Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அண்ணா... எங்களுக்கு இப்படியொரு உலகம் வேண்டாம்!" மதுவுக்கெதிராக 7 வயது மாவீரன்

ஆகாஷ்

''சாக்லெட்டுக்கு ஆசைப்படும் குழந்தைகள் என்ன வேண்டுமாலும் செய்வார்கள், அதைப்போலவே மதுவுக்கு ஆசைப்படும் குடிகாரர்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அடம் பிடிப்பார்கள், அழுவார்கள், சொன்ன பேச்சைக் கேட்கமாட்டார்கள். ஆனாலும்கூட குழந்தைகளுக்கு அடுத்தவருடைய சந்தோஷத்தைக் கெடுக்கத் தெரியாது. குடிகாரர்களோ மதுவுக்கு அடம்பிடிப்பார்கள், திருடுவார்கள், பொய் சொல்வார்கள், பெண்களிடம் தவறு செய்வார்கள், அவ்வளவு ஏன் கொலையும் செய்வார்கள். இதனால்தான் நான் மதுவுக்கு எதிராகப் போராடத் தொடங்கியுள்ளேன். தமிழகம் முழுவதுமுள்ள மதுக்கடைகளை தமிழக அரசு உடனே மூட வேண்டும். இல்லையென்றால் நான் போராடிக்கொண்டே இருப்பேன். என்னோடு போராட்டத்தில் கலந்துகொள்ள என்னைப் போன்ற சிறுவர்கள் களத்தில் இறங்குவார்கள்.'' என்று கண்ணீர் குரலில் தெளிவாகச் சொல்கிறான் 7 வயதேயான ஆகாஷ் என்ற சிறுவன்.

கேளம்பாக்கம் அருகேயுள்ள படூரைச் சேர்ந்தவன்தான் இந்த ஆகாஷ். ஏழு வயதேயான இந்தச் சிறுவன் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி படூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடச் சொல்லி மக்கள் போராடி வந்தனர். ஆனாலும்கூட போராட்டத்தைத் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, அரசுக்கு பாடம் புகட்டும் விதமாக  அந்த மதுக்கடையைச் சூறையாடினர். ஆனாலும், அசராத தமிழக அரசு மறுபடியும் புதிதாக மதுக்கடையத் திறந்து மது விற்பனையை ஜோராக நடத்தி வருகிறது. அப்போதுதான் சிறுவன் ஆகாஷ் போராட்டக் களத்துக்குள் குதித்தான். தோளில் புத்தகப் பையை தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவன் ஆகாஷ், 'குடியை விடு படிக்க விடு' என்ற வாசகம் அச்சிட்ட பதாகையை கையில் ஏந்தி மதுக்கடைக்கு முன் போராட வந்துவிட்டான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் சிறுவன் ஆகாஷிடம் எவ்வளோ பேசிப்பார்த்தும் பயனில்லை. ''மதுக்கடையை மூடாமல் நான் இங்கிருந்து செல்லமாட்டேன்'' என்று விடாப்பிடியாக கூறினான். பிரச்னை வேறு ஒரு புதிய திசையில், உருமாறுவதைக் கண்ட காவலர்களும் 'மதுக்கடையை மூடிவிடுவதாக' வாக்குறுதி கொடுத்த பின்னர்தான் அந்தச் சிறுவனும் கலைந்து சென்றான். ஆனாலும், சில நாள்கள் கழித்து மீண்டும் கடையைத் திறந்து தமிழக அரசு தன் குறுக்குப் புத்தியை காட்டிவிடவே கோபம் கொண்ட ஆகாஷ், ''இனி படூரில் மட்டுமல்ல... தமிழகத்தில் எங்குமே மதுக்கடையைத் திறக்கக் கூடாது. இதற்காக என்னைப் போன்ற சிறுவர்களை அழைத்துக்கொண்டு, மதுக்கடைகளை மூடும் வரை நான் போராடுவேன்'' என்று கூறி தமிழக அரசை எதிர்த்து மீண்டும் பதாகையைக் கையில் தூக்கிப் பிடிக்க ஆரம்பித்துவிட்டான் அந்த வீரச் சிறுவன்.

இந்த சிறுவயதில் மதுவுக்கு எதிராக போராடுவது என்றால், அது சாதாரண விஷயமா? கண்டிப்பாக மதுவுக்கு எதிராகப் போராடும் அந்த மாவீரனை பார்த்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் அவரை நேரில் சந்தித்தோம்...

