வெளியிடப்பட்ட நேரம்: 16:28 (15/05/2017)

கடைசி தொடர்பு:17:04 (15/05/2017)

’மெட்ரோ ரயிலுக்காக ஜப்பான் சென்றது நான்தான்’... அ.தி.மு.கவுக்கு ஸ்டாலின் பதிலடி

மெட்ரோ ரயில் திட்டம் தி.மு.க-வின் பிள்ளை என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் உணர வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

M.K.Stalin
 

சென்னை மெட்ரோ ரயில் சேவை கலைஞரின் கனவுத் திட்டம் என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான முதல்வர் பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆகியோரின் கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று தி.மு.க செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

“முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில் திட்டத் தொடக்கவிழாவில் பேசியிருப்பதற்கு தி.மு.க சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்பப் பொய் சொல்வோம் என்பதுபோல் இருக்கிறது முதல்வர் பேச்சு.

கலைஞரின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, ‘ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்’ என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் அரசு விழாவில் அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.

2006 முதல் 2011 வரை திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 7.11.2007 அன்று நடைபெற்ற 23வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகளை திமுக அரசுதான் தீவிரமாக மேற்கொண்டது. நானே பலமுறை அப்பணிகளைப் பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

அந்தவகையில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் கழக அரசின் முதற்கட்ட வெற்றிதான் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலும், இப்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயிலும் என்பதை முதலமைச்சருக்கு மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட நிதிக்காக கலைஞரின் ஆணைப்படி ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, ஜப்பான் கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்தேன். இதுபோன்ற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு மற்ற மாநிலங்கள் இரண்டரை வருடத்திற்கும் மேலாகப் போராடிக்கொண்டிருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி 12 மாதத்தில் பெறப்பட்டது எங்கள் சாதனை.

அதன்பிறகு, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 28.1.2009 அன்று தமிழக அரசு அளித்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியளித்தது. கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மேல்மட்ட ரயில் பாலம் அமைக்க 13.2.2009 அன்று முதல் டெண்டர் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் முதல் மின்மயமாக்கல் பணிகள் வரை 9 டெண்டர்கள் திமுக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன.

நிலைமை இவ்வாறிருக்க, மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று இலைச்சோற்றில் முழுப் பூசணிக்காயை மறைப்பது போல் கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். முதலமைச்சராவது புதிதாகப் பொறுப்பேற்றவர். அ.தி.மு.க.விற்குள் நடைபெற்ற அணிப் போட்டியில் தற்காலிகமாக அந்தப் பதவிக்கு வந்திருப்பவர்.

ஆனால், அந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடுவும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அனுபவமிக்க மத்திய அமைச்சர் ஒருவர் அரசு விழாவில் பங்கேற்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது.

மெட்ரோ ரயில் வேண்டாம். நாங்கள் மோனோ ரயில் விடப்போகிறோம் என்று கூறி, இரு வருடங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததை மத்திய அமைச்சர் முழுமையாக மறைத்து, அதிமுக வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க நினைக்கலாம். ஆனால், உண்மைக்குப் புறம்பான தகவலை ஓர் அரசு விழாவில் வெளியிடுவது மிகத் தவறானது என்பதை மத்திய அமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குக் கொடுத்தார்கள் என்று வருமான வரித்துறை அளித்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முதலமைச்சருடன் விழா மேடையில் பங்கேற்றதுடன், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை, நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புகழாரம் சூட்டியிருப்பது ஊழல் விஷயத்தில் பா.ஜ.க.வின் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ஊழல் ஒழிப்பு எங்கள் உயிர் மூச்சு என்று பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கும் பா.ஜ.க. மாநிலத்திற்கு மாநிலம் ஊழலில் சிக்கியவர்கள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை எடுப்பது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், பீகார், ஹரியானா போன்ற மாநிலங்களில் ஊழல் எதிர்ப்பு, தமிழகத்தில் அதிமுக ஊழலுக்கு அரவணைப்பு என்ற பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் ஊருக்கே அம்பலமாகிவிட்டது.

மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக செய்யப்பட்ட பணிகள், சென்னை மாநகரின் போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்காகக் கட்டப்பட்ட மேம்பாலங்கள், தமிழக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக திமுக எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மலை போன்ற சாட்சியங்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. அதிமுக முதலமைச்சரும், பா.ஜ.க. மத்திய அமைச்சரும் கூட்டணி அமைத்துக்கொண்டு, இப்படி திமுகவிற்கு எதிராகச் செய்துள்ள ஆரோக்கியமற்ற விமர்சனத்தால் மக்கள் மத்தியில் கலைஞருக்கும் திமுகவுக்கும் உள்ள செல்வாக்கை இம்மியளவுகூடக் குறைக்க முடியாது.

இனியாவது அதிமுக, பெற்று எடுக்காத பிள்ளைக்குப் பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்” இவ்வாறு தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க