Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘அரசியலுக்கு வந்தா என்ன தப்பு?’ உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன ரகசியம்

ஸ்டாலின் உதயநிதி

‘நாம பண்ற அலம்பல்ஸைக் கண்டு பாராளுமன்றமே அலறணும்’- இது, 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் வெளிப்படும் டயலாக்.''வந்தாரை வாழவைப்போம்; ஆனா, இங்க ஏதாவது பிரச்னை செஞ்சா பார்த்துகிட்டு சும்மா இருக்க மாட்டோம்.'' இது, சமீபகாலமாகத் தன் நெருக்கமானவர்களிடமும், ரசிகர் மன்றத்தினரிடமும் உதயநிதி ஸ்டாலின் சொல்லிவரும் வசனம். இவையிரண்டுக்கும் இடைப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே நம் கட்டுரை பேசும் அரசியல். 'முதன்முதலில் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நுழைந்தபோது உதயநிதியின் பேச்சில் தயக்கமும், குழப்பமும் இருக்கும். ஒரு கருத்தைச் சொல்வதற்குள், பத்து முறையேனும் எச்சில் விழுங்கிவிடுவார். (உடனே யூ டியூப் போட்டு அவர் பழைய வீடியோவைத் தேட வேண்டாம்... ப்ரோஸ்) ஆனால், சமீப காலத்திலோ அவர் பேச்சில் தெளிவு, சொல்லவரும் கருத்தில் உறுதித்தன்மை, சமூகப் பிரச்னைகளில் களமாடுதல், மறுபக்கம் வழக்கறிஞர், மருத்துவர், தொழிலாளர் அணிகள் என ஒரு கட்டமைப்போடு தமது ரசிகர் மன்றங்களை விரிவுபடுத்துதல் என அவரின் பயணம் சீரான இலக்கை நோக்கிப் பாயும் தோட்டாவாக விரைகிறது. எப்படி இந்த மாற்றம்... அவரின் இலக்கென்ன? உதயநிதி ரசிகர் மன்றத்தினரிடம் பேசினோம். 

மன்றத்தினரின் பார்வை:

“சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரை மாவட்டவாரியாக அழைத்து அவர்களோடு படம் எடுத்துக்கொள்கிறார்; குடும்பத்தின் நலம் விசாரிக்கிறார்; விருந்து வைக்கிறார். அதன்பின், கலந்துரையாடல் நடக்கிறது. மன்ற நிர்வாகிகளிடமும், ரசிகர்களிடமும் கருத்துகளைக் கேட்கிறார். அப்போது, 'நாம சென்னை மழை - வெள்ளம் பேரிடரின்போது களத்தில் இறங்கி வேலை பார்த்தோம். நம்ம மன்ற தலைமை அலுவலகத்துல இருந்து ஓயாம நிவாரண உதவிகளைச் செஞ்சோம். இதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதன்பின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல ஈடுபட்டோம். ஒரு ரசிகரா தெரிவதைவிட இப்படிச் சமூகப் பிரச்னைகளில் இறங்கிச் செயல்படும்போது நம்மை மக்கள் நெருக்கமாகவும், ஆதரவாகவும் பார்க்குறாங்க' என்று கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உள்ளிட்ட தென் மாவட்டத்தினர் பேசியபோது, 'ஒருத்தர் தோத்துட்டார்னு சொல்றதைவிட, இந்தமுறை வெற்றி வாய்ப்பை இழந்துட்டார்னு சொல்லுங்க. எதையும் நெகட்டிவா சொல்றதைவிட பாசிட்டிவ் பார்வையில சொல்லணும். அப்போதான் நெருக்கமான உறவு ஏற்படும்னு நீங்க வலியுறுத்துவீங்க. அந்தவகையிலதான் ஹெல்மெட், சாலைப் போக்குவரத்து விதிகள் கடைப்பிடிப்பு போன்ற விழிப்புஉணர்வு பிரசாரங்களை மேற்கொண்டோம். இதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. தாமிரபரணியைச் சுரண்டுற தண்ணீர் நிறுவனங்களுக்கு எதிராவும் நாம விழிப்பு உணர்வை ஏற்படுத்தணும்' என்கிறவகையில் இப்படிப் பல கருத்துகளை மன்றத்தினர் தெரிவித்துவருகின்றனர். இவற்றையெல்லாம் புன்னகையோடு கேட்டுவரும் அண்ணன் உதயநிதி, பல ஆலோசனைகளை வழங்கிவருகிறார். 

