வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (15/05/2017)

கடைசி தொடர்பு:13:40 (15/05/2017)

சூப்பர் குடும்பம்... குடும்ப தினத்தில் சங்கமித்த 130 பேர்! #InternationaFamilyDay

குடும்பம்

குழந்தைகள் தினம், அன்னையர் தினம், பெண்கள் தினம், ஆண்கள் தினம் என்று பல தினங்கள் தனித்தனியாக உலக அளவில் கொண்டாடப்பட்டாலும், இவை அனைத்தையும் இணைக்கிற தினமாக சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

குடும்ப தினம் என்றால், கணவன், மனைவி, குழந்தை என்று சிறு குடும்பமாக வாழ்கிறவர்களுக்கான தினம் என்று பலரும் நினைக்கிறார்கள். குடும்பம் என்பது இந்த மூன்று நான்கு பேர்கள் மட்டுமல்ல. சங்கிலித்தொடர்போல பல உறவுகளை இணைத்துச் செல்வதுதான் குடும்பமாகும். தொட்டி செடி போன்றது அல்ல. ஆலமரம் போன்றது. ஒரு குடும்பம் என்பதில் மூன்று தலைமுறையினராவது கலந்திருக்க வேண்டும்.

அந்த காலத்தில் வீடென்றால், தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, மாமா, அத்தை, அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், தம்பிகள் என்று ஒன்றாக இருப்பார்கள். ஆனால், இப்போது குடும்பம் என்பது குட்டிக் கூடாரங்கள் ஆகிவிட்டது.

இப்போதுள்ள பிள்ளைகளுக்கு உறவு முறையே தெரியவில்லை. ஒற்றைப் பிள்ளைகளுக்கு எப்படி உறவுமுறை சாத்தியப்படும். அவர்களுக்கு சித்தப்பா, பெரியப்பா பிள்ளைகள்தான் சகோதரர்கள். பங்காளி உறவுமுறையே இப்போது தெரியாமல் போய்விட்டது.
இப்படி குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை இணைக்கும் விதமாகத்தான் குடும்ப தினம் மே 15 ல் கொண்டாடப்படுகிறது. அப்பா, அம்மாவைத் தவிர்த்து மற்ற எல்லா உறவுகளையும் அங்கிள், ஆன்ட்டி என்றும், பிரதர், சிஸ்டர் என்றும் சொல்ல வைத்துள்ளோம்.

மற்ற தினங்களைப்போலவே இந்தக் குடும்ப தினத்தையும், 'ஹேப்பி ஃபேமிலி டே' என்று ஒற்றை வார்த்தையில் ஸ்மைலி மற்றும் பூங்கொத்து சிம்பிளுடன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலம் அனுப்பிவிட்டு, அபார்ட்மென்ட் கதவைச் சாத்திக்கொண்டு
டி.வி. பார்ப்பதோடு கடந்து சென்றுவிடுகிறது குடும்ப தினம்.

அப்படியில்லாமல் குடும்ப தினத்தை, பல்வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் குடும்பத்தினர் அனைவரையும் ஒரு இடத்தில் குழும வைத்து ஒரு விசேஷம் போல மதுரையில் ஒரு குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்கிறார்கள். இத்தகவலைக் கேட்ட நமக்கு ஆச்சர்யமாக இருக்கவே, நாம் அவர்களைக் காணச் சென்றோம்.

மே 15-ம் தேதிதான் குடும்ப தினம் என்றாலும், ஒரு நாள் முன்பாகவே மதுரை திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு மண்டபத்தில் குழுமியிருந்தார்கள் அக்குடும்பத்தினர்.

குடும்பத்தினர்

நாம் உள்ளே நுழைந்ததும் ஐந்து வயதுக் குழந்தைகள் முதல் தொண்ணூறு வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்களின் சிரிப்பும், ஓட்டமும், கதை பேச்சுமாக மண்டபமே விஷேச தினம் போல ஜோராக இருந்தது. ஹைதராபாத், காஞ்சிபுரம், சென்னை, திருச்சி, சேலம் என்று பல ஊர்களைச் சேர்ந்தவர்களும் தங்களது தாய் மடியான மதுரையில் சங்கமாகியிருந்தனர்.

இந்த முயற்சிகளுக்கு வித்திட்டவர் டி.எல்.ரங்காராம். ஒட்டு மொத்த குடும்பமும் அவரை கைகாட்ட, அவரிடம் பேசினோம்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி ரேடியோல சர்வதேச குடும்ப தினம் பத்தி பேசிட்டு இருந்தாங்க. அதைக் கேட்டதும் எனக்குள்ள ஒரு ஸ்பார்க். நாமளும் இந்தத் தினத்தை கொண்டாடினா என்னனு... ஆனா என்னோட குடும்பத்தோட மட்டுமில்ல... ஒட்டு மொத்த எங்க ஃபேமிலியோடனு முடிவு பண்ணினோம்.

