Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அப்ரூவர் ஆகும் அமைச்சர்கள்!

அமைச்சர் விஜயபாஸ்கர்

''அடுத்தடுத்த நெருக்கடிகளில் அமைச்சர்கள் சிக்கி சின்னாப்பின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், முதலமைச்சரோ எந்தக் கவலையும் இல்லாமல், குடும்பத்தோடு திருப்பதி தரிசனத்துக்குப் போய் வந்து விட்டார்!'' என்று கோட்டை வட்டாரத்தில் வியக்கிறார்கள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, அவர் மனைவி ரம்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணை... என 2016- ல் மிச்சம் வைத்ததை நோக்கி  வருமான வரித்துறை நகர்ந்து கொண்டிருக்கிறது. 

கடந்த ஆண்டு, தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த ராமமோகன ராவ் வீடு, அவரது உறவினர்களின் வீடு என மொத்தம் 12 இடங்களில் வருமான வரித்துறையின் ரெய்டு நடந்தது. தமிழக வரலாற்றிலேயே இல்லாத வகையில், கோட்டைக்குள் புகுந்து தலைமைச் செயலாளர் அறையில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கைகளின் விளைவாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதே ராமமோகன ராவ் இப்போது மீண்டும் பணிக்குத் திரும்பியிருப்பதுதான் அடுத்தக்கட்ட ஆச்சர்யம்.

வருமான வரித்துறையினரின் ரெய்டுக்கான தொடக்கப் புள்ளி கரூர் அன்புநாதன் வீட்டில் இருந்துதான் ஆரம்பித்தது. பொதுத் தேர்தலின்போது பறக்கும் படையினர் நடத்திய  ரெய்டில், பைனான்சியர் அன்புநாதன் வீட்டில்  4.70 கோடி ரூபாய் சிக்கியதாகச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் அந்த அன்புநாதன் குறித்த விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது. 

முன்னாள் மேயர், முன்னாள் அமைச்சர்கள் என்று மீண்டும் சென்னையில் ரெய்டு தொடர்ந்தது. அடுத்து கோவை கீர்த்திலால் காளிதாஸ் நகைக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடைபெற்றன. 'இந்த ரெய்டுகள் அ.தி.மு.க.வை பலவீனப் படுத்துவற்காகவே நடக்கிறது' என்று பேசப்பட்ட நேரத்தில், தி.மு.க. மீதும் ஐ.டி. ரெய்டு திரும்பியது.

தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. கொஞ்சம் இடைவெளியில், அப்போலோ மருத்துவ நிறுவனத்தின் கதவுகளையும் ஐ.டி அதிகாரிகள் தட்டினர். 'அப்போலோ குழும' த்தின் 30 இடங்களில் தொடர் ரெய்டு போனது. 2016 ஜூன் முதல் செப்டம்பர் முடிய இப்படி ரெய்டுகள் நடந்தன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரெய்டின் வேகம் குறைந்திருந்தது.

மீண்டும் முழுவேகத்துடன் 2016 டிசம்பரில் ரெய்டில் இறங்கிய வருமான வரித்துறை,  தமிழக அரசின் காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியை மடக்கியது. காவிரி டெல்டா பகுதிகளில் சேகர் ரெட்டியின் பினாமியாக மணல் குவாரிகளை நடத்தி வந்த சப்-ஏஜென்ட்கள் தலைமறைவாகினர். சேகர் ரெட்டியின் பங்குதாரர்களான பிரேம், சீனிவாச ரெட்டியின் வீடு, அலுவலகங்களிலும் ரெய்டு தொடர்ந்தது. டி.ஐ.ஜி. தேன்மொழி தலைமையில், சி.பி.ஐ டீமும் விசாரணையில் இறங்கியது.

இதில், 2001-ம் ஆண்டில்  ஓ.பன்னீர்செல்வம் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்கு சேகர் ரெட்டியின் நட்பு கிடைத்த தகவல் தெரியவந்தது. மேலும், ரெட்டியும், ஓ.பன்னீர்செல்வமும் திருப்பதியில் தரிசனம் முடித்து மொட்டையுடன் காட்சியளித்த புகைப்படங்களும் வெளியாயின.  

கொடநாடு பங்களா

அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் ஓ.பன்னீர்செல்வம் கையிலிருந்து முதல்வர் பொறுப்பு சசிகலா கைக்கு போவது போல் போய், பின்னர் அது எடப்பாடி பழனிசாமி கைக்குப் போனது. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அ.தி.மு.க-வே இரண்டு துண்டுகளாக உடைந்தன. 

