ஸ்தம்பித்தது தமிழகம் : நெருக்கடியை சமாளிக்க அரசின் புதிய பிளான்! | Transport strike : Vijaya Baskar's new plan to handle the crisis

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (15/05/2017)

கடைசி தொடர்பு:14:24 (15/05/2017)

ஸ்தம்பித்தது தமிழகம் : நெருக்கடியை சமாளிக்க அரசின் புதிய பிளான்!

தமிழகத்தில் 75 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருவதாகவும் நாளை 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Vijay Baskar

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று போக்குவரத்துத்துறை  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, நேற்று முதலே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டதைக் கடிதம் மூலமாக அமைச்சரிடம் அளிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த விஜயபாஸ்கர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதி அளிக்காததால், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. 

நேற்று அறிவித்தபடி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான  இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அரசுப் பேருந்துகள்  இயங்காததால், மக்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களைத் தேடிச் செல்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்துவருகின்றனர். 

Vijaya Baskar
 

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலைச் சரி செய்ய, தினக்கூலி அடிப்படையில்  ஓட்டுநர்களைத் தேர்வுசெய்து, அரசுப் பேருந்துகளை இயக்க உள்ளதாக விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். திறமை வாய்ந்த ஓட்டுநர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். நாளை 100 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது என உறுதி அளித்துள்ளார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க