நாங்கள் தொப்பே சேஷையர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அதனால தாத்தாவோட வாரிசுகள் எங்கெல்லாம் இருக்காங்கனு கணக்கெடுத்தோம். கொஞ்சம் சிரமமா இருந்தது கண்டுபிடிக்க. ஆனா விடாமுயற்சி பலன் தந்தது. எங்க தாத்தாவுக்கு மூன்று பையன் ஒரு பெண். அவர் சகோதரர் சேஷயருக்கு ஆறு பையன்கள், மூன்று பெண்கள். அவங்களை எல்லாம் கண்டுபிடிச்சோம். இவங்களோட இந்தத் தலைமுறையைச் சேர்ந்த என் வீட்டுப் பசங்க, எங்க கூட பிறந்தவங்க வீட்டு பசங்களையும் ஒண்ணா இணைச்சோம்.

அப்படிதான் ஆரம்பமாச்சு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த எங்க குடும்பத்தோட ஒன்றுகூடல். அப்பவே 90 பேர் கூடினோம். பாட்டு, ஆட்டம், பேச்சு, அரட்டைனு கலகலப்பா போச்சு. அந்த உறவுச் சங்கிலியை விட மனசில்லை. அதுல வராத பலரையும் திரும்பவும் ஒருங்கிணைச்சு இதோ இன்னைக்கு மட்டும் நாங்க 130 பேரு குழுமியிருக்கோம்.

மதுரை குடும்பம்

குடும்ப தினம்னாலே அரட்டை, கச்சேரினு பொழுது போக்காம, எங்க குடும்பத்துல யார் யார் என்ன உறவு முறைனு எங்க பசங்களுக்கு எல்லாம் விளக்கினோம். குழந்தைங்களுக்கு உறவு முறையோட பலத்தை விளக்கினோம். அந்த ஒன்று கூடல்ல இருந்த பெண்களுக்கு சமையல் செய்ற வேலைக்கு விடுதலைக் கொடுத்தோம். முன்னாடியே திட்டமிட்டபடி வெளிய உணவை வாங்கி எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டோம்.

நாம தனி ஆள் இல்லை. நமக்குன்னு இவ்வளவு சொந்தங்கள் இருக்காங்களானு பசங்க எல்லாம் அதிசயிச்சுப் போயிட்டாங்க" என்றபடி சந்தோஷ ஜோதியில் ஐக்கியமானார்.


குழந்தைகள்


அடுத்ததாகப் பேசினார்கள் ஆசிரியர் ஸ்ரீதர்பாபுவும், ஆடிட்டர் சந்திரசேகரனும், “இப்ப உள்ள பிள்ளைகளுக்கு, சித்தப்பா, பெரியப்பானா யாருனு தெரியல. அதாவது அப்பா அம்மா கூட பொறந்தவங்க மட்டும்தான் சொந்தக்காரங்கனு நினைச்சுட்டு இருக்காங்க. ஒண்ணுவிட்ட சித்தப்பா, சித்தி, மாமாவும் நமக்கு சொந்தம்தான்ங்கிறதை புரிய வைக்கிறோம்.

குடும்பத்திலுள்ள பெரியவர்கள்


எங்க குடும்பத்திலேயே ஒத்த பிள்ளையை வைச்சிருக்கிற பெத்தவங்களும் உண்டு. அவங்களுக்கு எத்தனைத் தம்பி, அக்கா, அண்ணன், தங்கைகள் இருக்காங்கனு காட்டனும்னு நினைச்சோம். எங்க விருப்பம் நிறைவேறிடுச்சு. இவ்வளவு ஏன்.... இந்த ஃபங்ஷனுக்கு வந்த சிலருக்கு குழந்தைங்க இல்ல. அந்த தம்பதிக்கு எல்லாம் 'உங்களுக்கு எத்தனை குழந்தைங்க இருக்காங்க பாருங்க. மனசு வருத்தப்படாதீங்க'னு காட்டியிருக்கோம். சந்தோஷத்துல அவங்களுக்குக் கண்ணீர் வந்திடுச்சு. ஒட்டு மொத்த குடும்பமும் எமோஷனல் ஆகிட்டோம்.

இப்ப இருக்கிற சூழல்ல மனுஷன் எந்திரம் மாதிரி மாறிட்டான். எப்பவும் குழந்தைங்களும் பெரியவங்களும் போனும் கையுமா இருக்காங்க. வாழ்த்துகூட முகத்தைப் பார்த்து சொல்லாத நிலை வந்திடுமோனு பயப்பட்டோம். இப்படியே போனா உறவு முறைப் போன், நெட் வழியா பரவுர வாய்ச்சொல் ஆகிடும்னு நினைக்கிறோம். இந்த விழாவுல கலந்துகிடுற எங்க குடும்ப பெண்கள் ஆண்கள்னு தனக்கு இருக்கிற மனக்குறையைக் கூட பகிர்ந்துப்பாங்க. அதனால நிறைய பிரச்னைகள் தீரும்னு நம்புறோம். இப்போதைக்கு எங்க தாத்தா, எங்க குடும்பம் மட்டும்தான் கூடியிருக்கோம். இனி அடுத்த வருஷம் இங்க இருக்கிற புகுந்த வீட்டுப் பெண்களோட அப்பா அம்மா அண்ணன்னு அத்தனை பேரையும்  இந்த அன்புச் சங்கமம்ல கலக்க விடலாம்னு ஐடியா பண்ணியிருக்கோம். அதுக்கான விதையை இப்ப தூவியாச்சு. இனி பணிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டியதுதான்" என்று சொல்பவர்களின் முகங்களில் அத்தனை சந்தோஷம்.

குடும்பம்


பார்க்கப் பார்க்க மனது நிறைந்து வெளியில் வந்தோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்