Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''லட்சுமி இல்லாத வீட்டுக்கு சரஸ்வதிய கூட்டிட்டு வந்தோம்'' - வறுமையிலும் சாதித்த மாணவர்கள்! #PlusTwo

மாணவர்கள்

ரேங்க் முறையை ஒழித்து கிரேட் முறையைக் கொண்டு வந்திருக்கும் முதல் பொதுத்தேர்வு முடிவு இது! ஆரோக்கியமான கல்விச்சூழலை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. ஸ்டேட் ஃபர்ஸட் வாங்கணும்... டிவியில பேட்டிகொடுக்கணும் என்கிற மாயை இனிமேல் இல்லை. முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள் டி.வியில் காட்டப்படுவார்கள். அவர்களுக்கு கேக் ஊட்டி பாராட்டும்போது ஒரே ஒரு மதிப்பெண் குறைந்து நான்காவது இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவனோ மாணவியோ மனஉலைச்சலுக்கு ஆளாகி நிற்கவேண்டிய அவசியம் இனி இருக்காது.

ஆனால், இக்கட்டான சூழலைக் கடந்து போராடி நல்ல மதிப்பெண்களை பெரும் மாணவர்களை நாம் அடையாளப்படுத்தித்தான் ஆகவேண்டும். பெருமைக்காக இல்லை. தன்னம்பிக்கைக்காக.

Maheshwari, Yogeshwari

கோவைத் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து 1,111 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் யோகேஷ்வரி, ஐந்து வயதிலேயே அப்பா இறந்துவிட, அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த பெண். அம்மா வளர்த்த பிள்ளை என்பதற்கு அடையாளமாய் பேசவே தயங்குகிறார். அவ்வளவு கூச்சம். வாழ்த்துகள் சொல்லி பேசவைத்தோம். ''காலேஜ் போகப்போற இனிமேலும் இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது அவுங்க கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லு'' என்று செல்லமாக அதட்டுகிறார் யோகேஷ்வரியின் அம்மா மகேஷ்வரி. நீண்ட மௌனத்துக்குப் பிறகு தயக்கம் உடைத்த யோகேஷ்வரி.

“எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியலண்ணே. இந்த ரேங்க் ஃபார்மெட்டை ஒழிச்சதுல எங்கள மாதிரியான பிள்ளைங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ஆரம்பத்துல இருந்து நான் தமிழ் மீடியம்தான். அப்பா முகத்தைப் பார்த்ததே இல்லை. எல்லாமே அம்மாதான். அம்மா பட்ட கஷ்டத்தைப் பத்துவருஷமா கண்கூடா பாத்துகிட்டே இருந்ததலானதான் படிப்போட அருமை என்னன்னு புரிஞ்சது. அம்மா தவணை முறையில துணி வியாபாரம் பாக்குறாங்க. அதுலதான் எங்க குடும்பம் ஓடுது. எனக்கு அடுத்து ஒரு தம்பி இருக்கான். அவனும் கவர்மென்ட் ஸ்கூல்தான். அம்மா தெனமும் காலையில துணிகளை விக்கிறதுக்கு வீடுவீடா கிளம்பிருவாங்க. இந்த தொழில்ல போட்ட காசை ஒருநாளும் முழுசா பார்க்க முடியாதுண்ணே. அம்மா 5000 ரூபாய்க்கு மொத்தமா துணி வாங்கி விக்கிறாங்கண்ணே. அதை வித்து பணத்தை வாங்குறதுக்கு அவுங்க நடையாய் நடக்கணும். பலபேர் முழுசா தரமாட்டாங்க. நூறு ரூபாயை வாங்க ஒரு வீட்டுக்கு நூறு முறை ஏறி இறங்குவாங்க. அதப் பார்க்கும்போது மனசு ரொம்ப வலிக்கும்ண்ணே.

அப்படி சிறுகச்சிறுக சேர்த்துதான் நாங்க கேட்டதெல்லாம் வாங்கிகொடுத்து எந்த குறையில்லாம வளர்த்தாங்க. துணி வியாபாரம்தான் பாக்குறாங்க ஆனா.. அம்மா இதுவரைக்கும் ஆசையா அவுங்களுக்குனு ஒரு புதுப்புடவை வாங்கி நான் பார்த்ததே இல்லண்ணே" என்று யோகேஷ்வரி கண்கள் கலங்க, மகேஷ்வரியின் கண்கள் கலங்கி நிற்கிறது.

