வெளியிடப்பட்ட நேரம்: 20:03 (12/05/2017)

கடைசி தொடர்பு:20:01 (12/05/2017)

"இன்ஸூரன்ஸ் ஏஜென்ட், புடவை பிஸினஸ்னு அவ்ளோ கஷ்டம்... லவ் யூ அம்மா!" - ஐஸ்வர்யா ராஜேஷ் #MothersDay

அம்மாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

''அப்பா இறந்த பிறகு, என்னையும் அண்ணனையும் காப்பாத்த அம்மா பட்டக் கஷ்டங்கள் ரொம்பவே அதிகம். எந்த ஒரு சூழல்லயும் நாங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தன்னை ரொம்பவே வருத்திக்கிட்ட அவங்கதான், எனக்கான உலகம். அவங்கள விட்டா, எனக்கு வேற யாரும் கிடையாது" என தன் அம்மா நாகமணியைப் பற்றி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

"அப்பா தெலுங்கு படங்கள்ல ஹீரோவா நடிச்சுட்டு இருந்தாரு. அப்பலாம் நாங்க சின்னப் பசங்களாம். நல்லா வசதியா இருந்தோம்னு அம்மா சொல்வாங்க. எனக்கு ஆறு வயசா இருக்கிறப்ப அப்பா தவறிட்டாங்க. அதுக்குப்பிறகு குடும்பச் சூழல் ஆட்டம் காண ஆரம்பிச்சது. நாங்க கஷ்டமான சூழ்நிலையில வளர்றோம்ங்கிறதை எங்களுக்கு தெரியாத அளவுக்கு அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்களாம். ரியல் எஸ்டேட், இன்ஸூரன்ஸ் ஏஜென்ட்டா வேலை செஞ்சாங்க. கூடவே பாம்பே, கொல்கத்தாவுக்குபோய் துணிகள் எடுத்துட்டு வந்து நம்மூர்ல விற்பாங்க. இப்படி தெரிஞ்ச, தன்னால முடிஞ்ச வேலைகளை ஓய்வில்லாம செஞ்சு எங்கள வளர்த்தாங்க. உடுத்திக்க நல்ல துணி, பிரபலமான ஸ்கூல்ல படிப்புனு எங்களை எந்தவிதத்திலேயும் அம்மா கஷ்டப்பட விடலை.  படிப்புதான் எங்களுக்கான மூலதனம்னு உணர்த்திட்டே இருப்பாங்க. அம்மா படுற கஷ்டத்தை உணர்ந்து, நாங்களும் எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாம வளர்ந்தோம்.

மத்தவங்களுக்கு உதவுற குணம் கொண்ட அம்மா, அந்த குணத்தாலயே நிறையப் பேரால ஏமாற்றப்பட்டாங்க. அதோட விளைவு, தி.நகர்ல இருக்கிற எங்க வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. 'என்னோட நிலைமை உங்க ரெண்டு பேருக்கும் வரக்கூடாதுன்னு நாங்க வளர்ந்த பிறகு கஷ்ட நஷ்டத்தை சொல்லிக்கொடுத்து வளார்த்தாங்க. அப்பா சினிமாவுல இருந்ததால, நானும் சினிமாவுல நடிக்கணும்னு அம்மாவுக்கு ஓர் ஆசை இருந்துச்சு. சின்ன வயசுல பார்த்த தெலுங்குப் படங்கள்ல வரும் ஹீரோயின்ஸ் ரொம்பவே அழகா இருப்பாங்க. அதனால எனக்கும் மீடியாவுக்குள்ள போகலாம்னு அடிமனசுல ஆசை இருந்தது. அந்த வாய்ப்பு யதேச்சையா அமைஞ்சுது. அப்படித்தான் டான்ஸ் நிகழ்ச்சியில கலந்துகிட்டு கொஞ்சம் ஃபேமஸ் ஆனேன். அடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளினியானேன். அப்படியே சினிமாவுக்கு முயற்சி எடுக்கலாம்னு இருந்தப்போ, 'நீயெல்லாம் சினிமாவுக்கு லாயக்கே இல்லை'னு நிறையப்பேரு அம்மா காதுபட கேவலமா, கிண்டலா பேசினதா சொல்லுவாங்க. 

அம்மா, அண்ணனுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

'இந்த ஊர் சொல்றதையெல்லாம் பெருசா எடுத்துக்காத. உன்னோட திறமை என்னன்னு எனக்குத் தெரியும். நிச்சயமா ஒரு நாள் நீ பெரிய ஹூரோயினா வருவே'ன்னு அம்மா என்னை ஊக்கப்படுத்தினாங்க. நம்மள கிண்டல் பண்ணிப் பேசினவங்க முன்னாடி, நாம ஹீரோயினா சாதிச்சுக்காட்டணும்னு எனக்குள்ள வைராக்கியம் இருந்துச்சு. அம்மா வாய் முகூர்த்தப்படியே, 'அட்டக்கத்தி' படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சுது. அப்படியே நல்ல கதைகளை செலெக்ட் செஞ்சு நடிச்சு, இன்னைக்கு எல்லோருக்கும் பரிட்சயமான நடிகையா இருக்கேன்" எனச் சிரிக்கிறார். 

