15 நாள்தான்... 2 கோடி லிட்டர் தண்ணீர்... பயன்பெறும் 100 ஏக்கர் விவசாய நிலம்..! அசரவைத்தனர் காவலர்கள் | Public salutes Ramanathapuram police officers for their excellent move

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (11/05/2017)

கடைசி தொடர்பு:11:58 (11/05/2017)

15 நாள்தான்... 2 கோடி லிட்டர் தண்ணீர்... பயன்பெறும் 100 ஏக்கர் விவசாய நிலம்..! அசரவைத்தனர் காவலர்கள்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், ஆயுதப்படை வளாகத்தில் மிகப்பெரிய குடிநீர் ஊருணி உருவாக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 2 கோடி லிட்டர் குடிநீர் ஊறும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஊருணியை, மாவட்ட ஆட்சியர் நடராஜன், எஸ்பி மணிவண்ணன் முன்னிலையில் டிஐஜி கபில் சராட்கர் திறந்துவைத்தார்.

 

 

ராமநாதபுரம் மாவட்டம் குடிநீர்ப் பிரச்னை நிறைந்த மாவட்டம். போதிய நீர் ஆதாரங்கள், ஆறுகள், நீர் நிலைகள் இல்லாததுடன் மழையும் முழுமையாகப் பெய்யாத மாவட்டம். இதனால் அரசு அதிகாரிகளின் தண்டனைப் பகுதியாக ராமநாதபுரத்தைக் குறிப்பிடுவார்கள். காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் பலனாக அந்த அவப் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. 

இந்நிலையில், மாவட்டத்தில் நிலவும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகம், மண்டபம், சாயல்குடி, சிக்கல், பரமக்குடி, இரட்டையூரணி என 9 இடங்களில் ஊருணிகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் ஆயுதப்படை வளாகத்தில் மிகப்பெரிய - 300 அடி நீளம் 200 அடி அகலம் கொண்ட - இந்த ஊருணி நாள்தோறும் 2 கோடி லிட்டர் குடிநீர் ஊறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 22 அடி ஆழம் கொண்ட  இந்த ஊருணியில் தேங்கும் நீரைக் கொண்டு 100 ஏக்கர் நிலத்தினை விவசாயம் செய்யலாம். ஊருணியின் கரைப் பகுதிகள் பசுமையுடன் இருக்க பசும் புற்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை காய்ந்துவிடாமல் இருக்க இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் கூடிய 100 நீர் தெளிப்பான்கள் உள்ளன. இங்கு ஊற்றெடுக்கும் நீரினைக் கொண்டு ஆயுதப்படை வளாகத்தில் உள்ள 1200 குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊருணியை மாவட்ட ஆட்சியர் நடராஜன், எஸ்.பி மணிவண்ணன் முன்னிலையில் டிஐஜி கபில் சராட்கர் இன்று திறந்துவைத்தார். ஏடிஎஸ்பி பாசுமணி நன்றி கூறினார்.
​​​​​​

ramnad police

 

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குக் குடிநீர் வழங்க, காவல்துறையே தம் முயற்சியினால் பெரிய ஊருணி வெட்டி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.