வளைக்கப்படும் வனிதாமணி வாரிசுகள்! - பின்னணி இது தான் | Reason behind Vanitha Mani's Heirs being cornered

வெளியிடப்பட்ட நேரம்: 15:27 (15/05/2017)

கடைசி தொடர்பு:16:14 (15/05/2017)

வளைக்கப்படும் வனிதாமணி வாரிசுகள்! - பின்னணி இது தான்

வனிதாமணியின் மூத்த மகன் தினகரன்

“ 'எழுமுன் வீழ்த்துவோம், அடியோடு அகற்றுவோம்’ என்ற  நிலைப்பாட்டைத்தான் சசிகலா விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ளது. வனிதாமணியின் வாரிசுகள்  மீதான வழக்குகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வேகம் எடுத்திருப்பதன் பின்னணி இதுதான்” என்கிறார்கள் டெல்லி பி.ஜே.பி-க்கு நெருக்கமானவர்கள்.

1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியை மக்கள் ஆட்சி என்று சொல்வதைவிட மன்னர் ஆட்சி என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இருந்தது நிர்வாகம். அந்த ஆட்சியில் இளவரசர்களைப் போன்று வலம் வந்தவர்கள் தான் டி.டி.வி.தினகரன், சுதாகரன், பாஸ்கரன். சசிகலாவுக்கு சிறுவயது முதலே தனது அக்கா வனிதாமணியின் குழந்தைகள் மீது அதீத பாசம் இருந்ததால், கார்டனிலும் ஆட்சியிலும் வனிதாமணியின் பிள்ளைகளுக்கு தனி மரியாதை இருந்தது. அதிகாரத்தின் உச்சத்தில், அவர்கள் அன்று செய்த தவறுதான் 20 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது. 96-ம் ஆண்டுக்குப் பிறகு தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட இந்த வழக்குகள், 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கபட்டு வந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த வழக்குகள் பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்து வருகிறது. சகோதரர்கள் மூவரில் ஒருவர் பெங்களூரு சிறையிலும், இன்னொருவர் திகார் சிறையிலும் இருந்துவருகிறார்கள். பாஸ்கரன் ஒருவர் மட்டுமே வெளியே உலவுகிறார். அவரையும் குறிவைத்து இப்போது அடுத்தடுத்த அஸ்திரங்கள் ஏவப்பட்டு வருகின்றன. 

டி.டி.வி பிரதர்ஸ் மீதான  வழக்குகள் சூடுபிடிக்க காரணமே, தினகரனின் அரசியல் பிரவேசம்தான். அ.தி.மு.க-வின் அதிகார சக்தியாக அவர் உருவெடுத்த சில தினங்களிலேயே, 'அந்நிய செலாவணி மோசடி வழக்கில், டி.டி.வி தினகரன் 28 கோடி ரூபாய்  அபராதம் கட்டவேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதுவே தினகரன் மீதான நெருக்கடிகளின் ஆரம்பமாக பார்க்கப்பட்டது. அதன் முடிவு இப்போது சிறைக் கம்பிகளின் பின்னால் தினகரன் முடக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சுதாகரனுக்கு எழும்பூர் நீதிமன்றமும் வாரன்ட் பிறப்பித்து அதிரடி காட்டியுள்ளது. மற்றொரு சகோதரரான பாஸ்கரன் மீதும் நீதிமன்றத்தின் பிடி இறுகிவருகிறது.

சுதாகரன்.

தினகரன் சகோதரர்கள் மீது மொத்தம் 9 வழக்குகள் உள்ளன. ஜெஜெ டி.வி-க்கு (அப்ளிங் பொருட்கள்) வெளிநாட்டில் இருந்து பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பாஸ்கரன், சசிகலா மற்றும் ஜெ.ஜெ.டி.வி.நிறுவனம் மீது  மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதேபோல் கொடநாடு எஸ்டேட் வாங்கியதில் பாஸ்கரன் மீது தனிவழக்கும்,  சசிகலா மீது தனிவழக்கும் உள்ளன. அதேபோல் லண்டனில் ஹோட்டல் தொடங்குவதற்காக மூன்று போலி நிறுவனங்களைத் தொடங்கி, அந்த நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து முறைகேடாகப் பணம் அனுப்பியதாக தினகரன் மீது தொடுக்கப்பட்டிருந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும், டிப்பர் இன்வென்ஸ்மெண்ட்  நிறுவனத்தில் முறைகேடாக முதலீடு செய்ததற்கான வழக்கும் தினகரன் மீது உள்ளது. நடராஜன், பாஸ்கரன் மீது  லக்ஸஸ் கார் வழக்கு  நீதிமன்ற நிலுவையில் உள்ளது. சூப்பர் டூப்பர் டி.வி நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து பொருட்கள் வாங்கியதில் அந்நியச் செலாவணி மோசடி நடைபெற்றதாக சுதாகரன், தினகரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கு பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளது. இந்த வழக்கில், ஆஜராகாத குற்றத்துக்குத்தான் சுதாகரனுக்கு நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்த அனைத்து வழக்குகளும் பெரா சட்டத்தின் கீழ் வருகின்றன. 