மன்றத்தினருடன்  உதயநிதி

உதயநிதி வழங்கிய டிப்ஸ்:

‘எனக்கு, ஸ்டாலின் மகன் என்பது ஓர் அடையாளம்தான். ஆனால், அதுவே உயரத்தைக் கொடுத்துவிடாது. நிறைய உழைக்க வேண்டும். நல்ல வழியில உழைச்சால், அது நிச்சயம் உயரத்தைக் கொடுக்கும்' என்று சொல்லி, அதை எங்களுக்கும் வலியுறுத்துவார்; 'பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கைப் பாதுகாப்பு போன்ற சமூக இயக்கச் செயல்களை, மன்றத்தினரை நடத்தச் சொல்லியிருக்கார். வட்டார அளவு பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என்பார்; மக்கள் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்னைகளில் முன்னின்று குரல் கொடுங்கள் என்பார்; 142 வருடங்களில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுவதால், குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க உதவுவதோடு, அந்தப் போராட்டங்களிலும் மக்களோடு இணைந்துகொள்ளுங்கள் என்பார். பிரச்னை வந்தால் நம் வழக்கறிஞர் அணி பார்த்துக்கொள்ளும். மருத்துவ முகாம்களைப் பரவலாக நடத்துங்கள்; முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பிரச்னைகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள்; கிராமங்களுக்குச் சென்று நிறைய கிளை தொடங்குங்கள். அந்த ஊர் பெரிய மனிதர் மட்டுமல்லாமல், விவசாயிகளை வைத்தும் மன்றத்தைத் திறப்பதற்கு முயற்சி செய்யுங்கள்; விவசாயிகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய மக்களுடைய அடிப்படைப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுங்கள்; ரேஷன், ஆதார் அட்டைகள் வாங்குவது, வங்கிக் கணக்குத் தொடங்குவது போன்ற உதவிகளைச் செய்யுங்கள்; 'உங்களுக்கு விளம்பரம் வேண்டுமென்றால் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதன் மூலம் தேடிக்கொள்ளுங்கள்' என்பார் தந்தை பெரியார்.

அதுபோல நிறைய உதவிகளைச் செய்யுங்கள்; நம் தமிழினத்தின் வரலாறு, மொழிப் பெருமை, திராவிடக் கொள்கை, அண்ணா, தாத்தா (கருணாநிதி) ஆகியோரது எழுத்துகளைப் படியுங்கள்; உள்ளூர் அளவில் பேச்சுப் பயிற்சி போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்; அதற்கு மன்றத்துக்குள்ளேயே உங்களுக்குள் பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் போன்றவற்றை நடத்திக்கொள்ளுங்கள். இவை எல்லாமே, எதிர்காலத்தில் உங்களுக்கு உதவும். நியாயமான வகையில் மக்களுக்காக உழைத்தால், அது உங்களுக்கான உயரத்தை அமைத்துக் கொடுக்கும்' என நம்பிக்கை கொடுத்துள்ளார் அண்ணன் உதயநிதி'' என்கின்றனர் உற்சாகமாக. 

உதயநிதி

வேலை செஞ்சா பரிசு:

தொடர்ந்து பேசும் அவர்களே, "தற்போது சுமார் 15 ஆயிரம் மன்றங்கள் இருக்க, அதை இரு மடங்காகப் பெருக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகளிடமிருந்து மன்றத்தினருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளோம். எங்குத் திரும்பினாலும் உதயாண்ணே படம் தெரியவேண்டும். சமூகப் பணிகளில் ஈடுபடும் போஸ்டர்கள், பேனர்கள் ஊருக்கு ஊர் நிறைய ஒட்டுங்கள். சமூகச் சேவையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டார்கெட் கொடுத்து, அதை ரிப்போர்ட் கேட்கிறார்கள். எந்த மாவட்ட மன்றம் மக்களுக்கு அதிகமாக உதவி செய்திருக்கிறதோ அந்த மன்றத்துக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படுகிறது. அந்தப் பரிசு, உதயாண்ணே நடிக்கும் படத்தில், ஓர் இடத்திலாவது தலைகாட்டுவதாவும் இருக்கலாம். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பொறுப்புகளில் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக வேலை பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு இல்லை என்றாலும், அரசியல் சூழல் எப்படி வேணுமானாலும் மாறலாம். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதேநேரம் நம்முடைய இலக்கு பாராளுமன்றத் தேர்தல். அதற்குள், தமிழ்நாட்டில் நீண்டு நெடிய கிளை பரப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்புறம் என்ன, தீவிரமாகச் செயலில் இறங்கிவிட்டோம்" என்கின்றனர் வேகத்தோடு. இதையொட்டியோ என்னவோ, 'சரவணன் இருக்க பயமேன்' படத்துக்காக ரசிகர்கள் அடித்த போஸ்டர்கள், பேனர்களில் வழக்கத்துக்கு மாறாகச் சமூக உணர்வு சார்ந்த கருத்துகள் வெளிப்பட்டுள்ளன. 