''எங்க ஊர்ல மதுக்கடைகளே இருந்ததில்ல. ஆனா இப்போ வந்துடுச்சி. முதல்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மதுக்கடைகளை மூடினாங்க. ஆனா அதுக்கப்புறம் ரெண்டு நாள்ல திறந்திட்டாங்க. இதை இப்படியே விடக்கூடாதுன்னுதான் மதுக்கடைகளுக்கு எதிரா நான் போராட்டத்துல இறங்கினேன். மதுவால் எவ்வளவு குடும்பங்கள் சீரழிஞ்சிக்கிட்டு வருது. எங்க ஊர்ல மதுக்கடை வந்ததால நிறைய இளைஞர்கள், பெரியவங்கலாம் குடிச்சிட்டு அசிங்கமாப் பேசுறாங்க. ரோட்டுல போற பொண்ணுங்களைலாம் கிண்டல் பண்றாங்க. அதனால்தான் எங்க ஊர்ல மதுக்கடை இருக்கக்கூடாதுன்னு போராட்டம் செய்ய ஆரம்பிச்சேன். ஆனா இப்போ தமிழகம் முழுவதும் இருக்குற அனைத்து கடைகளையும் மூடச் சொல்லி போராட ஆரம்பிச்சிருக்கேன். மதுவுனால அவங்கவங்க வீட்டுல எவ்ளோ பிரச்னை வருது தெரியுமா? ஸ்கூல் படிக்கிற பசங்கலாம் ஃபீஸ் கட்ட முடியாம தவிக்கிறாங்க. குடிச்சிட்டு வந்து தினமும் மனைவியையும், பிள்ளைகளையும் ஆண்கள் அடிக்கிறாங்க. அதனால் அந்தப் பிள்ளைங்க சந்தோஷமா இருக்க முடியறது இல்லை. மதுவுக்கு அடிமையாகிட்டா மூளை தப்பு பண்ணச் சொல்லும். அதனாலதான் திருட்டு, கொலை, கொள்ளை எல்லாமே நடக்குது. ஒவ்வொரு ஊருலயும் கடையைத் திறந்தா இதுவரைக்கும் குடிக்காம இருக்குற பசங்களுக்கும் குடிக்கணும் என்கிற எண்ணம் வரும். அப்படி எண்ணம் வந்து ஒரு முறை மதுவை நாம் தொட்டுட்டோம்னா, அதுக்கப்பறம் நாமே அந்த மதுவை விட்டாலும், நம்மளை அந்த மது விடாது. இவங்க குடிச்சிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு போறதால, இவங்களுக்கு மட்டும் ஆபத்து கிடையாது. எதிர்ல வர்றவங்க வாழ்க்கையையும் அழிச்சிடுறாங்க. இதுமாதிரி குடிச்சிட்டு வண்டி ஓட்டுறவங்களால எவ்வளவு குடும்பங்கள் இன்னைக்கு அனாதையா நிக்குது தெரியுமா? இதுல இவ்ளோ பிரச்னை இருக்குனு தெரிஞ்சும் அப்பறம் ஏன் அரசாங்கமே இதை நடத்துதுன்னுதான் தெரியல... கேட்டா மக்களுக்காகத்தான் அரசாங்கம்னு சொல்றாங்க. இன்றைய இளைஞர்கள்தான் நாளைய இந்தியான்னு சொல்லுறாங்க. ஆனா நாளைய இளைஞர்களையும் சேர்த்து இன்னைக்கே இவங்க குடிகாரங்களா மாத்தி வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி நாடு முன்னேறும்? அதனால்தான் நான் போராடணும்னு முடிவெடுத்தேன். முதலமைச்சர பாக்க அனுமதி கேட்டுருக்கேன். அப்படி முதலமைச்சர பாத்தா மதுக்கடையை தயவு செஞ்சி மூடுங்கனு சொல்லுவேன். இல்லனா... அவர்கிட்டயே மதுக்கடைகள் மூடுற வரைக்கும் நான் போராடிக்கிட்டே இருப்பேன்னு சொல்லிட்டு வருவேன். 

போராட்டத்தில் ஆகாஷ்

வர சனிக்கிழமை (13-05-2017) படூர்ல இருக்குற மதுக்கடைக்கு முன்னாடி உக்காந்து படிக்கிற போராட்டத்துல ஈடுபடப் போறேன். என் போராட்டம் அமைதியான காந்திய வழி போராட்டம். சாலையில உக்காந்து போக்குவரத்துக்கு இடையூறாகவோ அல்லது மதுக்கடையை அடித்து உடைப்பதாகவோ இருக்காது. அமைதியான முறையில் மதுக்கடையின் முன் அமர்ந்து பாடப் புத்தகங்களை படிப்பேன். நான் மட்டுமல்ல, என்னைப்போன்ற நிறைய சிறுவர்கள் இந்தப் படிக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள். மதுவுக்கு எதிராகப் போராடத்துடிக்கும் யார் வேண்டுமானாலும், அமைதியான முறையில் போராட எங்களுடன் கலந்துகொள்ளலாம்'' என்று நீண்ட விளக்கம் கொடுத்த ஆகாஷ், போராட்டத்துக்கு துணை நிற்குமாறு மக்களுக்கும் அழைப்பு விடுத்தான்.''உனது முயற்சிகள் விரைவில் ஈடேற மனமார்ந்த வாழ்த்துகள்'' என்று சிறுவன் ஆகாஷ்க்கு வாழ்த்து சொல்லிவிட்டு நாம் கிளம்ப எத்தனிக்க... ''அண்ணா... எங்கள மாதிரி சின்ன பசங்க வருங்கால குடிகாரங்களா மாறக்கூடாதுன்னு நீங்க நினச்சீங்கன்னா... நீங்களும் வந்து அமைதியான முறையில் எங்க போராட்டத்துல கலந்துக்கங்கண்ணா..." என்று நம்மையும் போராட்டக் களத்துக்கு அழைத்தான் ஆகாஷ்!

அப்துல்கலாம் கூறிய புதிய இந்தியாவைப் பிறப்பிக்கப் போகும் வருங்கால இளைஞர்கள் இவனைப் போன்றவர்கள்தான்! இந்தச் சிறுவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் செய்தி என்ன தெரியுமா? "நாளைய இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக மாறக்கூடாது என்றால், இந்த சிறுவர்களின் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டு மதுவை விரட்டப் போராடவேண்டும். இல்லையென்றால் வருங்கால இளைஞர்களை வழிமாறிப் போகச் செய்த பழிச்சொல் நம்மையே சேரும்!''

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close