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், சசிகலா ஆதரவு வேட்பாளரான டி.டி.வி. தினகரனுக்கு வாக்கு சேகரித்தார் சுகாதாரத்துறை அமைச்சர்  டாக்டர் விஜயபாஸ்கர். முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும் தினகரனுக்கு ஆதரவாக களத்தில் பிரசாரம் செய்துவந்தனர். இந்த நிலையில், சீனியர்கள் பலர் இருந்தாலும் தொகுதி செலவுக்கு என பிரிக்கப்பட்ட 89 கோடி ரூபாயை  சுகாதாரத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர்தான் வைத்துள்ளார் என்ற தகவல் வெளியானது. 

முதலமைச்சரில் இருந்து மூத்த அமைச்சர்கள் வரையில், அனைவருக்கும் டாக்டர் விஜயபாஸ்கர் பணத்தை பிரித்துக்  கொடுத்த ஆதாரங்கள் உள்ளதாக தகவல் போனது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள், நண்பர்கள் என்று  அனைவரின் வீடுகளுக்கும் ரெய்டு போயினர் வருமான வரித்துறையினர்.

இந்த நிலையில்தான் டாக்டர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான  அரசு காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு போனபோதே காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் வீட்டிலும் ரெய்டு நடந்தது. ஏறக்குறைய  'அப்ரூவர் மனநிலையில் இருந்தவரை இப்படி இழந்து விட்டோமே' என்ற படபடப்புடன் வருமான வரித்துறையினர் இந்த மரணத்தைப் பார்க்கிறார்கள்.

அமைச்சர்களுக்கு எதிராகக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்துக்கும் முக்கிய சாட்சியாக இருந்த காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் மரணம், மொத்த விசாரணையையும் திசைதிருப்பும் விதத்தில் அமைந்திருக்கிறது. 

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா காவலாளி  கொலை, காவலாளி கொலையில் தேடப்பட்ட சயன் விபத்தில் சிக்கி படுகாயம், முக்கிய குற்றவாளியாகச் சொல்லப்பட்ட ஜெ.-வின் கார் டிரைவர் கனகராஜூம் விபத்தில் சிக்கி உயிரிழப்பு... என்று த்ரில்லர் படம் போலவே தமிழ்நாட்டின் அரசியல் மரணங்களின் பின்னணிக் கதை  போகிறது.

பைனான்சியர் அன்புநாதனில் தொடங்கி, காண்ட்ராக்டர் சுப்பிரமணியம் வரையில் பல ரெய்டுகள், பல மர்ம மரணங்கள் என்று ஏதோ இனம்புரியாத திகிலில் உறைந்து கிடக்கிறது, தமிழகம். ரெய்டு, லஞ்சம், ஊழல் உள்ளிட்ட தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் வரிசையில் மர்ம மரணங்களும் இப்போது சேர்ந்திருக்கின்றன. அந்தந்த லெவலில் அப்படியே  அவைகளை கிடப்பில் போட்டு வைத்திருப்பதும்  வெளிப்படையாகவே தெரிகிறது. 

ஏன் ரெய்டு நடக்கிறது? யாரை மிரட்ட அல்லது பணிய வைக்க இந்த ரெய்டுகள் நடக்கிறது? சில முக்கியத் துறைகளின் அமைச்சர்களை 'அப்ரூவர்' ஆக்கும் முயற்சியில் வெற்றி கிடைத்திருப்பதாகவும் நம்பகமான வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. உள்ளாட்சித் தேர்தலுக்கான காலமும், 'அப்ரூவர்' ஆகும் நாளும் நாள் கணக்கில் முன்-பின் வரலாம் என்பது அடுத்தக்கட்ட கூடுதல் தகவல். இப்படிப்பட்ட சூழலில்தான் அமலாக்கத்துறையைக் கண்டித்து இருக்கிறார் ஒரு நீதிபதி.

"அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், தினகரன் கைது செய்யப்பட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு 3 வாரங்களாகியும் அமலாக்கத்துறை அதனைத் தாக்கல் செய்யாதது ஏன் ?" என்று  சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி, வளர்மதி கேட்டிருக்கிறார்; கூடவே தனது கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். 

''என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்? கொஞ்சம் சொல்லுங்களேன், எங்களுக்குப் பயமாக இருக்கிறது...'' என்று கேட்பவர்கள், கட்டுரையின்  தொடக்க வரிகளைப் படித்துக் கொள்ளலாம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close