வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (13/05/2017)

கடைசி தொடர்பு:10:27 (15/05/2017)

மு.க.ஸ்டாலினை குறி வைக்கும் பா.ஜ.க தலைவர்கள்..!

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். 


பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் 'தூய்மை இந்தியா' திட்டத்தின்படி இன்று சென்னையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, 'மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டவில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு தமிழகத்தில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி, மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. தமிழக அரசியல் நாகரிகம் அதல பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது' என்று குற்றம்சாட்டினார்.

அதேபோல மற்றொரு இடத்தில் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'இலங்கைக்குச் சென்ற பிரதமர் மோடி தமிழர்கள் பகுதிக்குச் சென்றது மகிழ்ச்சியான ஒன்று. புதுச்சேரி அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும். 50 ஆண்டுகளில் தி.மு.க என்னென்ன துறைகளில் என்னென்ன செய்தது என்று கூற வேண்டும். தி.மு.க தன்னை பலப்படுத்துவதாக காட்ட முயற்சி செய்கிறது. தி.மு.க செய்யும் பாசாங்கு பலிக்காது. தி.மு.க உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுகிறது' என்றார்.