Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘மகன் வீட்டுக்கும் போகப் பிடிக்கலை!’’ - முதியோர் இல்லத்தில் தாயின் வேதனை

முதியோர் இல்லத்தில்

முதியோர் காப்பகங்களில் தங்களது அந்திமக் காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். தாய்மையின் வலி மிகுந்த அனுபவங்களை நம்மிடம் கொட்டித் தீர்ப்பார்கள். அவர்களது தலையில் இயற்கை வரைந்த வெள்ளை ஓவியத்தில் மினுக்கும் வாழ்ந்து முடிந்ததன் வனப்பு. 'இன்னும் இருக்கிற சொற்ப காலத்தையும் என் பேரப் பிள்ளைகளின் முகம் பார்த்துக் கொண்டே முடித்து விடத்தான் நினைக்கிறேன். ஆனால் முடியலையே' என்ற அங்கலாய்ப்பு அவர்களைக் கொல்லாமல் கொன்று கொண்டிருக்கும். முதியோர் இல்லத்தில் தாயின் வேதனையை உணரலாம்.

அப்படி ஒரு தாயை அன்னையர் தின வாழ்த்துச் சொல்ல முதியோர் இல்லத்தில் சந்தித்தோம். ஆற்றாமையில் வெடித்து நம் இதயத்தை நனைத்த  தாயின்  ஈர வார்த்தைகள் இங்கே, 

‘‘நான் பொறந்தது வசதியான குடும்பத்துல. ஈஸ்வரின்னு பேரு வெச்சு ஆசையாத்தான் என்னைய வளர்த்தாங்க. கஷ்ட நஷ்டம் பார்த்தில்ல. நல்ல மனுஷனா தேடிப்பிடிச்சி கண்ணாலம் கட்டி வெச்சாங்க. அவரு பேரு ஓபுளி. தங்கமான மனுஷன். அவரோட இருந்த வரைக்கும் கோபத்துல கூட ஒரு சுடு சொல் விட மாட்டாரு. பேப்பர் ஏஜென்ட் வேலை பார்த்தார். நானும் படிச்சிருந்ததால அவரோட வேலையில பாதிய நானே செஞ்சி முடிச்சிடுவேன். செய்தித்தாளோடதான் எங்க வாழ்க்கையே போச்சு. பேப்பரப் பிரிச்சி அடுக்குறதும், கட்டறதும், அவரோட கடை கடையா கட்டி அனுப்பறதும் தான் வேல. 

மனுஷன் எப்பவும் கலகலன்னு சிரிச்சிக்கிட்டே இருப்பார். பேப்பரும் கையுமாத்தான் பார்க்க முடியும். சுந்தர்ராஜன், நடராஜன், சாந்தின்னு முத்து முத்தா மூணு பிள்ளைங்க. செல்லமாத்தான் வளர்த்தோம்,’’ என்றவரது வார்த்தைகள் தழுதழுத்து கண்கள் தளும்பி நிற்க..தாயின் கண்ணீர் மனதை உடைத்தது. கண்களையும் முகத்தையும் துடைத்து விட்டு மீண்டும் பழைய நினைவுகளுக்குப் போகிறார் ஈஸ்வரி அம்மாள். 

‘‘குழந்தைகளை பார்த்துக்குறது மட்டும்தான் என்னோட வேலை. எனக்கு வேறு எந்தக் கவலையும் அந்த மனுஷன் வெச்சதில்ல. பிள்ளைங்களை நல்லா வளர்த்து படிக்க வெக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். எனக்கு அப்புறம் ஒன்னப் பார்த்துகிறதுக்கு மூணு சிங்கக்குட்டிங்க இருக்குன்னு சொல்லுவார். அதுல அவருக்கு ரொம்ப பெருமை. மூணு பசங்கள்ல ஒருத்தராச்சும் என்னைய பார்த்துக்கும்னு சொல்லிட்டே இருப்பார். 

மூணு புள்ளைங்களுக்கும் பார்த்துப் பார்த்து சமைச்சுப்போடுவேன். தீபாவளி பொங்கல்னு வந்தா அவங்களுக்கு செலவழிக்கிற காசுக்கு அளவிருக்காது. அவங்களுக்காக ஒரு நாள் முழுக்க பட்டினியாக் கெடந்தப்பக்கூட அது எனக்கு கஷ்டமாத் தெரியல. இன்னிக்கு ஒட்டு உறவு இல்லாம முதியோர் இல்லத்துல இருக்கிறது அப்படி வலிக்குது. மூணு புள்ளைங்களும் நல்லா வரணும்னு இங்கிலீசு, ஹிந்தி, கன்னடம், தமிழ்னு பல மொழியும் கத்துக்க வெச்சார். எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குழந்தைங்களுக்கு கஷ்டம் தெரியாமத் தான் வளத்தோம். 