''அவுங்களுக்கு ஆசை என்னன்னா நானும் தம்பியும் நல்லா படிக்கணும் அவ்வளவுதான். அதுலயும் குறிப்பா என்னைய பெரிய அளவுல படிக்க வைக்கணும்னு அவுங்களுக்கு அவ்வளவு வைராக்கியம். 'நாளைக்கு இன்னொருத்தனை நம்பிப் போய் என்னைய மாதிரி நீ.. சீரழிஞ்சிற கூடாதுடீ. அதுக்காகத்தான் சொல்றேன் ஒழுங்கா படிச்சி உன் சொந்தக் கால்ல நிக்க கத்துக்கோ’னு அடிக்கடி சொல்லிகிட்டே இருப்பாங்க. நான் சின்ன வயசுல இருந்தே நல்லா படிப்பேன்ணே. டென்த்ல 488 மார்க் எடுத்து நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். இப்போ 1,111 மார்க். அம்மாவுக்கு நான் டாக்டராகணும்னு ஆசை. எனக்கு இன்ஜினீயராகணும்னு விருப்பம், அதுமட்டும்தான் ஒரே குழப்பம். மத்தபடி எங்க அம்மா இன்னைக்கு ஹேப்பிண்ணே. எனக்குப் பரீட்சை வந்துட்டா எங்க அம்மா தூங்கவே தூங்காது. நாலு மணிக்கே எழுந்துருச்சி. காபி போட்டு வச்சிகிட்டு எழுப்பி படிக்கச் சொல்லும். பரிச்சை ரிசல்ட் வர வரைக்கும் எங்க அம்மா நிம்மதியா தூங்கவே இல்லண்ணே.. 1150க்குமேல எதிர்பார்த்தேன். அம்மா திட்டுவாங்களோன்னு நெனச்சேன் 1,111 நல்ல மார்க்தான் இதுக்கெல்லாம் வருத்தப்படாத.. உன்னை நிச்சயம் பெரிய ஆளாக்கி காட்டுவேன்னு ஆட்டோபுடிச்சு பள்ளிக்கூடத்துக்கு கூட்டிகிட்டு வந்துட்டாங்கண்ணே. டீச்சர்ஸ்கிட்ட என்ன படிக்கலாம்னு சஜெஷன் கேட்கப் போறோம்'' என்று யோகேஷ்வரி முடிக்க.

''இதுல என்ன அதிசயம் இருக்கு தம்பி. இதுதானே ஒரு தாயோட கடமை. நாளைக்கு இவ பிள்ளையையும் இப்படித்தான் விழுந்து விழுந்து கவனிக்கப்போறா. என்ன ஒண்ணு என்னைய மாதிரி சந்தி சிரிக்காம அவ நல்லபடியா வாழணும் எனக்கு அதுபோதும்'' என்று முடித்தார்.

நெல்லை மாணவி

கஷ்டத்தை நினைத்துப் படித்தேன்..
நெல்லையில் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, வறுமையில் வாடிய சிறுமி ப்ளஸ் 2 தேர்வில் 1162 மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்து உள்ளார். அவரைச் சந்திக்கச் சென்றோம். பாளையங்கோட்டை அண்ணாநகர் பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்றதுமே வறுமையின் சுவடுகள் அப்பட்டமாகத் தெரிந்தன. தினக்கூலியாக தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட்ட பாமாவின் தாயாருக்கு விடுப்பு அளிக்க நிர்வாகம் மறுத்து விட்டதால் அவர் வீட்டில் இருக்கவில்லை. தாத்தா குணசேகரன், பாட்டி ஜெயபாரதி, தங்கை சரண்யாவுடன் இருந்த பாமாவிடம் பேசினோம். ''நெறைய மார்க்ஸ் எடுப்பேன்னு நினைச்சேன் சார்'' என்று பேச்சில் ஏமாற்றம் குடிகொண்டிருக்கிறது. சமாதானப்படுத்தி பேச வைத்தோம்.

‘‘எனக்கு நினைவு தெரியுறதுக்கு முன்னாடியே அப்பாவை இழந்துட்டேன். அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. எங்க வீட்டோட கஷ்டத்தை அடிக்கடி எடுத்துச் சொல்லி, ‘நீ நல்லாப் படிச்சு முன்னேறினாத்தான் நம்ம குடும்பமே முன்னுக்கு வரும்’னு சொல்வாங்க. அம்மாவுக்கு ஒடம்பு அடிக்கடி சரியில்லாம போகும்.

