ஒரு முடிவெடுக்கப் போறேன்; உன்னால தாங்கமுடியாது! திருமாவளவனின் தாயார் பாசப் போராட்டம்

"கட்சியில் உள்ள அனைவரது குடும்பத்துக்கு தாலி எடுத்துக்கொடுத்து பலரது குடும்பங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறார் என் மகன். ஆனால், அவன் வாழ்க்கையில் விளக்கேற்ற முடியவில்லை, என் சந்ததியே முடிந்து விடுமா என்று பயத்தில் இருக்கிறேன். இதில் ஒருமுடிவு தெரியாமல் விடமாட்டேன்'' என்று திருமாவளவனுக்கு எதிராகப் பாசப் போராட்டத்தை தொடக்கியிருக்கிறார் திருமாவின் தாய் பெரியம்மா. அவரை சந்தித்தோம். அப்போது, "என் வேதனை என் மகனுக்குப் புரியவில்லையே" என்று கண்ணீரோடு பேசத்தொடங்கினார் பெரியம்மா.

"சின்னச் சின்ன பசங்களுக்கெல்லாம் கல்யாணம் நடக்குதுப்பா. என் மகன் மட்டும் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கமாட்டேங்குறானு தெரியலப்பா. நான் என்மகனிடம் கல்யாணத்தை பற்றிப் பேசத்தொடங்கினாலே பேச்சை மாத்திடுறான். அம்மா உனக்கு உடம்பு சரியில்லைனு சொன்னில்ல. உடனே சென்னைக்கு வாம்மான்னு சொல்லி பேச்சை மாத்திடுவான். அவனுக்கு 25 வயசுலயிருந்து பொண்ணு பார்க்குறேன். இப்போது 54 வயசு. 30 வருசமா போராடுறேன். அவன் மனசு கரையல. நான் எவ்வளவு மனவேதனையில் இருப்பேனு பாருங்க. அவன நெனச்சே உருகிப்போச்சு என் ஒடம்பு. எனக்குப் பணம் கொடு, நல்ல மெத்த வீடு கட்டு, என்ன சொகுசா வாழ வைய்யுனா கேட்கிறேன். நீ ஒரு கல்யாணம் பண்ணிக்ககூடாதானுதானே கேக்குறேன். என்னோட கஷ்டம் ஏண்டா தம்பி உனக்கு புரியமாட்டேங்குது.

 

 

2009ல் அப்பா உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தப்போ திருமணம் செய்துகொள்வதாக அப்பாவிடம் சத்தியம் செய்துகொடுத்தாயே அது என்னாச்சிடா மகனே. அவரை ஏமாத்திட்ட மாதிரி என்னை ஏமாத்த நினைக்காதப்பா. உன்னோட சந்ததி இத்தோட முடிஞ்சிடக் கூடாதுடா தம்பி. உனக்கு நல்லபடியா கல்யாணம் முடிஞ்சிட்டா போதும். அத பாத்துட்டு நிம்மதியா கண்ணை மூடிடுவேன்.  எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம் தம்பி.  கல்யாணம் மட்டும் பண்ணிக்கோடா, அது போதும் எனக்கு! என் மகனுக்கு கல்யாணம் ஆகனும்னு சமயபுரம், திருமணஞ்சேரி, சிதம்பரம் நடராஜர்கோயில், சூரியநாரயணர் கோயில்னு நான் போகாத கோயிலில்ல. வேண்டாத தெய்வமில்ல. இதுவரைக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஜோசியர்கிட்ட ஜாதகம் பார்த்திருப்பேன். இப்போதுகூட சேலம் நாலு ரோட்டில் உள்ள ஜோசியரிடமும் ஜாதகம் பார்த்து வந்தேன்.

கும்பராசி, மீன லக்னத்துக்கு இவனோட ஜாதக அமைப்புபடி ஆறு மாசத்துக்குள்ள கல்யாணம் நடந்தாதான் உண்டு. அப்புறமா நடக்காதுனு சொல்லிட்டாங்க! ஒவ்வொரு நாளும் கல்யாண மண்டபத்திலிருந்து பாட்டு சத்தம் கேட்கும்போதெல்லாம் என் நெஞ்சே பதறுது. சின்னச் சின்ன பசங்களுக்கெல்லாம் கல்யாணம் நடக்குதே. என்மகனுக்கு மட்டும் நடக்கலயேனு நெனைக்கும்போது ஒரு தாயின் மனம் என்ன பாடுபடும் தெரியுமா? எனது மகனே என்னிடம் வந்து, அம்மா எனக்கு கல்யாணம் பண்ணுமானு சொல்லணும், அப்படி இல்லைனா நானே ஒரு பொண்ண பாத்துட்டு, பத்திரிகையும் அடிச்சிட்டு வந்து தாலி கட்டுடானு சொல்லப் போறேன். அதையும் செய்யலைனா... நான் ஒரு முடிவு எடுக்கப் போறேன். அந்த முடிவு உன்னால தாங்கமுடியாத முடிவாக இருக்கப் போகுது பாருடா தம்பி! என்று கண்ணீரோடு முடித்தார் தாய் பெரியம்மா.

- எம்.திலீபன்

வீடியோ: ராபர்ட்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!