வெளியிடப்பட்ட நேரம்: 18:09 (12/05/2017)

கடைசி தொடர்பு:18:09 (12/05/2017)

ப்ளஸ் டூ தேர்வில் ரேங்கிங் ஒழிப்பு ஏன் அவசியம்? கல்வியாளர் ஆயிஷா நடராஜன் #PlusTwo

ப்ளஸ் டூ

ப்ளஸ் டூ தேர்வு முடிவு வரும் நாட்களில் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது... யார் முதல் இடம், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர், தனியார் பள்ளியா, அரசுப் பள்ளியா.... உள்ளிட்ட பல விஷயங்களுக்கு இந்த ஆண்டு விடைகொடுக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் டூ தேர்வு முடிவில் ரேங்கிங் முறை ஒழிக்கப்படுகிறது என பள்ளி கல்வித் துறை அறிவித்திருக்கிறது. இது குறித்து கல்வியாளர் ஆயிஷா நடராஜனிடன் கேட்டோம்.

"இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தமிழக பள்ளிக் கல்வித்துறை மாற்றங்களை அறிவித்தது மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது.

பொதுத் தேர்வுகள் என்றதுமே அச்சம் ஒட்டிக்கொள்வது இயல்பாகி விட்டது. ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தேர்வு எனும் மனநிலையும் ஒட்டிக்கொண்டது. மதிப்பெண்கள்தான் எல்லாமே என்பது போல ஒரு மன அழுத்தம் வேறு எதுவுமே கிடையாது. இது மிகத் தவறான அணுகுமுறை என்று உளவியல் அறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பலரும் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்தும் நமது 'பெரியவர்கள்' அதை விடவில்லை.

இதனால், எப்படியாவது முதல் மதிப்பெண் எனும் பிரமாண்ட பந்தயமாக கல்வி மாறியது... கேள்வி - பதில் மனப்பாடம் தவிர வேறெதுவும் கிடையாது என்பதைப் போன்ற பந்தயம்! மதிப்பெண்களே ஒருவரது அறிவைத் தீர்மானிக்கும் விஷயமாக மாறிப் போனது தான் துரதிர்ஷ்டமானது. இதனால் சுட்டிகளின் கதை, கவிதை, ஓவியம், விளையாட்டு என அனைத்து திறமைகளும் கவனிப்பாரற்று கிடந்தன.

ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் குழந்தைகள் ஏறக்குறைய தமிழ் நாட்டில் மட்டும் 20 லட்சம். அவர்களில் முதல் மதிப்பெண், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மதிப்பெண்... உள்ளிட்டப் பிரிவுகளில் 20 பேர் தமிழகத்தின் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு மகுடம் சூட்டப்படுவர். இதில் தனியார் பள்ளிகளுக்கு இடையே கடும் போட்டி. இருபத்தி நான்கு மணி நேர - ஸ்கூல் கூட இருக்கிறது. மாநில அளவில் முதலிடம் பிடித்த ஒருவரது பெயர் மிஞ்சிமிஞ்சி போனால் மூன்று நாட்களுக்கு ஊடகங்களில் அல்லோலப்படும். அப்புறம், அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பது யாருக்குமே தெரியாது. முதலிடம் என்பது, அந்த ஆண்டு அந்த தேர்வில் அந்த கேள்விதாளில் வெற்றி அவ்வளவுதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ப்ளஸ் டூ

இந்த 'பந்தயத்தால்' முதல் மதிப்பெண் - போதையால் மாணவர்களுக்கு மன அழுத்தம், இருதயநோய் உட்பட உடல் உபாதைகள் ஒரு புறம்; வெறுப்புஉணர்வு, தனிமைப்பட்டுப்போவது, பொறாமைக் கொள்ளும் குணம் போன்ற உளவியல் உபாதைகள் மறுபுறம். தேர்வு முடிவில் மதிப்பெண் குறைந்தாலே வீட்டில் களேபரம்தான். சில மாணவர்கள் தற்கொலை முடிவுக்குச் செல்லும் சோகமும் நிகழும். அறியாமை கண்களைத் திறக்கும் கல்வி சமூக அவலமாக மாறுவது முறைதானா? கல்வி - மலைவாழை போல குறுத்து விட்டு - செல்வமாய்ப் பெருக வேண்டிய வரம். அது, ஒரு பெரும் சாபமாக மாறக்கூடாது. இதனால் பல ஆண்டுகளாக கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சீர்த்திருத்தங்களை வேண்டி வந்தனர்.

தாய்மொழியான தமிழில் கற்கும் மாணவச்செல்வங்களின் மாண்புகளைக் காப்பாற்ற, அரசு - தனியார் கல்வி எனும் இடைவெளியை, பாகுபாட்டை முடித்து வைக்க இனி தேர்வு முடிவுகளை அரசு புதிய விதமாக அறிவிக்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது சுட்டிகள் கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர். தேர்வு எழுதி வெற்றி பெறும் எல்லாருமே வெற்றியாளர்கள் என்பதும் இது ஓட்டப்பந்தயமல்ல வாழ்வின் ஒரு படி நிலை மட்டுமே என்பதும் மிகவும் பெருமைக்குரிய அறிவிப்பு.

இன்னும் பல சீர்திருத்தங்கள் வரஇருக்கின்றன என்று அவர்கள் அறிவித்திருப்பது மேலும் நமக்கு எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வெறும் மனப்பாட அறிவை பரிசோதிக்காமல் படைப்பாக்கத்திற்கும் சொந்த சிந்தனை வளர்ச்சிக்கும் அறிவியல் ஆய்வுகள் - கண்டுபிடிப்புகள் உட்பட அனைத்தையும் ஊக்கப்படுத்தும் ஒரு கல்விமுறையாக தமிழகத்தின் கல்வி தற்போதுள்ள தலைமைக்கு கீழ் கண்டிப்பாக வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கையை இந்த ஒரு அறிவிப்பு நமக்கு விதைக்கிறது. பள்ளிக் கல்வித்துறைக்கு மகிழ்ச்சியுடன் பெரிய பூங்கொத்தை அவசியம் கொடுக்க வேண்டும்." என்று நம்பிக்கையோடு முடித்தார்.

 


டிரெண்டிங் @ விகடன்