வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (10/05/2017)

கடைசி தொடர்பு:19:23 (10/05/2017)

நீதிபதி கர்ணனை கைது செய்யும் முயற்சி தோல்வி: சென்னை திரும்பும் போலீஸார்..!!

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை தேடி ஆந்திர மாநிலம் தடா பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த இரு மாநில காவல்துறையினரும் தற்போது தமிழகம் திரும்புகின்றனர். 

சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இவர் தடை உத்தரவைப் பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட நிறைய நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015-ம் ஆண்டு பிரதமருக்கு கடிதம் எழுதினார் கர்ணன். இவரின் இந்த செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளதாக உச்ச நீதிமன்றம் கருதியது.

எனவே, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்கு கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அவரை கைது செய்ய வேண்டிய பொறுப்பு மேற்கு வங்க காவல்துறைக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கர்ணனின் உத்தரவுகளையோ, பேட்டியையோ வெளியிட, ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. கர்ணன் சென்னையில் இருந்ததையடுத்து, கொல்கத்தா காவல்துறையினர் தமிழக காவல்துறையினரின் உதவியை நாடினர். ஐந்து பேர் கொண்ட கொல்கத்தா காவல்துறையினர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் கரண்சின்ஹாவுடன் ஆலோசனை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டியுடன், கரண்சின்ஹா ஆலோசனை நடத்தினார். நீதிபதி கர்ணன் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியில் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, முதலில் காளஹஸ்தி சென்றனர். பின்னர், கர்ணனின் தொலைபேசி தடா பகுதியில் இருப்பதாக காட்டியதையடுத்து தமிழக மற்றும் மேற்குவங்க காவல்துறையினர் தடா பகுதிக்குச் சென்றனர். தடா பகுதியில் நடைபெற்ற சோதனையில் கர்ணன் இருப்பதற்கான தகவல் கிடைக்காததையடுத்து இருமாநில காவல்துறையினரும் தமிழகம் திரும்புகின்றனர். மேலும், சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே உயர் நீதிமன்ற நீதிபதி அளவில் இருப்பவருக்கு சிறை தண்டனை வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.