வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (13/05/2017)

கடைசி தொடர்பு:12:40 (13/05/2017)

எடப்பாடி பழனிசாமியின் சாந்தமும் சமாதானமும்! - பிடியை இறுக்கும் பி.ஜே.பி!? #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

.தி.மு.க-வின் அணிகள் இணைப்பு கதையும், ஒருங்கிணைந்த கட்சியை தம் கட்டுக்குள் வைக்கத்துடிக்கும் பி.ஜே .பி-யின் முயற்சிகளும் கன்னித்தீவு தொடராக நீள்கிறது. சேகர் ரெட்டி என்ற அஸ்திரத்தின் மூலம் ''ஓ.பன்னீர்செல்வத்தை தம் வழிக்கு கொண்டு வந்த பி.ஜே.பி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நிரந்தரமாக தம் வழிக்கு கொண்டு வர 'மைன்ஸ் பிரதர்ஸ்' எனும் பிரம்மாஸ்திரத்தை எடுத்துள்ளது. சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், மைன்ஸ் பிரதர்ஸை நெருங்குகிறது வருமான வரித்துறை'' என்கின்றனர் புலனாய்வு அதிகாரிகள்.

மைன்ஸ் பிரதர்ஸ் மீது பி.ஜே.பி கண் :

''ஒடிசா  மாநிலத்தில் இரும்பு தாதுப் பொருட்கள் வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் கான்ட்ராக்டர்கள் இந்த மைன்ஸ் பிரதர்ஸ். இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்  ஏற்றுமதி வர்த்தகம் செய்துவருகின்றனர். ஆட்சியில் உள்ள  மத்திய - மாநில கட்சிகளை விட, உயர் பதவிகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் நெருக்கமான செல்வாக்கு கொண்டிருப்பவர்கள் இவர்கள்.  இதன்மூலம்  அரசு அனுமதித்த அளவையும் விட கூடுதலாக இரும்பு தாது எடுத்து விற்பனை செய்கின்றனர். எப்போதாவது சிக்கும்போது அதற்கான அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, தொழிலைத்  தடையில்லாமல் தொடர்கின்றனர். ஈழப்  போராளி பெயர் கொண்ட அண்ணன் ஒடிசாவில் தொழிலைக் கவனிக்க, முருகக் கடவுளின் மற்றொரு பெயர் கொண்ட தம்பி சேலம் தொட்டு சர்வதேசம் வரை வர்த்தகத்தை கவனித்து வருகிறார். மைன்ஸ் பிரதர்ஸ், திராவிட மாநிலங்கள் ஒன்றின் முக்கியப் பதவியில் இருக்கும் மேற்கு மண்டல பிரமுகரின் மகன்(இவரும் முருக கடவுள் பெயர் கொண்டவர்),  எடப்பாடி பழனிசாமி ஆகியோரைக் கொண்ட இந்தக் கூட்டணி  ஒரே சமூகம், ஒரே பகுதி என்பதால், இவர்களுக்கிடையேயான உறவு என்பது மிக நெருக்கமானது. அதிகாரப்பூர்வமற்ற பிசினஸ் டீல்கள் தொட்டு உறவுகளுக்கிடையிலான பஞ்சாயத்து வரை இவர்களுக்கிடையே அனைத்துவிதமான பரிமாற்றங்களும் உண்டு. சமீபத்தில், சேலத்தில் நடந்த கறி விருந்தில்கூட இவர்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளில் மூழ்கினர். 

எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் மூவ் :

இறுக்கமான இந்த நெருக்கத்தை அறிந்த மத்திய அரசு, இவர்களை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியது. இவர்களுக்கிடையிலான போன் உரையாடல்கள் லிஸ்ட் முதற்கொண்டு பல்வேறு தரவுகளை திரட்டியது. இவையனைத்தையும் தமது நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் அறிந்துகொண்ட பிரதர்ஸ், எடப்பாடியிடமும் இதனைப் பகிர்ந்துள்ளனர். அவரோ, முக்கிய பதவியில் இருக்கும் பிரமுகர் மகனிடம் இதை பகிர்ந்துள்ளார். உடனடியாக அவர் தமது டெல்லி லாபி மூலம் பி.ஜே.பி-யை சாந்தப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதில் ஓரளவு கூலானது பி.ஜே.பி.! இந்த நிலையில், 'மணல் குவாரிகளை அரசே நடத்தும். மூன்றாண்டுகளில் ஆற்று மணல் அள்ளுவது முற்றிலுமாக நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக 'எம் சான்ட்' மணல் பயன்படுத்தும் முறைக்கு மாறவேண்டும்' என்று அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர்.

