'உன்னோட பதவிக்கு ரூ.30 லட்சம் ரெடி.. துரத்திடுவேன் பாத்துக்க'.. அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா! | Minister Saroja threatens Government official

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (10/05/2017)

கடைசி தொடர்பு:11:53 (11/05/2017)

'உன்னோட பதவிக்கு ரூ.30 லட்சம் ரெடி.. துரத்திடுவேன் பாத்துக்க'.. அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா!

தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புத்துறை அதிகாரியை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

saroja

30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறுவதற்கு இடையூறாக இருப்பதாக பெண் அதிகாரியை அமைச்சர் சரோஜா தனது வீட்டுக்கு வரவழைத்துத் திட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் சிறை வைக்கப்பட்டு, அந்த அதிகாரியை சரோஜாவும், அவருடைய கணவரும் சேர்ந்து சரமாரியாகத் திட்டியுள்ளனர்.  இதையடுத்து அதிர்ச்சியில் மயங்கிய அதிகாரியை முதலுதவி அளித்துத் தெளிய வைத்துள்ளனர். 

இது தொடர்பாக மீனாட்சியைத் தொடர்பு கொண்டு பேசியபோது ,"குழந்தைகள் நலன்  தொடர்பான புத்தகம் ஒன்று வெளியிட வேண்டியிருந்தது. அவருடைய அழைப்பையும் ஏற்றதோடு, இந்தப் புத்தகம் வெளியிடுவது தொடர்பாகப் பேசிவிட்டு வந்துவிடலாம் என்று சென்றேன். அப்போது அமைச்சர் சரோஜாவும் அவருடைய கணவரும் என்னை  சரமாரியாகத்  திட்டித்தீர்த்தனர். ‘எத்தனை முறை உனக்கு பிரச்னை கொடுத்தாலும் நீ வேலையை விட்டுப் போக மறுக்கிறாய். பணம் எதுவும் கொடுக்காமல் வந்துவிட்ட உனக்கு அதன் மதிப்பு தெரியாது. நீ வகித்து வரும் பதவிக்கு 30 லட்ச ரூபாய் தருவதற்கு பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால், பதவியை விட்டுப் போக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறாய்' என்று கூறி மிரட்டினார். அதுமட்டுமன்றி ‘வேலையை விட்டுத்  துரத்திவிடுவேன்’ என்றும் மிரட்டினார்கள்.

நியாயமான முறையில் தேர்வெழுதி பணியில் சேர்ந்து, குழந்தைகளின்  நலனில் அக்கறைகொண்டு ஆக்கபூர்வமாக என் பணியைச் செய்துவருகிறேன். அமைச்சரின் மிரட்டல் குறித்து ஆளுநர், பிரதமர் உள்ளிட்டோருக்குக் கடிதம் எழுதுவதோடு நீதிமன்றத்துப் படியேறப் போகிறேன்" என்று  கலங்கினார் அவர்.