வெளியிடப்பட்ட நேரம்: 09:08 (12/05/2017)

கடைசி தொடர்பு:09:08 (12/05/2017)

தப்பிக்கிறதா தமிழகம்? அடுத்த 2 நாட்களில் இந்த ஊர்களில் எல்லாம் மழை வரும்! #VikatanExclusive

கடந்த மாதம் முதல் வெயில் தனது உக்கிரத்தைக் காட்ட தொடங்கியது. அதில் வரலாறு காணாத வகையில் தமிழ்நாட்டில் வறட்சி நிலவியது. மேட்டூர் அணை வறண்டது. வைகை அணையை வறட்சியில் இருந்து காப்பதற்கு தெர்மாகோல் மூலம் அணையை மூடும் காட்சிகளும் தமிழகத்தில் அரங்கேறின. யானைகளும் மாடுகளும் வறட்சியால் நீரின்றி இறந்து போகும் காட்சிகளும் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் வறட்சியால் வாடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். கால்நடைகளை வந்து பிடித்துக் கொள்ளுங்கள் எனவும், கண்முன்னே கால்நடைகள் இறப்பதைக் காணமுடியாத விவசாயிகளும் வனப் பகுதிக்குள் மாடுகளை விட்டு விட்டனர்.

Rain

நீண்ட காலத்துக்குப் பின்னால் ஏற்பட்டுள்ள வறட்சியானது அனைத்துத் தரப்பினரையும் திண்டாட வைத்து விட்டது. இந்நிலையில் வறட்சிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, கடந்த சில நாள்களாக திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி என ஓரிரு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் ஆலங்கட்டி மழையுடன் கனமாகவும், சில இடங்களில் தூறலாகவும் வந்த வண்ணம் இருக்கிறது. இன்று காலையில் இருந்தே சென்னையின் பல பகுதிகளில் தூரலுடன் கூடிய மழை பொழிந்தது. இந்நிலையில் இந்திய வானிலை மைய பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில், "இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழையை எதிர்பார்க்கலாம்" என கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வானிலை மைய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பாலசந்திரனிடம் பேசினோம்.

”சென்னையில் கணக்கிடப்படும் வானிலையானது ஐந்து நாட்களுக்கு மட்டுமே கணக்கிட முடியும். இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் பெய்யும் மழை அளவு கணக்கிடப்படும். அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்யும். தென் தமிழகத்திலும் நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். மற்ற இடங்களில் கோடை மழை பெய்யும். கடந்த 24 மணிநேரங்களில் நல்ல மழைப்பொழிவு இருந்தது. நேற்றைய நிலவரப்படி, சிவகாசியில் 13 செ.மீ அளவும், பாபநாசத்தில் 12 செ.மீ, ஶ்ரீவில்லிபுத்தூரில் 9 செ.மீ, சங்கரன் கோவிலில் 8 செ.மீ, செங்கோட்டை மற்றும் தென்காசியில் 7 செ.மீ, தாளவாடி (ஈரோடு), பெரியாறு (தேனி) 6 செ.மீ மழைப்பொழிவு, வாட்ராப், கிருஷ்ணகிரி மற்றும் ஆயக்குடியில் 5 செ.மீ மழைப்பொழிவும், வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டம், நடுவட்டத்தில் 4 செ.மீ மழைப்பொழிவும் இருந்துள்ளது. மற்ற இடங்களில் 4 செ.மீ-க்கும் குறைவான மழைப்பொழிவு இருந்துள்ளது.” என்றார்.

மழை


இதுகுறித்து, ஆஸ்திரேலியா வானிலை ஆராய்ச்சி மையத்தின் தரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய தீபகற்ப பகுதியையும், தெற்கு ஆசிய பகுதிக்கும் பெரும் தலைவலியாக இருந்த எல்நினோ முடிந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த சென்னை பெருவெள்ளமும் எல்நினோவால்தான் என்றும் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு கடும் வறட்சியைச் சந்தித்த தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழையாவது சரியாகப் பொழிந்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும், தமிழ்நாடும் செழிக்கும். இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டபோதே அணையைத் தூர்வாரியிருந்தால், வரும் காலங்களில் பெய்யும் மழையைத் தேக்கி வைக்க உதவியாக இருக்கும். இந்த வருஷமாவது அணையைத் திறந்துவிடாத நிலை வரட்டும்.


டிரெண்டிங் @ விகடன்