’ஜனநாயகத்தை வலுப்படுத்த இது அவசியம்’.. ஆளுநருக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்!

'சட்டப்பேரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட உத்தரவிட வேண்டும்' என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

M.K.Stalin
 

ஜனவரி 23-ம் தேதி தொடங்கிய 15-வது சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை மே 11-ம் தேதியுடன் தமிழக ஆளுநர் இறுதி செய்து வைத்திருப்பது, அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றுள்ள மிக மோசமான ஜனநாயக விரோதச்செயல் என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இதுகுறித்து கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டம்குறித்து நேற்று ஃபேஸ்புக்கில் பதிவுசெய்திருந்த மு.க.ஸ்டாலின், ’தி.மு.க ஆட்சி நடைபெற்றபோது ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டப்பேரவையில் நீண்ட நேர விவாதங்களும், நீண்ட கால கூட்டத்தொடர்களும் நடைபெற்ற வரலாறு உண்டு. உதாரணத்துக்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், கருணாநிதி முதலமைச்சராக இருந்த 1996 முதல் 2001 வரை 365 நாள்களில் 260 நாள்கள் சட்டப்பேரவை நடைபெற்றுள்ளது.

ஆனால் அ.தி.மு.க ஆட்சியில், சட்டப்பேரவையில் விவாதங்களைச் சந்திப்பதையே சங்கடமாகக் கருதி கூட்டத்தொடரைக் குறைப்பது, விவாதங்களை அராஜகமாகச் சுருக்குவது, சட்டமன்ற கூட்டத்தொடரை ஜனநாயக விரோதமாக முன்கூட்டியே இறுதிசெய்வது போன்ற ஜனநாயகத்துக்கு ஒவ்வாத மரபுகளைத் தொடர்ந்து உருவாக்கிவருவது கவலையளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து  ஆளுநருக்கு இன்று கடிதம் எழுதியுள்ள மு.க.ஸ்டாலின், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டப்பேரவை விவாதங்கள் அவசியம். ஆனால், சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டம் விதிகளுக்கு மாறாக இறுதிசெய்யப்பட்டுள்ளது. துறை வாரியான மானியக் கொள்கைகளை விவாதிக்க, சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!