96-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த வழக்குகள் ஒவ்வொன்றாக பதியப்பட்டாலும், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க மீண்டும் ஆட்சிப் பதவிக்கு வந்த பிறகு இந்த வழக்குகள் அனைத்தையும் முடக்கும் முயற்சியில் சசிகலா தரப்பு தீவிரமாக இறங்கியது. அ.தி.மு.க ஆட்சியில் இந்த வழக்குகள் எல்லாம் நிம்மதியாகத் தூங்கின. பின்னர் 2006-க்குப் பிறகுதான் இந்த வழக்குகள் எல்லாம் மீண்டும் தூசி தட்டப்பட்டு அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 20 ஆண்டுகளைக் கடந்த இந்த  வழக்குகள் அனைத்தும், இன்னும் குறுகிய காலத்தில் முடிவுக்கு வர உள்ளன என்கிறார்கள் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள். 

காரணம் இதுதான்...!

தினகரன் சகோதரர்கள் மீதான இந்த வழக்குகள் அனைத்துமே மத்திய அரசின் கீழ் வரும் அமலாக்கத்துறையின் வழக்குகள் என்பதுதான் மத்திய அரசுக்கு பலமாக உள்ளது. அந்நியச் செலாவணி வழக்கில், ஒருவருக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி' அவரால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. இவர்கள் வழக்கில் அப்படி ஒரு முடிவைத்தான் மத்திய அரசு எதிர்பார்க்கிறது. 'சசிகலா குடும்பத்தில் இருந்து ஒருவரும் அ.தி.மு.க-வை இயக்கக்கூடாது' என்ற நிலைப்பாட்டில், மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. அந்த அஜெண்டா படிதான் அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. பாஸ்கரன், சுதாகரன் மீதான வழக்கின் தீர்ப்புகள் கூட இன்னும் ஆறு மாதங்களுக்குள் வந்துவிடும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். ஜெயலலிதா இருந்தவரை 20 ஆண்டுகள் இந்த வழக்கை இழுத்தடித்தவர்களுக்கு இப்போது நீதிமன்றம் காட்டும் கெடுபிடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாநில கட்சிகளுக்கு செக்!

பி.ஜே.பி-யின் அஜெண்டாவில் மாநில அளவிலான கட்சிகள் தனித்துவம் பெறக்கூடாது  என்ற நிலைப்பாடு உள்ளது. இந்தியா முழுவதும் மாநில அளவில், செல்வாக்கு மிக்க கட்சிகள் மீது சிறு குற்றச்சாட்டு எழுந்தாலும் அதனை பூதாகரமாக்க மத்திய அரசு தயாராக உள்ளது. அ.தி.மு.க-வில் எப்படி ஒரு குடும்பம் தலையெடுக்கக் கூடாது என்று நினைக்கிறதோ, அதே நிலைப்பாடுதான் தி.மு.க மீதும் உள்ளது. 2ஜி வழக்கின் விசாரணை  முடிவுக்கு வந்து விரைவில் அதன் தீர்ப்பு வருவதன் பின்னணி காரணமும் அதுதான். பீகாரில் தனி செல்வாக்குமிக்க தலைவராக இருக்கிறார் லாலு. அவர் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கிலும் மீண்டும் சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா சிறையை விட்டு வெளியேற முடியாமல் போனதற்கு காரணமும் இந்த கெடுபிடிகள்தான்.

பாஸ்கரன்

தி.மு.க திட்டமும்... மத்திய அரசு கணக்கும்!

1996-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது, 1,000 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாகக் கூறி தினகரன் மீது ஒரு வழக்கு போடப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் எந்த விசாரணையும் செய்யப்படாமல் பல ஆண்டுகள் கடந்தன. 2007-ம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சியின்போது இந்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. இந்த வழக்குக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாமா? என்ற ஆலோசனையில், தி.மு.க-வின் சட்டத் துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள். 'ஆர்.கே நகர் தேர்தல் எப்போது நடைபெற்றாலும் அங்கு நான் போட்டியிடுவேன்' என்று தினகரன் கூறிய  கருத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்தது. அதனால், தினகரனை முழுவதும் முடக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. அந்நியச் செலாவணி வழக்கில், '28 கோடி ரூபாய் அபராதத் தொகையை தினகரன் செலுத்த வேண்டும்' என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த அபராத தொகைக்காக தினகரன் சொத்தை ஜப்தி செய்யலாம். ஆனால், மத்திய அரசோ தினகரனை 'திவாலானவர்' என்று அறிவித்து, அவரை இனி தேர்தல் களத்திலேயே நிற்க முடியாதவராகச் செய்யும் நோக்கத்தில் உள்ளது. 

உறவுகளுக்கு குறி!

சசிகலா குடும்பத்தில் 4 பேர் தற்போது சிறையில் உள்ளனர். இன்னும் தமிழக ஆட்சி நிர்வாகத்தில், இந்த குடும்பத்தின் தலையீடு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்திருப்பதால், குடும்பத்தில் இருக்கும் பிற உறவுகள் மீதான வழக்குகளையும் வேகப்படுத்துவதோடு, 'வழக்கு சிக்கல் இல்லாமல் இருப்பவர்கள் மீது என்ன செய்யலாம்?' என்ற யோசனையிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது. டெல்லி உளவுத்துறையில், தமிழக அரசியல் நிலவரங்களைக் கண்காணிப்பதற்கே தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்களது பார்வை... இப்போது சசிகலா குடும்பத்தில், முக்கியப் புள்ளிகளாக வலம்வரும் இருவர் மீது திரும்பியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்