சாந்தமும் சமாதானமும்  :

பெரிய அளவிலான முதலீட்டோடு 'எம் சான்ட்' மணல் அரைக்கும் கிரஷர் தொழிலில் இறங்க உள்ளனர் பிரதர்ஸ். இதற்காக தமிழ்நாட்டில் பல இடங்களில் குவாரிகளுக்கான இடங்களை வாங்கிப் போட்டுள்ளனர். இதையொட்டியே, இந்த வர்த்தக நலனுக்காகவே எடப்பாடியின் மணல் தடை அறிவிப்பு இருந்ததாக கருதியது மத்திய அரசு. உடனடியாக 'பிரமுகர் மகனை ' அழைத்த  பி.ஜே.பி-யின்  மூத்த தலைவர்கள், 'என்ன செஞ்சுகிட்டு இருக்காரு? இவர்களுக்கிடையிலான உறவு பற்றி எங்களுக்கு தெரியாதா? மொத்த டாக்குமெண்ட்ஸூம்  எங்களிடம் உள்ளது' என்று குரலை உயர்த்தியுள்ளனர். அதன்பின்  இந்த தகவல்கள் எடப்பாடி மற்றும் பிரதர்ஸ்க்கு பரிமாறப்பட்டது. பிரமுகர் மகன் மூலமே மீண்டும் சமாதானத் தூது அனுப்பப்பட்டது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலையொட்டி கட்சி வளர்ச்சி நிதி பரிமாற உத்தரவாதம் கொடுத்தனர் பிரதர்ஸ். இதன் பிறகே பிடியை சற்று தளர்த்தியுள்ளனர் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்கள். அதேநேரம் கண்காணிப்பு வளையத்திலேயே வைத்துள்ளனர்'' என்று விவரிக்கிறார்கள் புலனாய்வு அதிகாரிகள். இதுகுறித்து அறிய முதல்வரிடம் பேச இயலாததால், அவரின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம். ''எதிலும் உண்மையில்லை. சாதாரண பிரமுகர்களுக்கே நட்பு முறையில் பலர் பழக்கமாக இருக்கும்போது, மக்களுக்காக உழைக்கும் ஒரு முதல்வருக்கு அனைத்து தரப்பிலும் அறிமுகமிருக்கும். அதைவைத்து பரப்பப்படும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை இழக்க விரும்பவில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் பவ்யம் :

இதற்கிடையே, 'மத்திய அமைச்சர்கள் யாரையும் புண்படுத்தும்படி விமர்சிக்க வேண்டாம்' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தாலும் தங்கள் சாதனை மலரை தனித்தனியாகத்தான் வெளியிடும். ஆனால், தமிழ்நாட்டில் முதல்முறையாக மத்திய பி.ஜே.பி அரசின் சாதனை மலரை அ.தி.மு.க அரசு மலராக வெளியிட முடிவு  செய்யப்பட்டுள்ளது. 'நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும், பயனுக்காகவும் மத்திய அரசு எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே, தங்கள் மாவட்டத்தில் மத்திய அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் துறைகளில் உள்ள மாவட்ட அலுவலர்களை அணுகுங்கள். அவர்கள் கொடுக்கும் தகவல்களை புகைப்படங்களுடன் வெற்றிக் கதைகளாக தொகுத்தெடுங்கள். பின்னர் அந்த விவரங்களை கலெக்டரின்  ஒப்புதலுடன் தலைமையிடத்துக்கு அனுப்பிவையுங்கள்' என்று செய்தி விளம்பரத்துறை அறிவித்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களுக்காக மட்டுமே மத்திய அரசுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  இணக்கமாக செயல்படுகிறார் என்று நம்புவோமாக! 


டிரெண்டிங் @ விகடன்