Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘‘எனக்காகவும், தங்கச்சிக்காகவும் மறுமணமே செய்யாமல் வாழ்ந்தார் அம்மா!’’ - விஜய் ஆண்டனி உருக்கம்! #MothersDay

விஜய் ஆண்டனி

சையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகொண்டவர் விஜய் ஆண்டனி. இவரின் ‘நாக்க மூக்க’ பாடல் பட்டிதொட்டியில் எல்லாம் பட்டையைக் கிளப்பியது. வலுவான திரைக்கதைகளைக்  கொண்டு இவர் நடித்த படங்களான `நான்', `பிச்சைக்காரன்', `சைத்தான்', `எமன்' என அனைத்தும் தொடர்ச்சியாக ஹிட்டாகின. இவரின் `பிச்சைக்காரன்' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஹிட்  அடித்து தெலுங்கு திரையுலகிலும் விஜய் ஆண்டனிக்கெனத் சிறப்பு அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. சென்னையில் சவுண்ட் இன்ஜினீயராக தொடங்கிய இவரது பயணம், தொடர்ச்சியான உழைப்பு, அர்ப்பணிப்பால் புகழ்பெற்ற நடிகராக அவதாரம் எடுக்க வைத்துள்ளது. தற்போது, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காளி’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தவர், `பிரேக்'கில் அன்னையர் தினம் குறித்து அளித்த பிரத்யேகப் பேட்டி...

``எங்கள் சொந்த ஊர் நாகர்கோவில். எனக்கு விவரம் தெரிவதற்கு முன்பே, என் அம்மாவின் 23 வயதில் அப்பா இறந்துவிட்டார். அம்மா ரொம்ப வெகுளி. பெரிசா ஒண்ணும் படிக்கலை. உலக  அனுபவம் கிடையாது. வாழ்க்கைன்னா என்னவென்றே புரியாத வயதில் அனைத்துப் பொறுப்புகளும் அம்மாவின் தலையில் விழுந்தன. அம்மா நினைத்திருந்தால் அந்த சின்ன வயதில் மறுமணம் செய்துகொண்டிருக்கலாம். ஆனால், எங்கம்மா என்னையும், தங்கையையும் நன்றாக வாழவைக்க வேண்டும் என்பதை மட்டுமே லட்சியமாகக்கொண்டிருந்தார். அம்மா, டவுன் பஞ்சாயத்து ஆஸ்பத்திரியில் கிளர்க்காகப் பணிபுரிந்தார். 

ஒரு விதவைப் பெண்ணை, தனித்து வாழும் பெண்ணை இந்தச் சமூகம் என்ன பார்வை பார்க்கும், என்னென்ன கேள்விகள் கேட்கும் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அனைத்தையும் தாங்கிக்கொண்டு எங்களைத் தனி மனுஷியாக நின்று வளர்த்தார் அம்மா. அம்மாவின் சம்பளம் மட்டுமே எங்கள் தேவைகளுக்கான அனைத்து ஆதாரம். வாங்குகிற சம்பளத்தில் எங்களுக்குச் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதனை செய்தார். எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் எங்களுக்குச் சிறந்த கல்வி, வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார். 

விஜய் ஆண்டனி

சின்ன வயதில் அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாங்கனு எனக்குத் தெரியாது. வளர்ந்த பின்னாடிதான் அம்மாவின் அருமை எனக்குப் புரிகிறது. சின்ன வயதில் என்னோட தேவைகள் பூர்த்தியானது. பல நாட்கள் இல்லாததை நினைத்து ஏங்கியிருக்கிறேன். ஆனாலும், அம்மா வாங்கிக் கொடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அம்மாவின் பணி மாறுதல் காரணமாக பாளையங்கோட்டை, திருச்சி, சாத்தூர்னு தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள  பள்ளிகளில் படித்து வாழ்ந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள்கூட எனக்கு நல்ல வலிமையைத் தந்தன. 

நான் பிஎஸ்ஸி., இயற்பியல் படித்தேன். படித்த மூன்று ஆண்டுகளில் 24 பேப்பரில் 22 அரியர். படிப்பை முடிக்காமலேயே சென்னையில் படிக்கப் போகிறேன் என்றேன் அம்மாவிடம். அப்போதுகூட என் விருப்பத்துக்குத் தடை போடாமல் எனக்கான தேவைகளை நிறைவேற்றினார். வாடகை வீட்டில் வளர்ந்தாலும் நானும், என் தங்கையும் சந்தோஷமாகவே வாழ்ந்தோம். `இப்படி இருக்கணும்... அப்படி  இருக்கணும்' என்றெல்லாம் அம்மா எனக்கு சொல்லித் தரவில்லை. அவங்களே எனக்கு ரோல்மாடலா என்கூட இருந்தாங்க'' - சொல்லும்போதே குரல் தழுதழுத்த விஜய் ஆண்டனி  மீண்டும் தொடர்ந்தார்.... 

``சென்னை வந்தேன். படித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பான வாழ்க்கைக்குள் போய்விட்டேன். இன்றும் சாதாரண மக்களில் ஒருவனாகவே நான் இருக்க ஆசைப்படுகிறேன். கடவுள் இருக்காரானு எனக்குத் தெரியாது. ஆனா, நாம சாமிக் கூப்பிடுறோம்; அன்புதான் கடவுள்னு சொல்றோம். அந்த அன்பை எந்த கண்டினுஷம் இல்லாம தர்றது அம்மா மட்டும்தான்! மனிதர்களுக்கு மட்டும் இல்ல... ஆடு, மாடு, நாய், பூனைன்னு எல்லா விலங்குகளுக்கும் அம்மான்னா அன்பைக் காட்டுற தெய்வம்கிறது பொதுவான விஷயம். விலங்குகள், மனிதர்கள் என்ற வித்தியாமில்லாம எல்லா ஜீவராசிகளும் அம்மாவின் அன்பு  வழியாகத்தான் இந்த உலகத்தைப் பார்க்கின்றன'' என மனம் நெகிழ்ந்தவரிடம் `அம்மாவின் புகைப்படம் கொடுங்க சார்' என்றதும், `‘நான் வேற... என்னோட குடும்பம் வேற. என்னோட விளம்பரத்துக்காக எங்கம்மா, குடும்பத்தினரின் சுதந்திரம் பறிபோறதை நான்  விரும்பலை. அவங்க அவங்களுக்கான இயல்பில் தங்கள் வாழ்க்கையை வாழட்டும்... ப்ளீஸ்!'' என்று சொல்லி மறுத்துவிட்டார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close