வந்தியத் தேவன் வழித்தடம் தேடி பயணம் செய்த நான்கு பெண்கள்! | Four ladies who traveled in search of Vandhiya Devan pathway!

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (15/05/2017)

கடைசி தொடர்பு:10:41 (16/05/2017)

வந்தியத் தேவன் வழித்தடம் தேடி பயணம் செய்த நான்கு பெண்கள்!

பெண்களுக்குப் பருவமெய்தும் வயது வரும்; திருமண வயது வரும்; குழந்தை பெறும் வயது வரும்; பேரன், பேத்தி எடுக்கும் வயது வரும். ஆனால், இந்தச் சமூகத்தைப் பொறுத்தவரை... எப்போதும் தனித்துப் பயணம் செய்யும் வயது மட்டும் வரவே வராது! இந்தச் சூழலில்தான், தங்களின் மனதுக்குப் பிரியமான, கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலின் நாயகன் வந்தியத் தேவன் வழித்தடம் தேடி, நான்கு பெண்கள் பயணித்துத் திரும்பியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த நித்யா, தீபா, ஜெயபிரியா மற்றும் ஸ்ரீபத்மாவுக்கு என்ன கிடைத்தது இந்தப் பயணத்தில்?!

வந்தியத் தேவன்

''நாங்கள் நால்வரும் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள். எங்களை இணைத்தது, ‘ஸ்மார்ட் மம்மீஸ்' என்ற ஃபேஸ்புக் குரூப். இதில் பேரன்ட்டிங் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு விவாதிப்போம். அப்படியான கலந்துரையாடலில் நால்வரும் ‘பொன்னியின் செல்வன்’ நாவலின்  காதலிகள் என்ற புள்ளியில் ஒன்றிணைந்தோம். அந்தக் கதையின் தெவிட்டாத தேன்சுவை பற்றிப் பேசிப் பேசிக் களிப்போம். நாவலின் நாயகன் வந்தியத்தேவன் தன் பயணத்தைத் தொடங்கிய வீராணம் ஏரி முதல்  ஓலையை வழங்கும் கோடியக்கரை வரை ஒவ்வொரு இடத்தையும் கண் முன் பார்ப்பதுபோல வர்ணித்திருப்பார் கல்கி.  'நாம் ஏன் அந்த இடங்களுக்கெல்லாம் சென்று வரக்கூடாது?' என  திடீரென எங்களுக்குத் தோன்ற, அதற்காகத் திட்டமிட்டோம்'' என்று சொல்லும்  ஸ்ரீபத்மாதான் இந்த ட்ரிப்புக்குத் தலைமை.

''மொத்தம் நான்கு நாட்கள் சுற்றுலா அது. நான்கு பேரும் ஒரு காரில் ட்ராவலைத் தொடங்கினோம்'' - கண்கள் அகல பயண மணித்துளிகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் நித்யா... ''வந்தியத்தேவன் வீராணத்தில் இருந்து தஞ்சாவூர் பயணிப்பான். குந்தவை தேவியையும், சுந்தரச் சோழனையும் பார்க்கப் போவான். வீராணம் ஏரிக்கரையில் செல்லும்போது ஏரி கடல் போல அலை அலையாக எழுந்தது; 74 கால்வாய்கள் மூலம் அந்தத் தண்ணீர் பாசனத்துக்குச் சென்றது என்று எழுதியிருப்பார் கல்கி. வீராணம் ஏரியை வீரநாராயணர் ஏரி என்றே கல்கி விவரித்திருப்பார். பின் குறிப்பில்தான் அதை வீராணம் ஏரி என்று சொல்வார். வீராணம் ஏரியைத் தற்போது பார்த்தபோது, வறண்ட பாலைவனம்போல் இருந்தது. அந்த ஏமாற்றம், வருத்தத்தையும் மீறி, கல்கியின் எழுத்துகளை அப்படியே மனதில்கொண்டு வந்து, கற்பனையில் அங்கு தண்ணீர் தளும்பச் செய்து பார்த்து ரசித்தோம். அதுதான் அவர் பேனாவின் வலிமை'' எனும்போது சில்லிடுகிறது நித்யாவுக்கு.

வந்தியத் தேவன்

''அடுத்து, சம்புவரையர் இறந்த இடமான கடம்பூர் சென்றோம்'' என்ற தீபா, ''வந்தியத்தேவன் அந்த மாளிகையில்தான் தங்கிவிட்டுப் போனதாக கல்கி எழுதியிருப்பார். தற்போது அந்த மாளிகை அழிந்துவிட்டது. அருகில் உள்ள சிவன் கோயிலைத் திறக்க வேண்டிக் கேட்டு வழிபட்டோம். கல்கி எழுதியிருந்ததுபோல அக்கோயிலில் சுரங்கப்பாதை இருந்ததைக் கண்டதும் மனதில் சட்டென ஒரு பரவசம், சந்தோஷம்'' என்ற தீபா, மனதின் உற்சாகத்தைச் சொல்ல மொழி சிக்காமல் திணறித் தொடர்ந்தார்...

