Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘எங்க சம்பளப் பணத்தைக் கேட்டுத்தான் ஸ்டிரைக் பண்றோம்’ காரணம் சொல்லும் தொழிற்சங்கங்கள்

 அரசு பஸ்

‘எங்க சம்பளப் பணத்தைக் கேட்டுத்தான் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’ என்று, போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 

நாள் ஒன்றுக்கு இரண்டு கோடியே 35 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணிக்கின்றனர். இதன்மூலம் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் 20 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துவருகிறது. ஆயினும், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்குவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் பட்டுவாடா செய்வதில்கூட சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக, போக்குவரத்துக் கழக வளர்ச்சிக்கு ஓடாய் உழைத்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு, ஓய்வூதியம்கூட சரிவர வழங்கப்படவில்லை. மேலும், அவர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிலுவைத் தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது. இதனால் விரக்தியடைந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள் தங்களின் கோரிக்கைகளைச் சில மாதங்களாக அரசுக்கு அறவழியில் தெரிவித்துவந்தனர். ஆனால், தமிழக அரசும், அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகமும் எதையும் கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன், போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன்விளைவு, நேற்று நள்ளிரவு முதல் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. வார விடுமுறை முடிந்து வேலைக்குச் செல்பவர்கள், அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கடும் அவதியடைந்தனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வின் அண்ணா தொழிற்சங்கத்தினர்மூலம் குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், அரசு பஸ்களில் கடும் கூட்டம் அலைமோதின. போதிய பஸ்கள் இல்லாததால், ஆட்டோக்களிலும் வாடகைக் கார்களிலும் மக்கள் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்தனர்.

அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டம், மக்களின் இயல்புவாழ்க்கை பாதித்துள்ளது. பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்துமிடங்கள் ஆகியவற்றில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதின. சில இடங்களில், வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்தன. 'அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு அரசே முக்கிய காரணம்' என்று சொல்கின்றனர் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள்.


ஆறுமுகம் இதுகுறித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் கூறுகையில், "தமிழகத்தில் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன. இங்கிருந்து தினமும் 23,028 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் நகரப் பகுதிகளிலும், மீதமுள்ள பஸ்கள் புறநகர் பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. மக்கள் நலன்கருதி, குக்கிராமங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இருப்பினும், சேவை நோக்கில் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளப் பணத்தை போக்குவரத்துக் கழகங்கள் சுரண்டிவந்துள்ளன. அதாவது, ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் தொழிலாளர் வைப்புநிதி (பி.எப்), சிக்கன நாணயச்சங்கம், இன்சூரன்ஸ், பணிக்கொடை உள்ளிட்ட காரணங்களுக்காக பணம் பிடிக்கப்படும். இந்தத் தொகை, போக்குவரத்துக் கழகங்கள்மூலம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலுத்தப்படும். குறிப்பாக, பி.எப் வகைக்காக ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம், போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பி.எப் அறக்கட்டளையில் வரவு வைக்கப்படும். ஆனால், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து போக்குவரத்துக் கழக நிர்வாகம் பிடித்தம் செய்தாலும், அதை அங்கு செலுத்தாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் இருந்துவந்துள்ளது. இதுபோல ஒவ்வொன்றுக்கும் பிடித்தம் செய்யப்பட்ட தொகை செலுத்தப்படாத வகையில், 7,000 கோடி வரை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்  சுரண்டிவிட்டது. இந்தத் தொகையை தொழிற்சங்கங்கள் கேட்டால், 750 கோடி ரூபாய் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின்போது மேலும், 500 கோடி ரூபாயைத் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தப் பணத்துக்கு அரசு தரப்பிலிருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால்தான் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தவிர, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 1,700 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளது. தற்போது, 64,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மாதம்தோறும் 74 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், அதைக்கூட வழங்க முடியாத அளவுக்கு போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் செயல்படுகின்றன. இதற்கெல்லாம், அரசும் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிர்வாகச் சீர்கேடே காரணம். டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலும் டீசல் விலை அதிகரித்துவருகிறது. இதனால், அரசுத் தரப்பில் டீசல் விலை 41 ரூபாய்க்கு (ஒரு லிட்டர்) மேல் உள்ள தொகையை அரசே போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கும் என்று தெரிவித்தது. ஆனால், அந்தத் தொகையையும் அரசு முழுமையாக வழங்குவதில்லை. மேலும், டீசல் விற்பனைமூலம் மாநில அரசுக்கு விற்பனை வரியும், மத்திய அரசுக்கு உற்பத்தி வரியும் வருமானமாகக் கிடைத்துவருகிறது. இதில், மாநில அரசு, போக்குவரத்துக் கழகங்களுக்கு மட்டும் விற்பனை வரியை ரத்துசெய்தால், போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிதிநெருக்கடி குறையும். அடுத்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ்பாஸுக்கு உள்ள தொகையையும் (மாரிட்டோரியம்) அரசு, சரிவர போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்குவதில்லை. அடுத்து, ஒரு கி.மீட்டருக்கு 35 ரூபாய் வருமானம் கிடைத்தால் மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் நிதிநெருக்கடி இல்லாமல் இயங்கமுடியும். ஆனால் பெரும்பாலான அரசு பஸ்களின் வருமானம், ஒரு கி.மீட்டருக்கு 25 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுவும் போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்க மற்றொரு முக்கிய காரணமாகும். அடுத்து, புதிய பஸ்களுக்கு கூண்டுகட்டும் பணி, உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட செலவினம், போக்குவரத்துக் கழகங்களுக்கு பெரும் சவாலாக இருந்துவருகிறது. 

