வெளியிடப்பட்ட நேரம்: 14:34 (15/05/2017)

கடைசி தொடர்பு:15:50 (15/05/2017)

போக்குவரத்து வேலை நிறுத்தம் : அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி முக்கிய உத்தரவு!

13-வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து,நேற்று முதலே வேலை நிறுத்தம் தொடங்கிவிட்டதைக் கடிதம் மூலமாக அமைச்சரிடம் தெரிவிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் சென்றனர். கடிதத்தை வாங்க மறுத்த விஜயபாஸ்கர், மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். 


இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.  தங்களது கோரிக்கையை நிறைவேற்ற அரசு உறுதி அளிக்காததால், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. 


நேற்று அறிவித்தபடி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. அரசுப் பேருந்துகள்  இயங்காததால், மக்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோக்களைத் தேடிச்செல்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்துவருகின்றனர்.


இந்நிலையில், வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர் நலத் துணை ஆணையர் யாசின் பேகம் அழைப்பு விடுத்துள்ளார். 

Edappadi Palanisamy


இதையடுத்து, இன்று மதியம் 3.30 மணிக்கு முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.  இந்தப் பேச்சுவார்த்தையில், போக்குவரத்துச் சங்கங்கள், போக்குவரத்துத்துறை அமைச்சகம், தொழிலாளர் நலத்துறை ஆகியவை கலந்துகொள்கின்றன.


இந்நிலையில், இந்தப் பிரச்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, போக்குவரத்துத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை தலைமைச் செயலகத்தில், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து ஆலோனை நடத்த உள்ளார்.


இதற்கிடையே, அமைச்சர்களை அவர்களது மாவட்டங்களுக்குச் சென்று, போக்குவரத்தைச் சீர்செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.