ஸ்டாலின் எப்படிப் பார்க்கிறார்?

''இளைஞர் அணியில், வெள்ளக்கோவில் சுவாமிநாதன் பணிகளில் வேகம் குறைந்து காணப்படுகிறது. மாணவர் அணி மாநிலச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி சிறப்பாகச் செயல்பட்டாலும், அதற்கு இளமையானச் செயலாளரை நியமிக்கிறது சரியாக இருக்கும் என்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதை மூத்த நிர்வாகிகளிடமும் மருமகனிடமும் டிஸ்கஸ் செய்திருக்கிறார் ஸ்டாலின். ‘வேணும்னா புகழேந்திக்குக் கெளரவ பதவி அளிக்கலாம்’ என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்தி திணிப்பு எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு ஆகிய கோரிக்கைகளோடு மாவட்டந்தோறும் கருத்தரங்கங்கள் நடத்த கட்சித் தலைமை தீர்மானித்தது. மாணவர்கள் முன் நடக்கும் இந்தக் கருத்தரங்கத்துக்கானப் பேச்சாளர்களின் முதல்கட்ட லிஸ்ட்டில் இள.புகழேந்தி பெயர் இல்லை என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். மாணவர் அணி மற்றும் இளைஞர் அணியில மாற்றங்கள் கொண்டு வரலாம் என்ற யோசனைகளில் இளைஞர் அணி துணைச் செயலாளர் அன்பில் மகேஷ், சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பெயர்கள் எல்லாம் பரிசீலனையில் இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் தற்போது உதயநிதியை வைத்துப் பார்க்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்.

சமீப காலமாக அடிக்கடி தனது மகன் உதயநிதியிடம் போனில் தொடர்புகொண்டு மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அதற்குக் காரணம், அரசியலை மையப்படுத்தி உதயநிதி கொடுத்துவரும் கமன்ட்ஸ்தான் என்கின்றனர் அந்தக் கட்சித் தொண்டர்கள். அதற்கு உதாரணமாகச் சில சம்பவங்களைச் சொல்கிறார்கள். ‘ஜல்லிக்கட்டுப் பிரச்னை வந்தப்போ, நம்ம பண்பாட்டையே அழிக்க பாக்குறாங்களே'னு உணர்ச்சிவசப்பட்டு உதயநிதி பேசியிருக்கிறார். விவசாயிகள் டெல்லியில் போராடியபோது, ‘அப்பா விவசாயத்துக்கு உதவுற நாட்டு மாட்டினத்துக்காகப் போராடினோம். இன்னைக்கு விவசாயிகள் போராடுறாங்க. அதுக்கும் நாம முன்ன நிக்கணும். டெல்லி போலாமே’னு பேசியிருக்கிறார். ‘பொதுவா அமைதியா இருக்குற மகன், சமீபமா அரசியல் கருத்துகளைப் பகிர்வதைக் கண்டு ஓர் அப்பாவா சந்தோஷப்பட்டிருக்கிறாரு' செயல் தலைவர். இதன் பிறகு, முக்கியப் பிரச்னைகள் வந்தால் அதை உதயநிதி காதில் போடுவது, ‘நம்ம கட்சி மூவ் குறித்து உங்க பசங்க (மன்றத்தினர்) எப்படி பீல் பண்றாங்க’ என்று அடிக்கடி தொடர்புகொண்டும் கேட்கிறார். மாணவர் அணி அல்லது இளைஞர் அணிக்கு அவரைக் கொண்டுவரும் யோசனைகள் இருந்தாலும் மாணவர் அணி மற்றும் இளைஞர் அணி  என்பது தி.மு.க கட்சி வரலாற்றில் முக்கிய அணியாகும். அதற்குப் போராட்ட அனுபவமும், கட்சி வரலாற்று அறிவும் வேண்டும் என்று செயல் தலைவர் ஸ்டாலின் நினைக்கிறார். இதையொட்டியே  ‘மக்கள்கிட்ட இன்னும் நீ ரீச் ஆகணும், இறங்கி வேலை பாக்கணும்’ என வலியுறுத்தி வருகிறார். பிறந்தநாளுக்கு வந்த புத்தகங்களில் சிலவற்றை உதயநிதிக்குக் கொடுத்து, படித்துக் கருத்துப் பரிமாறச் சொல்லியிருக்கிறார்' '' என்கின்றனர் அறிவாலயத்தில் நாம் சந்தித்த மூத்த தலைவர்கள். 

