Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கத்திக்குத்து!' - அமைச்சர் தரப்பு அடாவடி 

சென்னை சைதாப்பேட்டையில் ஜெயலலிதா வீட்டு சமையல்காரான 80 வயது முதியவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் குடியிருந்து வருபவர் முருகேசன். செய்தி, மக்கள் தொடர்பு துறையில் உதவி இயக்குனரான இவர், சிப்காட்டில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பஞ்சவர்ணம். 80 வயதான இவர், சைதாப்பேட்டை வசித்துவருகிறார். பஞ்சவர்ணம், போயஸ் கார்டனில் 1991ம் ஆண்டு 1996ம் ஆண்டு வரை முதன்மை சமையல்காராக பணியாற்றினார். இந்த நிலையில் முருகேசன் வீட்டிற்கு இன்று காலையில் காரில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல், முருகேசனை பெயர் சொல்லி அழைத்தது. சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து முருகேசன் வெளியில் வந்தார். அப்போது அந்தக்கும்பல், முருகேசனை கத்தியால் குத்த முயன்றது. இதைப்பார்த்த பஞ்சவர்ணம் அதை தடுத்துள்ளார். இதில் அவரது இடதுபக்க தலையில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் பஞ்சவர்ணம் சரிந்தார். 

இதற்குள் பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். இதைப்பார்த்த மர்ம கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. இதையடுத்து பஞ்சவர்ணத்துக்கு சைதாப்பேட்டையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இருந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முருகேசன் கூறுகையில், "டிராக்டர் வாங்கிய விவகாரத்தில் எனக்கும், ஒருவருக்கும் பிரச்னை இருந்துவந்தது. அவர்கள்தான் என்னை இன்று கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். கத்தியால் என்னை குத்த முயன்றனர். அதை என்னுடைய அப்பா தடுத்தபோது அவரது தலையில் கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால், போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் உதவி கமிஷனரிடம் தகவலை தெரிவித்துள்ளேன். ராயபேட்டை அரசு மருத்துவமனையில்கூட என்னுடைய தந்தைக்கு சிகிச்சை அளிக்க தயக்கம் காட்டப்படுகிறது. இதனால், இந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க விடாமல் மேலிட தலையீடு இருப்பது தெரிகிறது. என்னுடைய அப்பா எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு சமையல்காராக இருந்தார். என்னை காப்பாற்ற முயன்ற என்தந்தைக்கு இந்தநிலைமை ஏற்பட்டது எனக்கு மனவேதனையாக இருக்கிறது. இந்த சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"என்றார். 

இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸாரிடம் கேட்ட போது, "புகார் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்த சம்பவத்தில் யாருடைய தலையீடும் இல்லை"என்றனர். 

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தமிழக அமைச்சருக்கு நெருக்கமான ஒருவர்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அமைச்சர் தரப்பிலிருந்து வந்த பிரஷர் காரணமாக சிகிச்சை அளிப்பதிலும் நடவடிக்கை எடுப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது"என்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close