அதெல்லாம் பார்த்து வளர்ந்ததுனாலேயே படிப்புல எப்பவும் கவனமா இருப்பேன். ஸ்கூல் முடிச்சு வீட்டுக்கு வந்ததும் வீட்டு வேலை செய்ஞ்சுட்டு பிறகு பாடத்தைப் படிப்பேன். பொதுத் தேர்வுல இன்னும் நெறைய மார்க் எடுப்பேன்னு நினைச்சேன் சார். எடுத்திருக்கணும்
பி.காம் படிக்கணும்னு ஆசை சார். நான் வேலைக்குப் போய் என்னோட தங்கச்சிய நல்லா படிக்க வைக்கணும். அதுதான் என் லட்சியம்" என்கிறார் உறுதியான குரலில்.

பாமாவின் தாத்தா குணசேகரன், ‘‘சின்ன வயசிலேயே எல்லாக் கஷ்டத்தையும் பார்த்துட்டா. அதனாலேயே வீட்டுக்கு வந்துட்டா புக்கும் கையுமாதான் இருப்பா. நல்லா படிச்சு குடும்ப கஷ்டத்தை போக்கணும்னு சொல்லிட்டே இருப்பா. இதுவரைக்கும் கஷ்டப்பட்டு படிக்க வைச்சுட்டோம். இனி காலேஜ் சேர்க்கிறதுக்கு பணத்தை தெரட்டனும்'' என்கிறவரின் குரலில் கவலையில் தேய்கிறது.மாணவி ஸ்வாதி

சுவாதிலெட்சுமி - உடுமலைப் பேட்டை

சுவாதிலெட்சுமியின் சொந்த ஊர் உடுமலைப்பேட்டையிலிருந்து சுமார் 15 கிமீ தூரத்தில் இருக்கும் தளி எனும் கிராமம். அப்பா ஹோட்டலில் புரோட்டா மாஸ்டர். எளிமையான குடும்பம். சுவாதியின் அக்காவை  ப்ளஸ் 2 வகுப்புக்கு மேல் படிக்க வைக்கும் சூழலில் குடும்பம் இல்லை. சுவாதி, திருமூர்த்தி நகரில் படித்துவந்தார். 10-ம் வகுப்பில் 481 மதிப்பெண்களைப் பெற்றார். இவரின் ஆர்வத்தைப் பார்த்த அறிவியல் ஆசிரியர் உடுமலைப் பேட்டையில் ஶ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துவிட்டார். வீட்டின் சிரமங்களைக் கடந்து, இன்று ப்ளஸ் 2 வகுப்பில் 1070 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

"எங்க வீட்டிலருந்து ஸ்கூலுக்கு வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகிடும். ஆனாலும் எனக்கு அது தூரமாக தெரியல. ஏன்னா... கண்ணபிரான் சார் ஃப்ரியாக டியூசன் சொல்லிக்கொடுத்தாங்க. அது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது. நான் ஆயிரத்துக்கு மேல் மார்க் எடுப்பேனு என்னை விட அவங்கதான் நம்பினார்கள். எனக்கு பி.எஸ்எஸி கணக்கு படிச்சு, குரூப் எக்ஸாம் எழுதி நல்ல வேலைக்குப் போகணும்னு ஆசை. ஆனா யாராவது ஹெல்ப் பண்ணணும் சார். அப்பாவால என்ன படிக்க வைக்க முடியல. அதனால காலேஜ் சேரணும்னா யாராவது ஸ்பான்சர் பண்ணினாதான் உண்டு. இல்லாட்டி படிக்காம வீட்ல" எனும்போதே சுவாதியின் குரல் உடைவதை உணர முடிந்தது.

சுவாதி குறிப்பிடும் கண்ணபிரான் அறிவியல் ஆசிரியர். அவரிடம் பேசியபோது, "சுவாதி படிக்கும்போது பக்கத்தில் என்ன நடந்தாலும் அவருக்குத் தெரியாது அவ்வளவு ஈடுபாட்டோடு படிப்பாங்க. தேவையில்லாமல் லீவு எடுக்க மாட்டாங்க. டி.என்.பி.சிக்கு கிளாஸ் எடுக்கும்போதும் சுவாதியும் கூட உட்கார்ந்து கேட்பாங்க. அந்த ஆர்வம்தான் இந்தளவு வெற்றியைக் கொடுத்திருக்கு. சுவாதி ஆசைப்படுற மாதிரி மேல் படிப்பு படிக்க, யாரேனும் உதவினால்தான் சாத்தியமாகும். அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டிருக்கிறோம்" என்றார்.

எளியக் குடும்பத்திலிருந்து கல்வியின் கரம்பிடித்து முன்னேறத் துடிக்கும் சுவாதியின் நியாயமான கனவுகள் நிறைவேறட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close