''வந்தியத்தேவன் பயணம் செய்த இடங்களோடு, சோழர்கள் வாழ்ந்த இடங்களையும் பார்த்தோம். கடம்பூர் செல்லும்போது மாளிகை மேடு மற்றும் ராஜராஜசோழனின் மாளிகையில் எஞ்சி இருந்த பகுதியைப் பார்த்தோம். சிதிலமடைந்து போய் இருந்தது. தொல்லியல் துறை இந்தப் பொக்கிஷத்தைப் பாதுகாத்தால் வருங்கால சந்ததிக்கு பெருமைமிகு ஒரு வரலாற்றுச் சுவடு கிடைக்குமே என்று ஆதங்கமாக இருந்தது. பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் சென்றோம். இது 'பொன்னியின் செல்வ'னில் இடம்பெறவில்லை என்றாலும், அதன் எழிலால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கு சுற்றிவந்தோம். முதல் நாள் பயணம் கும்பகோணத்தில் நிறைவடைந்தது.

வந்தியத் தேவன்

இரண்டாம் நாள் பழுவூருக்குச் சென்றோம். பழுவேட்டையர்கள், நாவலில் வரும் முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்கள் வாழ்ந்த இடத்தைப் பார்த்தபோது, 'பொன்னியின் செல்வன்' நாவலில்  நாங்களும் ஒரு பகுதியானதுபோன்ற நிறைவு ஏற்பட்டது. பழுவூரில் பழுவேட்டையர் கட்டிய இரட்டைக் கோயிலைப் பார்த்தோம். அதன் கட்டடக்கலை எங்களைப் பிரமிக்க வைத்தது. சின்னக் கோயில்தான் என்றாலும் அவ்வளவு நுணுக்கமாக வேலைப்பாடுகள்!'' - தீபாவுக்கு அந்த ஆச்சர்யமும் ஆனந்தமும் இன்னும் விலகவில்லை. 

''அடுத்ததாக நாங்கள் சென்றது... ராஜராஜசோழனின் சமாதி'' என்று உற்சாகமாகச் சொன்ன ஜெயபிரியா, அடுத்த நொடியே ஸ்ருதி இழந்து... ''ஆனால், அது தெருவோரக் கோயில் போல அதற்குரிய சிறப்பு, முக்கியத்துவம் கிடைக்கப்பெறாமல் நின்றிருந்ததைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது. அவ்வளவு பெரிய அரசனுக்கே இறுதி மரியாதை இதுதான் எனும்போது, மனித வாழ்வின் நிலையாமை ஒரு முறை மனதில் மின்னலாக வெட்டி இறங்கியது.  என்று பெருமூச்சுடன் சொன்ன  ஜெயபிரியாவைத் தொடர்ந்தார் ஸ்ரீபத்மா...

வந்தியத் தேவன்

''தஞ்சாவூரில் உள்ள சோழர் குலதெய்வமான நிசும்ப சூதனி கோயிலுக்குச் சென்றோம். அதுவும் தெருமுனைக் கோயில் போல பராமரிப்பின்றிதான் இருந்தது. சோழர்கள் போருக்குச் செல்வதற்கு முன் இக்கோயிலில்தான் உத்தரவு வாங்கிச் செல்வர் எனப் படித்திருக்கிறோம். சரித்திர நாவல் படிப்பவர்களுக்கு அந்தக் காட்சி வருத்தமாகத்தான் இருக்கும். இறுதியாக, வந்தியத்தேவன் பயணத்தை நிறைவு செய்த கோடியக்கரைக்குச் சென்றோம். எங்கள் பாதங்கள் இதுவரை உணராத ஒரு பரவசத்தை அந்த மண் தந்தது'' என்றவர் இறுதியாகச் சொன்னார்... 

''10, 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னன் அருள்மொழிவர்மனின் வாழ்க்கையை, தன் மூன்றரை ஆண்டு கால உழைப்பில் அச்சில் வார்த்த 20-ம் நூற்றாண்டு எழுத்தாளர் கல்கியின் பேனா வீச்சு, 21-ம் நூற்றாண்டுப் பெண்களான எங்களுக்கு அளவற்ற மகிழ்வும் சிலிர்ப்பும் தருகிறது. இந்த எழுத்தின் வீச்சு, யுகங்கள் தாண்டியும் நிற்கும்!"

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close