’’எந்த ஹீரோயினும் நடிக்கத் தயங்குற 'காக்கா முட்டை' படத்துல வர்ற கேரக்டர்ல துணிஞ்சு நடிச்சேன். அந்தப் படத்துக்கு நிச்சயமா விருதுகள் வரும்னு அம்மா ரொம்பவே நம்பிக்கையோட இருந்தாங்க. ஆனா ஒரு விருதுகூட கிடைக்கல. நான் விருதையெல்லாம் பெருசாவும் எடுத்துக்கல. ஆனா, 'நிச்சயமா கூடிய சீக்கிரம் உனக்கு பெருசா ஒரு விருது வரும்'னு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்க சொன்னமாதிரியே சமீபத்துல, விகடன் விருது கிடைச்சுது. எனக்கு கிடைச்ச அந்த விருதால, அம்மா அடைஞ்ச சந்தோஷம் அளவில்லாதது. 'காக்கா முட்டை' நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் வந்தாலும், ஒரு வருஷம் எந்தப் பட வாய்ப்புகளும் இல்லாமதான் இருந்தேன். அப்போ எனக்கு பக்கபலமா இருந்தது அம்மாதான். நிச்சயமா அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும்னு சொன்னாங்க. அதுப்படியே போன வருஷம் எனக்கு நிறையப் பட வாய்ப்புகள் வந்துச்சு.

விகடன் விருதுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

நிறையப் படங்கள்ல நடிச்சாலும், பெரிய ஹீரோ படத்துல நடிக்கிற வாய்ப்பே வரலையேன்னு நான் ஃபீல் பண்ணினப்போ, 'நிச்சயமா நீ நினைக்கிறமாதிரியான வாய்ப்புகள் வரும்'னு அம்மா சொன்னாங்க. 'சின்னத்திரையில இருந்து சினிமாவுக்கு வந்து, இப்போ ரோல் மாடலா இருக்கிற ஹீரோ சிவகார்த்திகேயன். அதே மாதிரி சின்னத்திரையில இருந்து வந்து ஹீரோயினா புகழ்பெற்றதும் நீதான்டி. நீயும் பல பெண்களுக்கு ரோல் மாடல்தான்'னு சொல்லுவாங்க. அம்மா சொன்ன மாதிரியே இப்போ தனுஷ் சார் கூட 'வட சென்னை', விகரம் சார் கூட 'துருவ நட்சத்திரம்' படங்கள்ல ஜோடியாவும் நடிக்கிறேன்" என்றவர் தன் அம்மாவுக்கு இருக்கும் பெரிய ஆசையைச் சொல்கிறார்.

"தனக்குன்னு எந்த ஆசையும் இல்லாத அம்மாவுக்கு, நானும் அண்ணனும் நல்லா இருக்கணும்ங்கிறதுதான் பெரிய எண்ணம். அண்ணனுக்கும் கல்யாணமாகி செட்டில் ஆகிட்டான். அதனால இப்போ அம்மாவோட ஆசை, கவலை எல்லாமே என்னைப் பத்திதான். 'இப்போ அடுத்தடுத்து படங்கள்ல நடிச்சாலும், ரஜினி, விஜய், அஜித் கூட நீ ஜோடியா நடிக்கணும்னு தினமும் கடவுள்கிட்ட வேண்டிகிட்டு இருக்கேன். என்னோட இந்த ஆசை சீக்கிரமே நிறைவேறும் ஐஸ்வர்யா'ன்னு அடிக்கடி எங்கிட்டச் சொல்லுவாங்க. அப்போ எனக்கு சிரிப்பா இருக்கும். இப்படி ஓர் அம்மா கிடைச்சதுக்கு நான் ரொம்பவே கொடுத்து வெச்சவனு மனசுக்குள்ள நினைச்சுக்குவேன். இப்போக்கூட தன்னோட சொந்த கால்ல நிக்கணும்னு, இன்ஸூரன்ஸ் ஏஜென்டா வேலை செய்துகிட்டுதான் இருக்காங்க. என்னோட பெரிய ஆசையே, அம்மாவை சந்தோஷமா வெச்சிக்கணும் என்பதுதான். அதை ஒரு மகளா நிறைவாவே செய்துகிட்டு இருக்கேன்" என நெகிழ்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.


டிரெண்டிங் @ விகடன்