வெளியிடப்பட்ட நேரம்: 18:36 (12/05/2017)

கடைசி தொடர்பு:19:26 (12/05/2017)

மதங்களைக் கடந்த மானாமதுரை நிலாச்சோறு திருவிழா!

 அனைத்து மதத்தினரும் கலந்து கொண்ட நிலாச் சோறு திருவிழா மானாமதுரையில் அமர்க்களமாக நடைபெற்றது.

manamadurai

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா நடைபெறும். இதில் பத்தாவது நாள் விழாவாக நிலாச் சோறு சாப்பிடுவதும் ஒரு திருவிழா தான். சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து சின்ன யானை வாகனத்தில் மக்கள் சாரைசாரையாக வருவார்கள். சாம்பார் சாதம், புளியோதரை என சைவம் சாப்பிடுபவர்களும் சிக்கன், மட்டன், காடை என அசைவம் சாப்பிடுபவர்களும் குடும்பத்துடன் வந்து உணவுப் பரிமாறும் நிகழ்வு நடைபெறும். இதில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என சகல மதத்தினரும் கலந்துகொள்வார்கள். மனக் கவலைகளை மறந்து உற்சாகமாக பேரக் குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த அங்குமணியிடம் பேசுகையில்,

“நான் 40 வருசமா நிலாச் சோறு திருவிழாவுக்கு வந்துட்டு இருக்கேன். அப்ப ஆத்துல மணல் மெத்தை மாதிரி இருக்கும், இப்ப கட்டாந்தரையில உட்காரவேண்டி இருக்கு. சமீபகாலமாகத்தான் எல்லா மதத்துக்காரவுகளும் இங்கே வர்றாங்க. உறவுக்காரவுங்க பக்கத்து வீட்டுக்காரவுங்கனு நாங்க கொண்டு வந்த சாப்பாட்ட பகிர்ந்துக்குவோம். செலவ பத்தி கவலைப்படுறது இல்ல'' என்கிறார் பூரிப்புடன். மேலும், தீபாவளி, பொங்கல் கூட இப்படி கொண்டாட மாட்டோம். இன்னைக்குத் தான் கறிகடைகள்ல கூட்டம் அலைமோதும். கிராமங்கள்ல ஆடு பிடிச்சு, கறி கூறு போடுவாங்க என்கிறார் அந்த ஊர்க்காரர்.

எத்தனை திருவிழா இருந்தாலும் இந்தத் திருவிழாவுல இருக்குற சந்தோசம் வேற எதுலயும் இருக்காது என்கிறார் கைக்குழந்தையோடு வந்திருந்த டீச்சர் ஸ்டெல்லா.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க