Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வேகம் பிடிக்கும் தேர்தல் கூட்டணி... பி.ஜே.பி அணியில் ஓ.பி.எஸ், கேப்டன், வாசன்!

                              ம.ந.கூட்டணியில் கேப்டன் விஜயகாந்த் கலந்த போது...      

'பொதுத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.' என்ற பரபரப்புக்குள்ளேயே தமிழக அரசியல் ஓடிக்கொண்டிருக்கிறது. 'உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாகவே பொதுத்தேர்தல் வந்து விடும், எடப்பாடி அரசு தானாகவே கவிழும்' என்கிறார் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் டாக்டர் வி.மைத்ரேயன் எம்.பி. 'சசிகலா அணியில் இருக்கும் 122 எம்.எல்.ஏ-க்கள் என்பது வெறும் நம்பர்தான், ஒன்றரைக்கோடி தொண்டர்கள் இருப்பது எங்களிடம்தான்' என்று  சொல்லி கேலி செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம். மீண்டும் ஒரு 'நமக்கு நாமே' திட்டம் போல் மக்கள் பிரச்னைகளை முன்வைத்து களத்தில் வேகமாக இறங்கியுள்ளது தி.மு.க. 'அதிகமான தெருமுனைக் கூட்டங்களைப் போடுங்கள். அதில், மக்கள் பிரச்னையை மட்டுமே முன்னிறுத்திப் பேசுங்கள். என்பதுதான் தளபதி ஸ்டாலின் உத்தரவு' என்று சொல்லி உ.பி.க்கள் நெகிழ்கிறார்கள். எப்போதுமே தேர்தல், அருகில் நெருங்குவது போல் ஒரு  தோற்றம் ஏற்பட்டால், 'யார்... யாருடன் இணைவார்கள்?' என்ற 'கூட்டணி ரகசியம்' அக்கட்சிகளின் தொண்டர்கள் மூலமாகவே வெளியில் கசியத் தொடங்கிவிடும். அந்த வகையில், பி.ஜே.பி, தே.மு.தி.க., ஓ.பி.எஸ். அணியின் தொண்டர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளது அப்பட்டமாகத் தெரிகிறது. பி.ஜே.பி, ஓ.பி.எஸ் அணியினரோ, " 'சமாதிக்குப் போய் உட்கார்ந்ததும் ஏதோ புதிதாய் ஞானம் வந்தது போல் அனைத்தையும்  ஓ.பி.எஸ். மறைக்க நினைக்கிறார்' என்று  ஓ.பன்னீர்செல்வத்தை பிரேமலதா விமர்சிப்பதையும், தமிழிசை விமர்சிப்பதையும் மிகவும் சாதாரணமாகவே நாங்கள் பார்க்கிறோம். இதையெல்லாம் கடந்த ஒரு பரஸ்பர புரிதல் எங்களுக்குள் இருக்கிறது. இப்படி தமிழிசை பேசுவதும், பிரேமலதா பேசுவதும்கூட அரசியல்தான்" என்கிறார்கள்.

                                           நேற்றைய முதல்வர் ஓ.பி.எஸ்., இன்றைய முதல்வர் எடப்பாடி ஒன்றாய்...                                        'சட்டசபையில் வேட்டியை மடித்துக்கொண்டு நாக்கைத் துருத்தியபடி பாய்ந்தது, பிரசாரத்தின் போது வேட்பாளரை பொது இடத்திலேயே அடித்தது, விமானநிலைய வளாகத்தில் செய்தியாளரைத் தாக்கியது' என்று எப்போதும் பரபரப்பின் உச்சத்திலேயே இருந்த விஜயகாந்த், மிகக் குறுகிய காலத்திலேயே தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்க் கட்சித்தலைவர் பதவியையும் கைப்பற்றி அனைவரையும் வியக்க வைத்தவர். முன்புபோல அவரால் இப்போது வேகமாகப் பேசமுடியவில்லை என்பதுதான் ஒரு குறையாக இருக்கிறது.  'தே.மு.தி.க தரப்பில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்' என்ற கேள்வியுடன் ஆதரவாளர்களிடம் பேசியபோது, "கேப்டன் மிக விரைவில் வெளிநாட்டு வைத்தியத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டு அரசியலை கலக்கப் போகிறார். அதுவரை, கேப்டனின் மனைவி பிரேமலதா கட்சியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்தத் தயாராகி விட்டார். தொடர்ந்து மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் போகிறார். அங்கே தொண்டர்களைச் சந்தித்துப்பேசி அவர்களின் மனநிலையை அறிகிறார். இனி மிகப்பெரிய மாற்றத்தைத் தமிழக அரசியலில் பார்க்கத்தான் போகிறீர்கள்..." என்றனர். ஒரு கட்டத்தில் தே.மு.தி.க. இணைப்பில் வர, கூட்டணியின் பெயரே, தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணி என்று மாறியது. பின்னர் கூட்டணிக்கு வித்திட்ட  வைகோ-வின் ம.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் இல்லாத கூட்டணியாக  அது இன்னும்  சுருங்கியிருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது அது இன்னும் சுருங்கி மக்கள் நலக் கூட்டியக்கமாக மாறியது. 'சி.பி.எம் களம் காண்பது அவர்களின் தனிப்பட்ட முடிவு' என்று சி.பி.ஐ. கட்சியும், விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்.கே நகர்த் தொகுதியில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டன. கடைசி நேரத்தில், இந்த அணிக்குள் வந்த ஜி.கே.வாசனின் த.மா.கா, இப்போது அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ். அணியில் எதிர்கால கூட்டணி உத்தரவாதத்தோடு இணைந்திருக்கிறது. சசிகலா, தினகரன்  கைது செய்யப்பட்ட விவகாரத்தில், 'அவர்கள் மீதான கைது  நடவடிக்கையை மேற்கொண்ட விதம் தவறு'  என்று தொடக்கம் முதலே எதிர்க் குரல் எழுப்பி வந்தவர் தொல்.திருமா.  அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலிலோ, பொதுத்தேர்தலிலோ  திருமா, எந்தப் பக்கம் இணைவார் என்பதும் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத ஒன்று.

