வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (16/05/2017)

கடைசி தொடர்பு:11:30 (16/05/2017)

எடப்பாடி பழனிசாமி அரசைக் காக்கும் ஜூலை 19? - சசிகலா குடும்பத்தின் சீக்ரெட் பிளான்

சசிகலா

ந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. 'பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை முன்னிறுத்தும் வேலைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு நீண்டு கொண்டிருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக மட்டும்தான். அதன்பிறகு பா.ஜ.கவின் நடவடிக்கைகள் வேகம் பெறும்' என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். 

‘பணம் சம்பாதிக்கும் எண்ணம் உடையவர்களை என் பக்கத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என நேற்று ரசிகர்களிடம் மனம் திறந்தார் ரஜினிகாந்த். ‘இது அவருடைய வழக்கமான உரைதான்' என அரசியல் மட்டத்தில் பேசப்பட்டது. "பாம்பு சூழ்ந்த பூமிப் பந்தின் நடுவில் தாமரை மலரைத் தாங்கும் பாபா முத்திரையை இடம் பெறச் செய்தார். இந்தமுறை அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். இதற்கு முந்தைய காலகட்டங்களில் அவர் தயங்கியதற்குக் காரணம், 'தன்னுடைய படங்களுக்கு ஆட்சியாளர்களால் சிக்கல் வரலாம்' என்பதால்தான். தற்போது தமிழக அரசியலில் சொல்லிக் கொள்ளும்படியான ஆளுமைகள் யாரும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசுகளும் இல்லை. தமிழக அரசும் பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றுவதால் பா.ஜ.கவுக்குக் கிடைக்கும் ஒரே லாபம் குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் மட்டும்தான். அதன்பிறகு, தங்களை நிலைநாட்டிக் கொள்ள பொதுவான ஒரு தலைமையை தேடிக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. இதுகுறித்து ரஜினிகாந்திடம் விரிவாக விவாதித்துள்ளனர். ‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதராகத்தான் மக்கள் உங்களைப் பார்க்கிறார்கள். நீங்கள் சம்மதித்தால் போதும். மற்ற விவகாரங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என உறுதியளித்துள்ளனர். 'ஒருவேளை அப்படி ஒரு வாய்ப்பு வந்தால், எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும்?' என்பதை அறிவதற்காகவே நேற்று முன்னோட்டம் நடத்தினார். நாடு முழுவதும் ஒரு விவாதத்தையும் அவர் தொடங்கி வைத்துவிட்டார். 'இது அவருடைய 2.0 படத்துக்கான முன்னோட்டமா? அரசியலுக்கான வெள்ளோட்டமா?' என்பதெல்லாம் ஜூலை மாதம் நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

எடப்பாடி பழனிசாமி"எடப்பாடி பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒரே தட்டில் வைத்துத்தான் பார்க்கிறார் பிரதமர் மோடி. 'சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கக் கூடாது' என்பதற்காகத்தான் கடந்த ஐந்து மாதங்களில் நூற்றுக்கணக்கான ரெய்டுகள் நடத்தப்பட்டன. சேகர் ரெட்டி உள்பட கார்டனுக்கு நெருக்கமானவர்கள் மீது நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டன. 'இதன் நீட்சியாக அமைச்சர்கள் மீதும் வழக்குகள் பாயும்' என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த நடவடிக்கைகளும் வேகம் எடுக்கவில்லை. சி.பி.ஐ விசாரணைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தாலும், நிதித்துறை அமைச்சகம் மௌனம் சாதித்தது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் பணம் விநியோகிக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி உள்பட ஏழு முக்கிய அமைச்சர்கள் மீது விரலை நீட்டியது வருமான வரித்துறை. இதையே ஒரு காரணமாக வைத்துக் கொண்டு, தமிழக அமைச்சரவையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது டெல்லி" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"சசிகலா குடும்பத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் டெல்லி பா.ஜ.கவின் திட்டம். சசிகலாவும் தினகரனும் சிறையில் இருந்தாலும், அவர்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கணிசமான அளவு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். ஆட்சியைக் கவிழ்க்க இந்த எண்ணிக்கை போதும். இதை அறிந்து, அவர்களையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சி லகானை செலுத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. வரும் ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாளையொட்டி நடக்கும் வைரவிழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில், இப்படியொரு விழா நடத்தப்படுவதை உன்னிப்பாக கவனிக்கிறார் பிரதமர் மோடி. ' பா.ஜ.கவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த இந்தக் கூட்டத்தை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்ற தகவலும் டெல்லிக்குச் சென்று சேர்ந்துள்ளது. இந்தநேரத்தில், 'காங்கிரஸ் முன்னிறுத்தும் பொதுவேட்பாளரை நாம் ஆதரித்தால் என்ன?' என்ற கேள்வியும் சசிகலா குடும்பத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

' தொடர்ச்சியான வழக்குகளால் நம்மை அழிக்க நினைக்கின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கின் ரிவியூ மனுவுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. காலமெல்லாம் நாம் சிறையில் இருப்பதைத்தான் டெல்லி விரும்புகிறது. நம்முடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் காங்கிரஸ் நிறுத்தும் பொதுவேட்பாளரை ஆதரித்தால், அகில இந்திய அளவில் நமக்கு ஆதரவு கிடைக்கும். இப்படியொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் விவாதித்துள்ளனர். இதற்குப் பதில் கொடுத்த குடும்ப உறவு ஒருவர், 'தினகரன் காவலை மே 29 வரையில் நீட்டித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்ததால்தான், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிராக ரிவியூ மனுவையே தாக்கல் செய்தோம். காங்கிரஸ் நிர்வாகிகளுடன் இணக்கமாக இருந்ததால்தான் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டோம். தற்போது காங்கிரஸ் நம்முடன் நெருக்கமாக இல்லை. எனவே, நமக்கு எந்தச் சிக்கலும் இல்லை. இன்னும் சில நாள்கள் பொறுத்திருப்போம்' என சமாதானம் செய்திருக்கிறார். 'வரும் ஜூலை 19 அன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கலாம்' என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுவரையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எந்தவிதச் சிக்கலும் இருக்கப் போவதில்லை" என்றார் விரிவாக. 

'மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும்' எனக் கோரிக்கை வைத்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின். எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கும் இன்று அவசர அழைப்பு விடுத்திருக்கிறார். 'ரஜினிகாந்தின் பேச்சும் பா.ஜ.கவின் செயல் திட்டமும் இன்னும் சில மாதங்களுக்கு தமிழகத்தை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதையே காட்டுகிறது' என்கின்றனர் அரசியல் பிரமுகர்கள்.


டிரெண்டிங் @ விகடன்