வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (15/05/2017)

கடைசி தொடர்பு:08:19 (16/05/2017)

வெறிச்சோடியது கோவை... தனியார் பேருந்தை சிறைப்பிடித்த பயணிகள்!

கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்

தென்னவோ தெரியவில்லை! அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்தை வேகமாக ஓட்டுகிறார்களோ என்னவோ.? ஏதேனும் அறிவிப்பு வந்தால் உடனடியாக செயல்படுத்தி மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிடுகிறார்கள். 

500, 1000 ரூபாய் நோட்டுகள் நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்ற மோடி அறிவித்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் பல அரசுப் பேருந்துகளில் 500,1000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து பயணிகளை படுத்தி எடுத்தார்கள். இப்போது,  இன்று காலை முதல் அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தை நேற்று இரவே செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ஊழியர்கள். வெளியூரில் இருந்தவர்களெல்லாம் விடிவதற்குள் வீடு போய்விடலாம்  என்று பதறியடித்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டுக்கு வந்தால்  இரவில் ஈ ஓட்டிக்கொண்டிருந்தன  பல பேருந்து நிலையங்கள். இதனால் பயணிகள் கடும்கோபத்துக்குள்ளானார்கள். வழக்கம்போல பல தனியார் பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்துக் கொண்டாட்டம் போட்டார்கள். 

கோயம்புத்தூரில்  இந்தச் சந்தர்ப்பத்தைப்  பயன்படுத்தி பல பேருந்துகள் அதிகக் கட்டணம்  வசூலித்தன. அப்படி அதிகக் கட்டணம் வசூலித்த பேருந்துகளில் ஒன்றான  சித்ராவிலிருந்து மதுக்கரை வரை சென்று திரும்பக்கூடிய ஸ்ரீகுமரன் என்ற தனியார் பேருந்தை கோவை ரயில் நிலையம் அருகில் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறைபிடித்தனர். இதனால்,  பேருந்து நடத்துநருக்கும் பயணிகளுக்கும் இடையில்  பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்துக்குமேல் தாங்கிக்கொள்ள முடியாமல்  அந்த பேருந்தின் மீது அதிகக் கட்டணம் வசூலித்ததாக  போலீஸில் புகார் கொடுத்தார்கள். உடனடியாக அங்கு  வந்த போலீஸார் அந்தப் பேருந்தை  பறிமுதல் செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். கோயம்புத்தூரிலும் நேற்று இரவு முதலே பல பேருந்துகள் இயக்கப்படாமல் டிப்போவுக்கு திருப்பப்பட்டன. கோடைகால சுற்றுலாவுக்காக கோயம்புத்தூருக்கு வந்த பயணிகள் வீடு திரும்ப வழிதெரியாமல் தவித்தார்கள்.  இன்று காலை வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கினாலும் கூட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்  மட்டும் வேலை நிறுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பேருந்துகளை இயக்கினார்கள்.  கோவை கோட்டத்தில் மொத்தம் உள்ள 2571 பேருந்துகளில் 1295 பேருந்துகள் மட்டுமே இன்று இயங்கின. பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. இந்த பேருந்துகளில்  தற்காலிகமாக 101 தனியார் டிரைவர்கள்  பயன்படுத்தப்பட்டார்கள். கோவை மாவட்டத்தில்  மொத்தம் 1400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில்  500க்கும் குறைவான பேருந்துகளே இன்று இயங்கின. அதனால் போக்குவரத்து இல்லாமல் கோவை நகர மக்கள் தனியார் பேருந்துகளுக்காக தவம் கிடக்க வேண்டியதாக இருந்தது. இயங்கிய 500க்கும் குறைவான பேருந்துகளில்  35 தற்காலிக தனியார் ஓட்டுநர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். 

கோவை பேருந்துகள்

கோயம்புத்தூரில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களின் மூலம் இயக்கப்பட்ட பல பேருந்துகளை மற்ற சங்கத்தினர் வெவ்வேறு இடங்களில் மறித்து, “உங்களுக்கும் சேர்த்துதான்யா போராடுறோம். நாம எல்லாரும் சேர்ந்து போராடுனாதான்யா நமக்குத் தேவையானது கிடைக்கும். நாமளே ஒத்துமையா போராடலைன்னா அரசாங்கம் எப்படியா நம்ம கோரிக்கைகளை நிறைவேத்தும்?’’ என்று அட்வைஸ் கொடுத்து பேருந்துகளை டிப்போவுக்கு திருப்பி அனுப்பினர். டிப்போ அதிகாரிகள் பேருந்துகளை உள்ளே விடாமல் இருக்க அலெர்ட்டாக கேட்டை மூடி வைத்திருந்தனர். இதைக்கேள்விப்பட்ட மற்ற சங்கத்தினர் டிப்போவுக்கு விரைந்து வந்து  கோஷம் போட்டு திரும்பி வந்த பேருந்துகளை டிப்போவுக்குள் அடைத்தார்கள்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்