வெளியிடப்பட்ட நேரம்: 21:46 (13/05/2017)

கடைசி தொடர்பு:21:45 (13/05/2017)

'எரிந்து விழுகிறார் கேப்டன்'! - தே.மு.தி.க. தலைமையில் இருந்து ஒரு வேதனைக் குரல்!

                                               கேப்டன் விஜயகாந்தின் இடதுபக்கம் பார்த்தசாரதி                   

தே.மு.தி.க. தலைமைப் பக்கம் 'பாண்டவர்பூமி' காட்சிகள் ஓடத் தொடங்கி இருக்கின்றன. உரிமைக்கும், பாசத்துக்குமான இந்தப் போராட்டத்தில் கையறு நிலையில் சிக்கிக்கொண்டிருப்பவர், கேப்டன் விஜயகாந்தால், 'பார்த்தா' என்று பாசத்தோடு அழைக்கப்படும் பார்த்தசாரதி. மாணவப் பருவத்திலேயே விஜயகாந்த் ரசிகர் மன்றம் தொடங்கிய பார்த்தசாரதி, விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதும், தே.மு.தி.க-வின் முக்கிய நிர்வாகியாகி, தீவிரமாக செயல்பட்டு வருபவர்...'மக்களுடனும், ஆண்டவனுடனும் மட்டும்தான் கூட்டணி' என்று அறிவித்து, 2006-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு, தனி ஒருவராக வெற்றிபெற்று சட்டசபைக்குள் நுழைந்தவர் விஜயகாந்த். விஜயகாந்த் கட்சி தொடங்கியது முதல் அவரின் நிழலாய் இருந்தவர் பார்த்தசாரதி. 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29  தொகுதிகளில் தே.மு.தி.க. வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று, சட்டசபைக்குள் நுழைந்தார் பார்த்தசாரதி. இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க. தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலும் அவர் நியமிக்கப்பட்டார்.

கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எப்போதும் காணப்படும் பார்த்தசாரதி, கடந்த சில வாரங்களாக அங்கு ஆளையே காணோம். 'விஜயகாந்த் உடன் அவருக்கு ஏதோ மன வருத்தம் போலிருக்கிறது; பார்த்தசாரதி இப்போதெல்லாம் யாருடனும் பேசுவதில்லை. ஒருமாதத்துக்குமுன் அவர் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். கேப்டனிடம் ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் கேப்டன், அவரிடம் எதுவும் பேசாமல் தவிர்த்து விட்டார். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரம் என்பதால், அப்போது அங்கிருந்த தனது கட்சியின் வேட்பாளர் மதிவாணனை அருகில் வரச்சொல்லி கேப்டன் பேச ஆரம்பித்து விட்டார். பிரச்னையை பிரேமலதாவின் கவனத்துக்கு பார்த்தசாரதி கொண்டு போயிருந்தால், அது உடனே கேப்டனுக்குச் சென்றிருக்கும். ஆனால், அவர் தற்போது சொல்லவும் முடியாமல், மெல்லவும் இயலாமல் ஏறக்குறைய 'அழுகாச்சி பொம்மை' போல மாறி விட்டார்" என்கிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள். தே.மு.தி.க.வில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை  பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் கொண்டு சேர்க்கும் பொறுப்பில் உள்ள தலைமை நிலையச் செயலாளரின் நிலைமையே இப்படி என்றால், அந்தக் கட்சியின் எதிர்காலம் என்னாகும்? பார்த்தசாரதியை செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கருதி, அவரது எண்ணில் பேசினால், அது சுவிட்ச் ஆஃப் ஆகி விட்டிருந்தது.

"பார்த்தசாரதிக்கு என்னதான் பிரச்னை? எங்கிருந்து ஆரம்பித்தது?" விசாரித்தோம். 

"சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் மதிவாணன். அந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சியின் மாநில நிர்வாகிகளும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களுமான பார்த்தசாரதி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி உள்பட ஐந்து பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட வினோபா நகரில் சுதீஷ் தலைமையில் நடந்த பிரசாரத்துக்குக்கூட வேட்பாளர் வரவில்லை. 'தேர்தல் அலுவலர் மீட்டிங் இருக்கிறது' என்று சொல்லி அங்கேயே உட்கார்ந்து விட்டார். அந்த மீட்டிங்கிற்கு வேட்பாளரின் சார்பில் யாரையாவது அனுப்பினாலே போதும். ஆனால், சுதீஷையே புறக்கணிக்கும் அளவிற்கு மதிவாணன் அன்று நடந்து கொண்டார். கடைசியில் தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு சுதீஷே நேரில் போய் மதிவாணனை அவருடைய காரில் அழைத்து வந்து பிரசாரத்தில் பங்கேற்கச் செய்தாராம். இதையெல்லாம் கேப்டனிடம் போய்ச் சொன்னால் அவர் அதை காதில் வாங்குவதேயில்லை. இப்படிப் பல விஷயங்கள் இருக்கிறது... " என்கின்றனர் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க.வினர்.       

                  விஜயகாந்த் மனைவி  பிரேமலதாவுடன் பார்த்தசாரதி      

 ஆனால், பார்த்தசாரதி ஆதரவாளர்களோ, "கேப்டன் முன்புபோல் இல்லை; எதற்கெடுத்தாலும் எரிந்து விழுகிறார், பாசத்துடன் 'பார்த்தா' என்றழைத்த கேப்டன் இப்போது இல்லை என்ற வேதனை பார்த்தசாரதிக்கு உள்ளது. இதனால், அவர் சோர்ந்து போயிருக்கிறார்" என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும், "தான் பிறந்து வளர்ந்த எழும்பூரை விட்டு, கட்சிக்காக தே.மு.தி.க அலுவலகத்திற்கு அருகில் அரும்பாக்கத்திலேயே வசித்து வந்தார் பார்த்தசாரதி. ஆனால், இப்போது மிகவும் மனம் நொந்து மீண்டும் எழும்பூருக்கே குடிபெயர்ந்துள்ளார். பார்த்தசாரதியின் அப்பா மற்றும் அவரது அண்ணிகள் என்று அடுத்தடுத்து அவரது குடும்பத்தில் ஏற்பட்ட மரணங்களால், கடும் துயரத்தில் இருந்த பார்த்தசாரதிக்கு, அவரது மனைவியும் சமீபத்தில் விபத்தில் சிக்கி, படுக்கையில் இருக்கும் வேதனையும் சேர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது விஜயகாந்த்தின் மனம் மாற்றமும், அவருக்கு உள்ள வேதனையை கூடுதலாக்கி இருக்கிறது" என்று பார்த்தசாரதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்....நட்புன்னா அது என் 'பார்த்தா' தான் என்று சந்தானத்தைக் காட்டி உதயநிதிஸ்டாலின் சொல்வது போல் கேப்டன் சொன்னால், பழையபடி பார்த்தசாரதி வெளிச்சத்துக்கு வருவாரோ?


டிரெண்டிங் @ விகடன்