சீமைக் கருவேல மரம் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதுத் தகவல்! | TN government submitted GO for Karuvelam tree issue

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (11/05/2017)

கடைசி தொடர்பு:15:09 (11/05/2017)

சீமைக் கருவேல மரம் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதுத் தகவல்!

சீமைக் கருவேல மரங்களின் தன்மைகள்குறித்து ஆராய்வதற்கு 12 பேர் கொண்ட குழு அமைத்திருப்பதாக, தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அரசாணை தாக்கல் செய்துள்ளது. 


சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீரைப் பாதிக்கப்படுகின்றன என்று கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை,  தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது. இதை எதிர்த்து வழக்கறிஞர் மேகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்தார். அதில், 'சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீருக்கு பாதிப்பு விளைவிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. வறட்சியான இடங்களில் வளரும் இந்த மரங்கள், விறகாகவும் பயன்படுகிறது. வணிகரீதியாகவும்  பயன்படுகின்றன. இதனால் மரம் வெட்டுவதைத் தடைசெய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, கருவேல மரத்தை வெட்டுவதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. மேலும், 'இதுகுறித்து தமிழ்நாடு அரசு முழு ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அரசாணை தாக்கல்செய்யப்பட்டது. அந்த அரசாணையில், 'சீமைக்கருவேல மரம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சி செய்வதற்கு 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, மூன்று மாதத்தில் ஆய்வறிக்கையைத் தாக்கல்செய்யும். முதன்மை வனப் பாதுகாவலர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழகப் பேராசிரியர், சட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கியுள்ளனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், அதுவரை சீமைக் கருவேல மரத்தை வெட்டுவதற்குத்  தடை விதித்தது.


[X] Close

[X] Close