இடிக்கப்பட்ட கட்டடத்திலும் இடைவிடாத சிகிச்சை..! - மருத்துவர் புகழேந்திக்கு குவிந்த ஆதரவு

மருத்துவர் புகழேந்தி கிளினிக்

ல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியின் கிளினிக் இடிக்கப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக, மீண்டும் பழையபடி கிளினிக் செயல்படத் தொடங்கியிருக்கிறது. 'கட்டட இடிபாடுகளுக்கு மத்தியிலும் ஜன்னல் ஏறிக் குதித்து அவரிடம் மருத்துவம் பார்க்க, மக்கள் கூட்டம் வந்ததுதான் ஆச்சரியம்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

' மக்கள் மருத்துவர்' என்ற அடைமொழியோடு வலம் மருத்துவர் புகழேந்தி, 30 ஆண்டுகளாக கிராமப்புற மருத்துவ சேவையில் கவனம் செலுத்தி வருகிறார். காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் ஏராளமான மருத்துவமனைகள் இருந்தாலும், புகழேந்தியின் எளிமையாலும் வர்த்தக நோக்கமில்லாத சிகிச்சையாலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அவரிடம் சிகிச்சை பெறச் செல்பவர்களுக்கு சலுகை விலையில் மருந்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ உலகின் மோசடிகளையும் விளக்கி அனுப்புவார். கடந்த சில வாரங்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறையின் குளறுபடிகளையும் எம்.ஆர் தடுப்பூசியின் பின்னணி குறித்தும் தொடர்ந்து பேசி வந்தார். இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகளோடு முரண்பட்டார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி காலையில் அவரது கிளினிக் முற்றிலும் நொறுக்கப்பட்டிருந்தது. கிளினிக் கட்டடத்தின் மேற்கூரை பிரிக்கப்பட்டு, மருந்துக் குடுவைகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. மக்கள் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாத அளவுக்குக் கிளினிக் முன்புறம் ஜல்லிக்கற்களைக் கொட்டியிருந்தனர். இதை அறியாமல் சிகிச்சை பெற மக்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து, விகடன்.காம் இணையத்தளத்தில் விரிவான செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தோம். 

புகழேந்திபுகழேந்தியின் கிளினிக் இடிக்கப்பட்ட தகவலை அறிந்து, இயக்குநர் வ.கவுதமன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதன்பிறகு நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் மருத்துவர் புகழேந்தி. " 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கட்டடத்தில் வைத்தியம் பார்த்து வருகிறேன். கட்டட உரிமையாளரின் மகனுக்கும் எனக்கும் இடையில் அண்மையில் முரண்பாடு ஏற்பட்டது. வாடகைப் பணத்தை அவர் வாங்காததால், நீதிமன்றத்திலேயே வாடகையை செலுத்தி வருகிறேன். இந்நிலையில், என்னை சட்டவிரோதமாக அப்புறப்படுத்துவதற்கான வேலைகளில் இறங்கினார். நான் காலி செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லை. ' சட்டரீதியாக நோட்டீஸ் கொடுங்கள்' என்று அவரிடம் கேட்டேன். அதனை ஏற்றுக் கொள்ளாமல், உள்ளூர் ஆட்களின் துணையோடும் சதுரங்க பட்டினம் காவல்நிலைய போலீஸார் ஆதரவுடனும் என்னை அப்புறப்படுத்தும் வேலைகளில் இறங்கினார். நான் மறுத்ததும், கிளினிக் கட்டடத்தை இரவோடு இரவாக சேதப்படுத்திவிட்டனர்.

இதைப் பற்றிய செய்தி வெளியானதும், காவல்நிலையத்திலேயே பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், கிளினிக் கட்டடத்தின் மேற்கூரையைப் பொருத்திக் கொள்ளவும் மருத்துவம் பார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தனர். கிளினிக் கட்டடத்தை நான் முறைகேடாக ஆக்ரமித்துள்ளதாக, தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அப்படி எந்த சட்டவிரோத காரியத்திலும் நான் இறங்கவில்லை. நான் இங்கு தங்கியிருந்து மருத்துவ உலகின் மோசடிகளைப் பற்றிப் பேசுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. 'என்னைக் கல்பாக்கத்தில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் போதும்' என்ற மனநிலையில் சிலர் செயல்படுகின்றனர். எனக்கு ஆதரவு தெரிவித்து கூட்டம் கூடியதும், இடையூறு செய்யாமல் ஒதுங்கிவிட்டனர். வரும் நாட்களில் சட்டரீதியாகவே போராட இருக்கிறேன்" என்றார் உறுதியாக. 

" மருத்துவர் புகழேந்தியின் கட்டடம் இடிக்கப்பட்ட அன்று, அவருடைய கிளினிக்கில் சிகிச்சை பெறுவதற்காக சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர். கட்டடத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, கட்டடத்தின் ஜன்னல் வழியாக ஏறி, சிகிச்சை பெற வந்தனர். அவர்களுக்கு ஊசி போடுவது, மருந்து தருவது என வானத்தையே கூரையாக்கிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தார் புகழேந்தி. இந்தக் காட்சிகளை சதுரங்கபட்டினம் போலீஸாரே எதிர்பார்க்கவில்லை" என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!