அம்பேத்கரின் பாதையில் கிரேஸ்பானு... கிரேஸ்பானுவின் பாதையில் தாரிகா பானு... திருநங்கைகளின் நீண்ட பயணம்!

சென்னை, கோடம்பாக்கம் புலியூர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்படுகிறது. நேற்று(12-05-2017) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது. அந்த தெருவில் வசிக்கும் தாரிகா பானு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் தேர்ச்சி பெற்றதை, எதிர்வீட்டில் இருக்கும் அவரது தோழி வீட்டில் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். அந்த தெருவைச் சேர்ந்த சிலரும் அங்கு கூடியிருந்தனர். அதற்கு காரணம் தேர்ச்சி பெற்ற தாரிகா பானு ஒரு திருநங்கை. பல சிரமங்களுக்கு மத்தியில் அவர் பன்னிரண்டாம் வகுப்பை முடித்திருக்கிறார். இந்தியாவில், திருநங்கை அடையாளத்தில் பள்ளிப் படிப்பை முடிக்கும் முதல் நபரும் இவரே.

banu

தாரிகா கேக் வெட்டிய போது


தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு. ஆணாக பிறந்த, தாரிகாவுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் பெண்ணுக்கான உணர்வுகள் மேலோங்கியுள்ளன. அந்த உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், அந்த உணர்வுகளுக்கான காரணங்களும் தெரியாமல் தவித்துள்ளார். 2014-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் வரையில் ஆணாகவே பள்ளிப் பருவத்தை கழித்துள்ளார். தாரிகாவை, கிரேஸ்பானு (கிரேஸ்பானு, திருநங்கைகளுக்கான உரிமைகளுக்காக போராடிவருபவர்) என்ற திருநங்கை தூத்துக்குடியில் ஒரு பேருந்தில் வைத்து பார்த்துள்ளார்.

தாரிகா பானு மற்றும் கிரேஸ் பானு

அப்போது, தாரிகாவிடம் பெண்ணுடைய குணாதியசம் வெளிப்படவே கிரேஸ் அவரிடம் பேசியுள்ளார். தன் வேதனைகளை சொல்வதற்கு ஆள் இல்லாமல் தவித்த தாரிகா, கிரேஸிடம் அனைத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார். அதன்பின்னர் விஷயம் தாரிகாவின் வீட்டுக்குத் தெரியவருகிறது. தாரிகாவுக்கு என்று ஏதும் புதிதாக நடந்திருக்கவில்லை. எல்லாரையும்போல தாரிகா, வீட்டிலிருந்து விரட்டப்படுகிறார். தாரிகா, கிரேஸிடம் அடைக்கலமாகிறார். அவரை தாயாக ஏற்றுக்கொள்கிறார். கிரேஸ்பானு அவரை மகளாக பார்த்துக் கொள்கிறார் இன்றுவரையில். தாரிகா, ’நான் படிக்க வேண்டும் அம்மா’ என்று கிரேஸிடம் கேட்டிருக்கிறார்.

உடனே கிரேஸ் அதற்கான நடவடிக்கையை தொடங்க அவருடைய முயற்சி அனைத்துக்கும் முட்டுக்கட்டை. பள்ளிகள் அனைத்தும் கதவுகளை இழுத்து மூடிவிட்டன. கிரேஸ்க்கு இது ஒன்றும் புதிதல்ல. அதனால் அவர் சளைத்துவிடவும் இல்லை. நேராக திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலகம் வாசலில் ’திருநங்கையருக்கு கல்வி கொடு’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் உட்கார்ந்துவிட்டார். அதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி வழங்கவே, அம்பத்தூர், காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தாரிகா பானு அறிவியல் பிரிவில் சேர்ந்தார். அவர் காலடி எடுத்து வைத்தது பள்ளியில் மட்டுமல்ல, சமூக விடுதலையை நோக்கிய பயணத்திலும் தான்.

banu protest

முதன்மை கல்வி அலுவலகத்தில் போராடிய போது..