பிள்ளைங்க வளர்ந்து கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் அவங்களுக்கும் எங்களுக்கும் இடையில ஒரு தடுப்பு விழுந்தாப்புல இருந்துச்சு. மூத்தவன் பிரிண்டிங் ஆபீஸ்ல வேலை பார்க்கிறான். மருமகள் டெயிலர். எளைய மகன் சுந்தர்ராஜன் அப்பா பார்த்த பேப்பர் ஏஜென்ட் வேலையே பார்க்குறான். அவனோட மனைவி பியூட்டிபார்லர் நடத்துறா. மகள் சாந்த ஜவுளி பிசினஸ் பண்றா. அந்தக் கடவுள் புண்ணியத்துல மூணு பிள்ளைங்களும் வசதியாத்தான் இருக்காங்க. அவங்கவங்க தனிக்குடும்பங்களா மாறின அப்புறம் வீட்டுக்காரரோட தொழில்ல நஷ்டம். அடுக்குமாடி வீடுகள வித்து கடனை அடைச்சோம். கடனை கட்டிட்டு விரக்தியில அவரு வீட்டை விட்டே போய்ட்டாரு. இன்னிக்கு வரைக்கும் எங்க இருக்காருன்னே கண்டு பிடிக்க முடியல. 

நான் தனியாளா அலையுறேன். பிள்ளைங்க கிட்டயும் நான் போகல. வயித்துப்பொழப்புக்கு நாலஞ்சு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்ச்சேன். அதுல கிடக்கிற காச வெச்சு வாடக வீட்டுல இருந்தேன். பேரப் பிள்ளைங்க மட்டும் அப்பப்போ என்ன வந்து எட்டிப் பார்க்கும். வயசாகிப் போச்சு. கண்ணும் தெரியல. என்னால வீட்டுவேலைக்கும் போக முடியல. என்னோட துணி மணிய எடுத்துட்டு சின்ன மகன் வீட்டுக்குப் போனேன். அவனும் மனைவியும் இங்க எதுக்கு வந்தேன்னு என்னைய திட்டினாங்க. என்ன அவங்க வீட்டுக்குள்ளயே விடல. பெரிய பையன் சாதாரணமாவே கோவக்காரன். அவன் வீட்டுக்கும் போகப் பிடிக்கல. வேற வீட்டுக்கு கட்டிக் கொடுத்த மகள் வீட்டுக்கும் நான் தஞ்சம் கேட்டுப் போக முடியாது. 

என்னோட நெலமைய யாருகிட்ட சொல்லி அழறதுன்னு தெரியாம தவிச்சேன். எங்க ஏரியாவுல இருந்த கவுன்சிலர நேர்ல பார்த்து என் கஷ்ட கதைய சொல்லியழுதேன். அவரு தான் இந்த முதியோர் இல்லத்துல என்ன சேர்த்து விட்டார். பிள்ளைங்கள நெனச்சு நெனச்சு அழுது என் உடம்பு பாழானது தான் மிச்சம். அவங்களே அம்மா வேணாம்னு நினைக்கும் போது நான் எதுக்கு அவங்கள நெனச்சி அழணும். பெத்தமனசை கல்லாக்கிட்டு இங்கக் கிடக்குறேன். நான் இங்க வந்து ஆறு மாசம் ஆச்சு. என் பேரப்பிள்ளைங்கள பார்க்க மனசு கெடந்து துடிக்கும். ஆனாலும் என்ன பண்ண முடியும். நான் இங்க இருக்கிறது என் புள்ளைங்களுக்கு தெரியாது. அவங்களப் பார்க்கவும் நான் விரும்பல. உசிரு இருக்கிற வரைக்கும் அவரோட வாழ்ந்த வாழ்க்கைய நெனச்சிட்டே போய் சேர்ந்துடுவேன்,’’ என்று முடித்த ஈஸ்வரியின் கண்களுக்கு அதற்கு மேலும் அணை போட முடியாமல் தவித்தது அவரது விரல்கள். அடுத்த பத்து நிமிடங்களுக்குத் தேம்பி எழுது மனம் ஆறிய பின்பே நமக்கு விடை கொடுத்தார். எத்தனை ஈஸ்வரிகள் இப்படி தனித்து விடப்பட்டார்களோ என்று நெஞ்சு கணக்க திரும்பி வந்தோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close