Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பயணிகளின் கனிவான கவனத்துக்கு...' உபயோக தகவல் சொல்லி யாசிப்பவர்!

‘ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர் செல்லும் விரைவு ரயில், ஐந்தாவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாராக உள்ளது’.  ‘ரயில்வே பராமரிப்புப் பணிகள் புதன்கிழமைதோறும் நடைபெறுவதால், மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், மண்டபம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.’ ‘மானாமதுரையிலிருந்து கல்லல், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது. எனவே, பயணிகள் அன்றைய தினம் இந்த ரயிலை நம்பியிருக்க வேண்டாம்’ என அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தன. அவை ரயில் நிலையத்தின் ஒலிபெருக்கியிலிருந்து வரவில்லை ; ஓடிக்கொண்டிருக்கும் ரயில்பெட்டிக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தன.

வழக்கமாக, ரயில் பயணத்தின்போது தின்பண்ட விற்பனையாளர்கள், தைலம், லேகியம் விற்பவர்கள், மென்மையான பாடல்களை தன் கரகர குரலில் பாடுபவர்கள், கைகளைத் தட்டியபடியே உறவுமுறைவைத்து யாசிக்கும் திருநங்கைகள் போன்றோரின் குரல்களை மட்டுமே கேட்டிருப்போம். மாறாக, ரயில் சர்வீஸ் தொடர்பான தகவல்கள் வந்த திசையை நோக்கி பார்வையைச் செலுத்தியபோது, அங்கு விழிச்சவால் கொண்ட  ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.

 

கிருஷ்ணமூர்த்தி

 மானாமதுரை ரயில்நிலையத்தில் அவரைச் சந்தித்தோம்.

‘‘என் பேரு கிருஷ்ணமூர்த்தி. வயசு 60. பார்வை முழுமையா கிடையாது. குடும்பமும் கிடையாது. எனக்குக் கண்ணு தெரியாததால கூடபொறந்தவங்களும் என்னை கைவிட்டுட்டாங்க. என்னோட சொந்த ஊர் பரமக்குடி அருகேயுள்ள  எமனேஸ்வரம். 15 வயசிலிருந்து  அநாதையா சுத்திக்கிட்டிருந்த எனக்கு, வாழுறதுக்கு வேற வேலை எதுவும் கிடைக்கலை. அப்ப, பரமக்குடி ரயில்நிலையத்துக்கு வந்து, அந்த வழியா வர்ற போற வண்டிகள்ல ஏறி தர்மம் கேட்பேன். நல்ல மனசு உள்ளவங்க முடிஞ்சதைக் கொடுப்பாங்க. சிலரு, பிச்சை எடுக்குறவங்களைப் பற்றிக் கேவலமா பேசுவாங்க. ஒவ்வொரு நாளும் இதுமாதிரி ஏளனப் பேச்சைக் கேட்கிற எனக்கு, கோபம் கோபமா வரும். ஆனாலும் `பிச்சை கேட்பதைத் தவிர வேற வழி இல்லையே'ன்னு யோசிச்சப்போதான் இந்த யோசனை உருவாச்சு. அன்னியிலேருந்து ரயில்ல பயணிக்கிற பயணிகளுக்குப் பிரயோஜனப்படும் வகையில் ரயில் சர்வீஸ் தொடர்பான செய்திகளைச் சொல்ல ஆரம்பிச்சேன்.

காலையில எமனேஸ்வரத்திலிருந்து நடந்தே பரமக்குடிக்கு வந்துருவேன். பரமக்குடியிலிருந்து மதுரை போற ராமேஸ்வரம் ரயில்ல திருப்புவனம் வரை போய், இந்தத் தகவல்களைச் சொல்லி தர்மம் கேப்பேன். மறுநாள் மானாமதுரையிலிருந்து திருச்சி செல்லும் ரயில்ல கல்லல் வரைக்கும் பயணம் செய்வேன். ஒரு பயணத்தின்போது இரண்டு மூணு பெட்டிகள்ல ஏறி-இறங்கி எனக்குத் தெரிஞ்ச ரயில் தகவல்களைச் சொல்லி தர்மம் வாங்கி வாழ்ந்து வர்றேன். மக்களிடமிருந்து வெறும் பிச்சையாக எதிர்பார்க்காம, அவங்களுக்கு ஏதாவது ஒரு வகையில உதவக்கூடிய தகவல்களைச் சொல்லி தர்மம் கேட்பது என்னோட மனசுக்கும், தர்மம் செய்றவங்க மனசுக்கும் ஒரு திருப்தியையும் சந்தோஷத்தையும் தருது. அதனால, இந்தப் பணியை விடாம செய்றேன்’’ என்றவரிடம்,

`` ரயில் பயணத்தின்போது நீங்க சொல்லும் தகவல்களை எப்படிச் சேகரிக்கிறீர்கள்?'' என்ற கேள்வியை முன்வைத்தோம்.

‘‘ரயில்வே போலீஸ் எஸ்.ஐ சித்துமணிகண்டன் சார் பரமக்குடியில இருக்கார். அவரிடம் `இன்னிக்கு ரயில் பற்றியத் தகவல் ஏதும் இருக்கா?'ன்னு தினமும் கேட்பேன். அவரும் ரயில்வே மூலம் அறிவிக்கப்பட்ட தகவல்களையும் பொதுவான தகவல்களையும் எனக்கு எடுத்துச் சொல்வார். அதை அப்படியே மனசுல ஏத்திக்கிட்டு, ரயில்பெட்டியில ஏறினதும் பயணிகள் முன்னாடி ஒப்பிப்பேன்'' என்றார்.


நல்ல நிலையில் உள்ள உடல் உறுப்புகளைச் சேதப்படுத்திக்கொண்டு பிச்சை எடுத்து வருமானம் பார்க்க முயலும் கும்பல்களுக்கிடையே, தனது இரண்டு கண்களையும் முற்றிலும் இழந்த நிலையில் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பயணிகளுக்குத் தெரிவித்து, அதன்மூலம் அவர்கள் கொடுப்பதைத் தர்மமாகப் பெறும் இந்த ரயில் யாசகர் கிருஷ்ணமூர்த்தி,  பயணிகளுக்கான உரிய பாதையைக் காட்டுபவராக உயர்ந்து நிற்கிறார்.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close