வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (10/05/2017)

கடைசி தொடர்பு:16:27 (10/05/2017)

பாதுகாக்கப்படும் மர்மம்! ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

மாநில விஜிலென்ஸ் கமிஷனர் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க அரசில் உள்ள பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மாநில விஜிலென்ஸ் கமிஷனில் கொண்டு வரப்பட வேண்டிய அவசர மாற்றங்கள் குறித்த விவரங்களை தங்களது மேலான கவனத்துக்குக் கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன். மத்திய விஜிலென்ஸ் கமிஷனைப் போலவே உயரிய அதிகாரம் மற்றும் சுதந்திரத்தன்மை கொண்ட மாநில விஜிலென்ஸ் கமிஷன் அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. தமிழக அரசு அங்கீகரித்த தமிழக லஞ்சஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநருக்கான வழிகாட்டியின் முகப்புரையில் மாநில விஜிலென்ஸ் கமிஷனின் தேவைகளை கீழ்கண்டவாறு விவரிக்கிறது:

"1964-ம் ஆண்டு ஊழல் தடுப்புக்கான சந்தானம் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு ஊழியர்களை கண்காணிக்கும் சுயாதீனமான விஜிலென்ஸ் கமிஷன் ஒன்றை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய அரசின் விஜிலென்ஸ் கமிஷனை முன்மாதிரியாகக் கொண்டு, பல மாநிலங்களில் விஜிலென்ஸ் கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, ஆளுநர் நியமிக்கும் விஜிலென்ஸ் ஆணையரை தலைமையாகக் கொண்டு, மாநில விஜிலென்ஸ் கமிஷனை அமைப்பதென தமிழக அரசு கடந்த 8.11.1965 அன்று முடிவு செய்தது”.
மேற்குறிப்பிட்ட முகப்புரையின் மூலம், எத்தகைய உயர்ந்த நோக்கத்தோடும், உன்னத குறிக்கோளுடனும் மாநில விஜிலென்ஸ் கமிஷன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது. மாநில விஜிலென்ஸ் கமிஷனின் வழிகாட்டி முகப்புரையின்படி ஆளுநர் நியமிக்கும் விஜிலென்ஸ் ஆணையர், சந்தானம் கமிட்டியின் பரிந்துரைகளின்படி, ஆட்சிமுறையில் ஊழலை ஒழிக்க மத்திய விஜிலென்ஸ் கமிஷனின் அதிகாரத்தைப் போன்று சுயாதீன அந்தஸ்து  வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அ.தி.மு.க அரசு ஆட்சி 2011-ம் ஆண்டு பொறுப்பேற்றவுடன், இரண்டுவார காலத்துக்குள் நடைமுறைகளுக்கு மாறாக பாலகிருஷ்ணனை பணியிட மாற்றம் செய்யப்பட்டபிறகு, மாநிலத்தின் மிக முக்கிய பொறுப்பான மாநில விஜிலென்ஸ் ஆணையர் பொறுப்பு அடுத்தடுத்து வந்த தலைமைச் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க அரசால் கூடுதல் பொறுப்பாக மாற்றி வைக்கப்பட்டது. அன்றுமுதல், மாநில விஜிலென்ஸ் கமிஷன் தலைமை இல்லாமலும், அதனுடைய சுயாதீனத்தை இழந்தும் இருந்து வருகிறது. விஜிலென்ஸ் வழிகாட்டியின் முகப்புரைக்கு எதிராக மாநில விஜிலென்ஸ் கமிஷன் மிகவும் சீரழிந்த நிலையில் இருக்கிறது. மணல் காண்டிராக்டர் சேகர்ரெட்டி அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் சில அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக அவரது டைரியில் கண்டுபிடித்த வருமானவரித்துறை அதிகாரிகள், அந்த விவரங்களை மாநில அரசுக்கு அனுப்பிய தகவல்கள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது. இதனைத்தொடர்ந்து, உள்துறைச் செயலாளரை, மாநில விஜிலென்ஸ் ஆணையராக கூடுதல் பொறுப்பில் நியமித்துள்ள இடைக்கால நடவடிக்கையால் மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ள சுயாதீனத்தன்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அக இணையத்தில் (இண்ட்ராநெட்) கூட வெளியிடாமல் பாதுகாக்கப்படும் மர்மம், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள தவறான நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

விஜிலென்ஸ் கமிஷன் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக வினித் நரேன் வழக்கில், ”சட்டரீதியான அந்தஸ்தை மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு வழங்க வேண்டும்”, என அறிவித்தது. அதேபோல, முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பி.ஜே.தாமஸ் வழக்கில், ”சட்டத்தின் ஆட்சியை பரவலாக நிலைநிறுத்த மத்திய விஜிலென்ஸ் கமிஷன் போன்ற அமைப்புகள் சுதந்திரமாக இயங்கி, பாரபட்சமற்ற முறையிலும் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்”, என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், தகுதியானவர்களை அந்த பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கும் அவை பொருந்துவதாக அமைந்து, லஞ்ச தடுப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு இயக்குநரகத்தின் பல்வேறு செயல்பாடுகளில் ஊழலை ஒழிக்க உதவும். மாநில அரசின் பல்வேறு படிநிலைகளிலும் ஊழல் படிந்து வரும் நிலையில், தமிழகத்திற்கென தனியாக ஒரு விஜிலென்ஸ் கமிஷனர் இல்லை, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்துக்கு டிஜிபி அந்தஸ்த்தில் இயக்குநர் ஒருவரும் இல்லை என்பதோடு மாநிலத்தில் லோக் ஆயுக்தா அமைப்பும் இல்லை. இப்படி ஊழலுக்கு அமைப்புகள் அத்தனையும் எதிராக இயங்கவிடாமல் திட்டமிட்டு தடுக்கப்பட்டு இருப்பதன் மூலம், மிகப்பெரிய அளவில் ஊழல் பெருகி, தமிழக மக்களின் நலன் மட்டுமல்லாமல், நமது நாட்டின் மிக முக்கியமான மாநிலத்தின் வளர்ச்சியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. எனவே, தாங்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி, மாநில விஜிலென்ஸ் கமிஷனுக்கு சுதந்திரமாக இயங்கக்கூடிய விஜிலென்ஸ் கமிஷனர் ஒருவரை பணியமர்த்தவும், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக டிஜிபி அந்தஸ்தில் ஒருவரை பணியமர்த்தும்படி தலைமைச் செயலாளருக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தங்களை கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம், பொதுமக்களின் நலன் சார்ந்து மாநிலத்தில் செயல்படக்கூடிய ஊழல் தடுப்பு அமைப்புகளின் பெருமைக்குரிய அம்சங்கள் மீண்டும் நிலை நிறுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.