வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (12/05/2017)

கடைசி தொடர்பு:19:49 (12/05/2017)

'என்னிடம் வாருங்கள் மக்களே'- ஆரம்பத்திலேயே அதிரவைக்கும் நெல்லை புதிய எஸ்.பி

திருநெல்வேலி மாவட்ட புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக அருண் சக்திகுமார் பொறுப்பேற்றுள்ளார்.

 

திருநெல்வேலி மாவட்டக் கண்காணிப்பாளராக விக்ரமன் இருந்துவந்தார். அவர் கடந்த 3 வருடங்களாக திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கண்காணிப்பளாராக இருந்தார். அவர் மாவட்டக் கண்காணிப்பாளராக இருந்த காலத்தில் தொடர்குற்றங்களில் ஈடுபட்ட 50 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர் தற்போது 'கியூ' பிரிவுக்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டு சென்னைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக டாக்டர் அருண் சக்திகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பின்னர், மாவட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி. நான் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தேன். எனக்கு ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தது.

2012-ம் ஆண்டில் ஐ.பி.எஸ் ஆகத் தேர்வானேன். நான் முதன்முதலில் நெல்லை மாவட்டம் தாழையூத்து ஸ்டேஷனில்தான் ஐ.பி.எஸ்ஸாகப் பொறுப்பேற்றேன். ஆறு மாதங்கள் இங்கு பயிற்சி எடுத்தேன். இங்குள்ள மக்களை நன்கு அறிவேன். பின்னர் மதுரை மாநகரில் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகப் பணியாற்றினேன். இப்போது, நெல்லைக்கு மாறுதலாகி வந்துள்ளேன். மக்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம்.

மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நட்புறவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாவட்டத்தில் இதற்கு முன்பு செயல்படுத்தப்பட்ட ‘ஹலோ போலீஸ்’ உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் மணல் கடத்தல்காரர்கள், கொலை, கொள்ளையில் ஈடுபடுவோர், சாதிய பிரச்னைகளைத் தூண்டுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தை அமைதியான மாவட்டமாகப் பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.