திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உருவ பொம்மை எரிப்பு!

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டுள்ளது. 

rsyf

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நடத்த  திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அண்மைக் காலங்களில் மோகன் பகவத்தான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேசிவருகின்றனர். இதனிடையே அவரின் வருகையை எதிர்த்து புரட்சிகர மாணவர்கள் மற்றும் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மோகன் பகவத்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

இது குறித்து புரட்சிகர இளைஞர் முன்னணியின் மாவட்டச் செயலாளர் விஜய் கூறுகையில்,' ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமுக்கு வந்திருக்கும் மோகன் பகவத்துக்கு இசட் பிளஸ்(Z+) பிரிவு பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி பொது மக்கள் தேவையில்லாத சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் மோசமான அரசியல் சூழல் இருக்கும் நிலையில், மோகன் பகவத்தின் வருகை தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும். மேலும் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து உருவ பொம்மை எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!