வேலை நிறுத்தப்போராட்டம்


ஐந்தாண்டுத் திட்டத்தில் கிராமப்புறங்களுக்கு அரசுப் போக்குவரத்து வசதி கிடைக்க, தமிழக அரசுக்கு 321 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. அதைக்கூட தமிழக அரசு முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நிலவும் நிதிநெருக்கடியைச் சமாளிக்க, மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். ஒரு பஸ்ஸுக்கு ஒரு லட்சம் வரை வரியை அரசுப் போக்குவரத்துக் கழகம் செலுத்திவருகிறது. மேலும், மானிய விலையில் டீசல் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு எரிபொருள் மானியம் வழங்கப்பட்டால், போக்குவரத்துக் கழகங்களின் நிதிச்சுமை குறையும். சுங்கவரியாக ஆண்டுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 600 கோடி ரூபாய் வரை செலுத்துகிறது. அதற்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும். விபத்தில் சிக்கும் அரசு பஸ்கள், நீதிமன்றங்களால் ஜப்தி செய்யப்படுவதுண்டு. அரசு பஸ்களை மீட்டெடுக்க, போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க, கர்நாடகா மாநிலத்தில் பின்பற்றப்படுவதைப் போல டிக்கெட் கட்டணத்துடன் பயணிகளுக்கு விபத்துக் காப்பீடு கட்டணத்தையும் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களைப் போக்குவரத்துக் கழகங்களில் அரசு செய்தால், வருவாய் அதிகரிக்கும்" என்றார். 

போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் அரசு பஸ்களை இயக்கிவருகின்றனர். முழுமையாக பஸ் சேவை இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது வேலைநிறுத்தம் முழு வெற்றியை அடைந்துள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். எங்களின் 7,000 கோடி ரூபாய் சம்பளப் பணத்தை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டுள்ளது. அதைக் கேட்டுதான் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறோம். ஓய்வூதியம் சரிவர வழங்கப்படாததால் சிலர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால், எதைப் பற்றியும் அரசும், போக்குவரத்துக் கழக நிர்வாகமும் கவலைப்படுவதில்லை. நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி சம்பளப் பணத்தைக்கூட கைவைத்துவிட்டது அரசு. எனவே, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநில அரசுகள், போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிவருகிறது. அதுபோல தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அப்போதுதான் நிதிச்சுமையில் தள்ளாடும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பாதிப்பில்லாமல் அரசு பஸ்களை இயக்க முடியும். இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்." என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close