விவசாயப் பயிர்க்கடன்! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

'விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்க வேண்டாம்' என்று அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வாங்கிய குறு, சிறு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடிசெய்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடிசெய்யாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே, தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்கள் கருகியதால், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வேதனையிலும், தற்கொலை செய்துகொண்டும் உயிரை மாய்த்துக்கொண்டனர். இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாயக் கடன்களை ரத்து செய்யக்கோரி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேல் போராட்டம் நடத்தினர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த உறுதிமொழியை அடுத்து, விவசாயிகள் சென்னை திரும்பினர்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமியை நேற்று அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சந்தித்துப் பேசினர். அப்போது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நிதிச் சுமையைக் காரணம் காட்டி, இந்தக் கோரிக்கையை முதல்வர் நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே சங்கப் பதிவாளர் ஞானசேகரன், கூட்டுறவு வங்கிகளுக்கு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், கூட்டுறவு வங்கிகளிலுள்ள விவசாயக் கடன்களை வற்புறுத்தி திரும்பப் பெறக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை கடனைத் திருப்பிக் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டாம். குறுகிய காலப் பயிர்க் கடனை மத்திய காலக் கடனாக மாற்ற வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு, விவசாயக் கடன்களை விரைந்து வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!