தி.மு.க கூட்டணிக்குள் புதிதாக இடது சாரிகளும், பழையபடியே காங்கிரசும்  கூட்டணியைத் தொடரலாம் என்கிற நிலை காணப்படுகிறது. 'பி.ஜே.பி-யுடன் ஓ.பி.எஸ் அணி நெருக்கமாக இருக்கிறது. ஓ.பி.எஸ் அணியை பி.ஜே.பி-தான் இயக்குகிறது' என்றே அனைத்துக் கட்சிகளும் விமர்சிக்கின்றன. ஆனால், சசிகலா அணி மட்டும் அந்த விமர்சனத்தை வைக்கத் தயாராக இல்லை. மாறாக, 'பி.ஜே.பி-யுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டாம்' என்றுதான் சசிகலா அணியின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சொன்னதாக தகவல்கள் வெளியாகின. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை மறுத்தாலும், பி.ஜே.பி-யின் மூலம் என்று கருதப்படும், ஆர்.எஸ்.எஸ் இயக்கப் பணிகளுக்கான விதையைத் தமிழகத்தில்  ஊன்ற மிகப் பரந்த 'திராவிட' மனதோடு  வழி விட்டிருக்கிறார். அதற்கு உதாரணம் கீழ்க்கண்ட நிகழ்வுதான்...தர்மபுரி பேருந்து நிலையத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை  மே, 13-ம் தேதி, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மேற்கொண்டது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், இந்தப்பணியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேடையில் மைக் பிடித்து, 'ஆர்.எஸ்.எஸ் போல  மக்கள் நலனுக்காகப் பாடுபடும்  மக்கள்  இயக்கப் பணியை பாராட்டாமல் இருக்கமுடியாது' என்று புகழ்ந்தும் பேசியிருக்கிறார். 2017-ன் தொடக்கத்தில், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, சென்னையில், போலீசார் பயிற்சிபெறும் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகிலிருந்து ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. முதன்முறையாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்தப் பேரணிக்கு அனுமதி கொடுத்தவர் என்ற பெருமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு.  இப்போது, சசிகலா அணியைச் சேர்ந்த அமைச்சர் கே.பி.அன்பழகன், அதேபணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆசிர்வாதத்தோடு, தர்மபுரியில் செய்து முடித்திருக்கிறார். 

"யாருடன் கூட்டணி என்ற முடிவை சூழ்நிலையை வைத்து தீர்மானிக்கும்  திட்டத்துடன் சசிகலா அணி காய் நகர்த்தி வருகிறது... இப்போதைக்கு அது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் நகர்வாகவே இருக்கிறது... அதே வேளையில், பி.ஜே.பி.யும், ஓ.பன்னீர்செல்வம் அணியை இழக்கத் தயாராக இல்லை. ஓ.பி.எஸ். அணியுடன் சுமூக உறவில் தே.மு.தி.க. இருப்பதாலும், ஏற்கெனவே ஓ.பி.எஸ். அணியில் த.மா.கா. இருப்பதாலும் இந்தக் கூட்டணியே பலமானது என்று பி.ஜே.பி.கருதுகிறது. சென்னை மெட்ரோ ரயில் திறப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, அந்த விழாவில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசை ஆஹோ, ஓஹோ என்று எந்த இடத்திலும் பாராட்டவில்லை... மாறாக, தமிழக அரசை இடித்துக் காட்டுவது போல்தான் விழாவில் பேசியிருக்கிறார்... பி.ஜே.பி.யின் தேசிய நீரோட்டத்தில் கலக்க தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளோடு அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணியும் தயார்நிலையில் இருப்பதாகவே 'கமலாலய' வட்டாரம் தெரிவிக்கிறது.  சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வின் இன்னொரு அணியோ, அப்படியொரு நிலையே வராமல் இருக்க எங்கே 'சரண்டர்' ஆக வேண்டுமோ அதை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது " என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்! மொத்தத்தில் தாகத்தில் இருக்கும் மக்கள் தண்ணீர்ப்பந்தலை நோக்கி ஓடுவதுபோல் அ.தி.மு.க-வின் இரு அணிகளுக்கும் இப்போதைக்குத் தண்ணீர்ப் பந்தலாய் காட்சியளிக்கிறது பி.ஜே.பி! தேர்தல் வருமா, வராதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close