அந்தப் பள்ளி அவருக்கு அருமையான உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. நல்ல நண்பர்களும், பாகுபாடு இல்லாமல் பழகும் ஆசிரியையும் கொடுத்தது. தாரிகா, கிரேஸ்பானுவுக்கு அடுத்தபடியாக அவருடைய இயற்பியல் ஆசிரியர் செல்வத்தை முக்கிய நபராக பார்க்கிறார். அந்த அளவுக்கு அவர், தாரிகாவுக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். தாரிகா தனது பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து டியூசன் செல்வாராம். அவருடைய பள்ளிச் சூழலில் திருநங்கை என்ற பாகுபாடு இல்லாத ஒரு நல்லச் சூழல் அவருக்கு கிடைத்திருந்தது. இந்தமுறை பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒரே ஒரு திருநங்கை என்ற வரலாற்றுச் சிறப்பை அடைந்துள்ளார். அதனால் தாரிகாவின் நம்பிக்கை இன்னும் இரட்டிப்பாகி இருக்கிறது. அவர், நான் எப்படியும் மருத்துவராகிவிடுவேன் என்று உறுதியுடன் கூறுகிறார், தாய் கிரேஸ்பானுவின் முகத்தைப் பார்த்தபடியே. கிரேஸ்பானுவின் முகத்தில் ஒரு பெருமிதம் மிளிர்கிறது.

கிரேஸ்பானுவின் கூட்டுக்குள் அடைக்கலமாகி இருப்பது தாரிகா மட்டுமல்ல... ரேணுகா பானு, அகிதா பானு, ரெஜினா பானு ஆகியோருக்கும் கிரேஸ்தான் தாயாக இருந்து வருகிறார். (ரேணுகா தனியார் மருத்துவமனையிலும், ரெஜினா உணவுவிடுதியிலும் வேலைபார்க்கின்றனர். அவர்களும் பொறியியல் படிப்பை முடித்தவர்கள்) கிரேஸ்பானு நீண்ட காலமாக திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருபவர். இந்தியாவிலேயே திருநங்கைகள் அடையாளத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த முதல் நபர் ஆவர். திருநங்கைகள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ச்சியாக போராடி வருகிறார். ஒரு பெரும் போராட்டத்தின் மூலமாவது, தாரிகாவுக்கு மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கி கொடுப்பேன்’ என்று உறுதியாகக் கூறுகிறார்.

ரேணுகா, கிரேஸ், தாரிகா, அகிதா

ஆம்... இது பானுவின் குடும்பம்... அவர்கள் கார்ல்மார்க்ஸையும், அம்பேத்கரையும் படிக்கிறார்கள். அவர்களது பாதையில் உறுதியாக பயணிக்கிறார்கள். ஒரு சமூகத்தின் விடுதலையை நோக்கி... இந்த சென்னை பெருநகரத்தின் மத்தியப் பகுதியில் வாழ்கிறார்கள். கோடம்பாக்கத்தில் புலியூர் பகுதியில் முதல்தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசிக்கின்றனர். இரு அறைகளை கொண்ட அந்த வீடு ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது. துணிகள் களைந்து கிடப்பதோ, பொருட்கள் நிறைந்து இருப்பதோ என்று இல்லை.. இரு அறைகளிலும் தேவையான அளவுக்கு இடங்கள் இருக்கின்றன. அந்த அறைகளுக்குள்ளே இரண்டு முயல்கள் துள்ளிக்குதித்துக் விளையாண்டு கொண்டிருக்கின்றன. அந்த முயல்கள் அவர்கள் மடிமீதும் ஏறிஅமர்கின்றன.

அம்பேத்கர் படம் கொண்ட நாள்காட்டி ஒன்று சுவறில் தொங்குகிறது. ஜன்னலை ஒட்டிய சுவரில் விகடன் நம்பிக்கை விருது உள்பட பல சமூக அமைப்புகளால் வழங்கப்பட்ட விருதுகள் நிறைந்திருக்கின்றன. இதுதான் பானுக்கள் வாழும் வீடு. அந்த விருதுகள் அனைத்தும் கிரேஸ்பானுவுக்கு வழங்கப்பட்ட விருதுகள்... அவருடைய இடையறாத பணிக்கு கிடைத்த அங்கீகாரங்கள்... கிரேஸ்பானுவின் பாதையில் தாரிகாபானு பயணிக்கிறார்... இன்னும் அந்தப் பாதையில் ஏராளமான பானுக்கள் பயணிக்கட்டும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!