட்டேன். கொஞ்ச நாளைக்குப் பிறகு ஆப்ரேஷன் பெங்களூரூல பண்ணிக்கிட்டேன்.

ஆப்ரேஷனுக்குப் பிறகான அந்த 40 நாட்கள் மிகக் கொடுமையானது. வலி… வலி… வலி… நடக்கக்கூட முடியல. ஆனாலும் ஏதோ பெரிய சிக்கல்ல இருந்து விடுதலை கிடைச்சமாதிரி உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சதும், இனி கடைகளுக்குப் போய் காசு வாங்க கூடாதுன்னு தீர்மானிச்சேன். எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு டிரஸ் தைக்கனும்னா ரெண்டு மடங்கு ரூபா கேட்பாங்க. அதனால் ஃபேஷன் டிசைனிங் படிக்கனும்னு ஆசைப்பட்டப்ப 'பார்ன் டு வின்’ அமைப்பு உதவினாங்க. இப்போ நான் ஒரு ஃபேஷன் டிசைனரா நல்லா சம்பாதிக்கறேன்.

மிஸ் கூவாகம் ஆண்ட்ரியா தன் தோழிகளுடன்

என்னதான் நாங்க சம்பாதிச்சாலும் இந்தச் சமூகம் எங்களை பாலியல் தொழிலாளியாத்தான பார்க்குது. யாரோ ஒருத்தங்க ரெண்டு பேரு அப்படி இருக்கறதால எங்கள் எல்லாரையும் அதே பார்வையில் பார்ப்பது எப்படி நியாயம் சொல்லுங்க... அரசு சரியான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அந்த ஒரு சிலரும் பாலியல் தொழிலுக்குப் போக மாட்டாங்க. இப்ப பெரும்பாலான திருநங்கைகள் நல்லாப் படிச்சி நல்ல வேலைல இருக்காங்க. பிரித்திகா யாஷினியைப் பாக்குறப்ப எல்லாம் பெரிய நம்பிக்கை வருது எங்களுக்கு.

எனக்கு ரெண்டு ஆசைகள் இருக்கு. ஹெச்.ஐ.வியால பாதிக்கப்பட்டு பெத்தவங்களால கைவிடப்பட்ட 10 குழந்தைகளையாவது எடுத்து வளர்க்கணும். அவங்களுக்காக வாழணும். இன்னொன்னு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அக்காவுக்கு ஃபேஷன் டிசைனரா வேலை செய்யணும். அப்படி சான்ஸ் கிடைக்கலைன்னா அவங்க கிட்ட மேக்-அப் உமனாவாது வேலை செய்யணும்” என்கிறவரின் கண்களில் நம்பிக்கை ஒளி வீசுகிறது.

கனவுகள் மெய்யாகட்டும் தோழியே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்