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் எண்ணம் :

உதயநிதியைப் பொறுத்தவரை தமது நண்பர் அன்பில் மகேஷ் முக்கியப் பொறுப்பு கிடைப்பதை விரும்புகிறார். அதேநேரம் தற்போது அவரின் எண்ணமெல்லாம் திரைப்படங்களிலும், மன்றங்களை வளர்ப்பதிலும் உள்ளன. எந்தவகையிலும் பொதுக் காரியங்கள் தவிர்த்து, க்ரைம் வழக்குகள் இருந்தால் அவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. தி.மு.க நிர்வாகிகள் அல்லது பிரமுகர்களுக்கு மன்றத்தில் பொறுப்பு வழங்குவதில்லை. சுயபலத்தோடு வளர புதிய இளைஞர்களைப் பொறுப்புகளில் நியமித்தும், உறுப்பினராகவும் சேர்த்து வருகிறார். 

உதயநிதியின் அரசியல் என்ட்ரி :

'அவை இல்லாமலா இத்தனை பணிகளையும் செய்வார்' என வேடிக்கையாகக் கேட்கும் அவர் மன்றத்தினர், தொடர்ந்து, ''சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அண்ணன் உதயநிதி பேட்டியளித்தபோது, 'என்னுடைய அம்மாவுக்கு நான் அரசியலுக்கு வரணும்னு ஆசை. என் மனைவிகூட, 'நாட்டுல நடக்குற பிரச்னையெல்லாம் பாக்குறப்போ நிறைய யங்ஸ்டார்ஸ் அரசியலுக்கு வந்து தடுக்கணும்'னு சொல்வாரு. என்னைப் பொறுத்தவரை நான் சினிமாவுக்கு வருவேன்னு நெனச்சுப் பார்க்கலை. வந்தேன். ஹீரோ ஆவேன்னு நினைக்கலை. ஆனா, ஆனேன். அதனால, இது (அரசியல் என்ட்ரி) குறித்து இப்போதைக்குச் சொல்ல இயலாது' என்று பதிலளித்தார். இருந்தாலும்... எங்களிடம், 'எனக்குச் சினிமா முதன்மையானதுதான். ஆனாலும், நான் அரசியலுக்கு வருவதுல தவறு ஒண்ணுமில்லையே. சின்ன வயசுல 'முரசொலி'யில ப்ரூப் பார்க்கும் வேலைகளுல ஈடுபட்டிருக்கேன். அப்போ, தலைவர் (கருணாநிதி) பேச்சை ரெக்கார்டு செஞ்சு கேட்பேன். எனக்குள்ள திராவிட ரத்தம் ஓடுது. அரசியல்னா என்ன? தேர்தல்ல பங்கெடுப்பது மட்டுமே அல்ல... மக்களுக்குச் சேவை செய்றதுதானே! நான் அரசியலுக்கு வந்தா என்ன தப்பு'னு பேசுவார். குறிப்பாக 'நீட்' தேர்வு திணிப்பு, தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தி திணிப்பு செய்யும் பி.ஜே.பி-யின் செயல்பாடுகள் குறித்து கடுமையான எதிர்க்கருத்துகளைச் சமீப காலமாகப் பகிர்ந்துவருகிறார். கடைசியா, 'எந்தத் திட்டத்தோடு பி.ஜே.பி வந்தாலும் இங்கே திராவிடத்தை ஒண்ணும் செய்ய முடியாது'னு சொல்லும் உதயாண்ணே, 'வந்தாரை வாழவைக்கிறதுதான் நம்ம பூமி. அதேநேரம், ஏதாவது பிரச்னையை அவுங்க செஞ்சா அதுக்காகச் சும்மா இருக்க முடியாது'னு எச்சரிக்கையும் விடுக்கிறார்'' என்கின்றனர் பீடிகையோடு.

கனவுகளை நனவாக்க, கொள்கைகளைத் தூசு தட்டியுள்ளார் உதயநிதி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close