வெளியிடப்பட்ட நேரம்: 08:24 (13/05/2017)

கடைசி தொடர்பு:11:37 (15/05/2017)

ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரி இவர்தான்!


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கரின் நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுப்ரமணியனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனைக்குறித்து சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருமுறை விசாரணைக்கு ஆஜரானார். மூன்றாம் கட்ட விசாரணைக்கு மே 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Contractor Subramaian Suicide

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மோகனூரில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், வயிற்றுப் பகுதியில் விஷம் இருந்தது கண்டறியப்பட்டது. எனவே,  சுப்ரமணியன் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், சுப்ரமணியன் எழுதியதாக நான்கு பக்கக் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்தது.

இதுகுறித்தும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கையெழுத்துகுறித்து விசாரணை நடத்தியதில், அவரது மகள் அபிராமி கையெழுத்தை உறுதி செய்ததாகக் கூறப்பட்டது. அந்தக் கடிதத்தில், நாமக்கல்லைச் சேர்ந்த மற்றொரு ஒப்பந்ததாரரின் பெயர் இடம் பெற்றிருந்தது. அவர், தொழில்ரீதியாக நெருக்கடி கொடுப்பதுடன், அடியாள்களை வைத்து மிரட்டுகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை ஆணையர் ஒருவர், விஜயபாஸ்கரின் பினாமி என்று கூறச் சொல்லி வற்புறுத்துவதகாவும் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி, டிஜிபி ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரிப்பதற்காக, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி, டி.எஸ்.பி சத்யமூர்த்தி இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.