Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுட்டெரிக்கும் வெயிலும்... சென்னையின் பிரமாண்ட தண்ணீர் பந்தலும்!

                                            பன்னீர்செல்வம் அணி எம்.பி. மைத்ரேயன்                                    விகடன் இணையத்தில், 'வெயில் குடித்து வளரும் வணிகம்... காணாமல் போன தண்ணீர்ப்பந்தல்கள்' என்ற தலைப்பில், கடந்த மாதம்     24-ம் தேதி ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஒருவர் தாகம் தணிக்கும் பணியில் இறங்கியுள்ளார். அந்தக் கட்டுரையில், 'எவ்வளவு வெயில் வாட்டினாலும், சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்படும் தண்ணீர் பந்தல்கள்தான், மக்கள் சுருண்டுவிழுந்து சாகாமல் காப்பாற்றிக்கொண்டிருந்தது. அதுபோன்ற தண்ணீர் பந்தல்கள் இந்த ஆண்டு எந்தவொரு கட்சி சார்பிலும் அமைக்கப்படவில்லை. வழக்கமாக, தலைநகர் சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் 'அம்மா' பெயரிலும், 'அய்யா' பெயரிலும் இதர கட்சித் தலைவர்கள் பெயர்களிலும் வைக்கப்படும் தண்ணீர் பந்தல்கள், இந்த ஆண்டு இதுவரை மிஸ்ஸிங். அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, அதாவது கடந்த ஆண்டு கோடைகாலம் வரை, அவரிடம் நல்லபெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கோடைகால தண்ணீர்ப்பந்தல்களை அமைத்து, பத்திரிகைகளுக்கும்  ஊடகத்துக்கும் போஸ்கொடுத்த கழக உடன்பிறப்புகள் இந்த ஆண்டு ஏனோ, மக்களின் தாகத்தைத் தீர்க்கத் தவறிவிட்டார்கள்! அம்மாவே இல்லாதபோது, இதுபோன்ற பந்தல்களை அமைத்து யாரிடம் நல்ல பெயர் வாங்கப் போகிறோம்? என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி தரப்பும் நினைத்திருக்கலாம்...' என்று தொடரும் அந்த கட்டுரையின் வரிகள்.

இந்த நிலையில், 'உங்களுக்காக' என்ற அமைப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் சுனில் என்பவர் நம்மைத் தொடர்புகொண்டார். "விகடனில் வந்த கட்டுரையைப் படித்ததும், உண்மையிலேயே மனது வலித்தது. அம்மாவிடம் நல்ல பெயர் வாங்க என்று சிலர் அப்படி செய்திருக்கலாம். என்னைப் போன்ற பல லட்சம் பேர் எந்த உள்நோக்கமும் இல்லாமல், கோடைகாலங்களில் தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்துக்கொண்டுதான் இருந்தோம். அம்மா மறைவுக்குப் பின் எல்லாமே சூன்யமான ஒருநிலைக்குப் போய்விட்டது. இந்த தண்ணீர் பந்தல் மட்டுமல்ல, பல விஷயங்கள் நடக்காமலே இருந்துவிட்டன என்பது உண்மைதான். வெயிலில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.   குடிப்பதற்கே நல்ல குடிநீர் கிடைக்காமல் மக்கள் படும் அவதியை கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்...

                          பிரமாண்டமான தி.நகர் தண்ணீர்ப்பந்தல்                               

அண்ணன் ஓ.பி.எஸ் அவர்களிடம் இதுகுறித்துப் பேசினேன். உடனடியாக  பிரமாண்ட அளவிலான தண்ணீர்ப்பந்தலைத்  திறக்கும்படி ஆலோசனை வழங்கினார். அதன்படி,  குளிர்விக்கப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில்கள், தர்பூசணி, நுங்கு, இளநீர் என்று அனைத்திலும் ஒரு லோடு வாங்கிவந்து தி.நகரில் இறக்கிவைத்தேன். தி.நகர் பனகல் பூங்காவில், டாக்டர் மைத்ரேயன் எம்.பி நேற்று அந்தத் தண்ணீர்ப்பந்தலை திறந்துவைத்து பொதுமக்களின் தாகம் தணித்தார். அதேபோல குளிர்விக்கப்பட்ட ரோஸ்மில்க், அன்னாசிப் பழச்சாறு, திராட்சைச் சாறு, மாம்பழச் சாறு, மோர் போன்றவையும் அங்கே பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இத்தனை நாள் தண்ணீர்ப்பந்தல் திறக்காமல் விட்டதற்கு பிராயச்சித்தமாக இன்னொன்றும் செய்கிறேன். இரண்டாயிரம் பொதுமக்களுக்கு ஆடைகள், அரிசி, ரவை, கோதுமை, சர்க்கரை, குளியல்-துணி துவைக்கும் சோப்புகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களையும் அதே இடத்தில் வழங்குகிறேன். விகடனுக்கு நன்றி சார்" என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசி முடித்தார். சென்னை தி.நகர் பக்கம் போகிறவர்கள், மலைபோல குவிந்திருக்கும் நுங்கு, இளநீர்களைக் கண்டு மலைத்து நிற்கிறார்கள். தண்ணீர்ப்பந்தலைத் திறந்து வைக்க வந்த டாக்டர் மைத்ரேயன் (ஓ.பி.எஸ். அணி) எம்.பி., "விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும், தமிழகத்தில் ஓ.பி.எஸ். தலைமையிலான ஆட்சி மலரும்" என்று அளித்த பேட்டி, தண்ணீர்ப்பந்தலின் குளிர்ச்சியைத் தாண்டி, எதிரணியினருக்கு சூட்டைக் கிளப்பி விட்டிருக்கிறது. அரசியல் சார்ந்தோ, தனிப்பட்ட முறையிலோ ஏதோ ஒருவகையில் மக்கள் தாகம் தீர்க்க ஒரு கரம் முன் வந்திருக்கிறது. கரங்கள் பெருகட்டும், கோடைகாலம் சுகமாகட்டும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement